சனி, 23 ஜனவரி, 2010

துபாய் பேருந்துகளும் குட்டி திரைப்படமும்

துபாய் என்ற கனவு தேசம் கண்களுக்கு முன்னால் சில்லு சில்லாக சிதறிக்கொண்டிருக்கிறது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வரிசையில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் கூட்டம் காணாமல் போய்விட்டது. இந்த தேசத்தின் தற்போதைய நிலை யாருமே எதிர்பார்த்திராதது. ஆனாலும் இது ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் என்ற நம்பிக்கை மட்டும் மனதின் ஓரத்தில் இருக்கிறது.


துபாயின் அனைத்து அரசுப் போக்குவரத்துகளும் “NOL" என்ற ஒற்றை அட்டை மூலம் பயணத்திற்கான கட்டணம் செலுத்த வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பேருந்துகள், தொடருந்துகள், நீர்நிலைப் பேருந்துகள் என அனைத்திற்கும் இந்த அட்டையே போதும். இதனை அங்கங்கே ரீ-சார்ஜும் செய்துகொள்ளலாம். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கான குறைந்த பட்சக் கட்டணம் 2 திர்ஹம் 10 ஃபில்ஸ் (அதாவது 30 ரூபாய்). முழுதும் குளிரூட்டப்பட்ட பேருந்தில் பயணம் செய்வது அதி ஆனந்தம்.



அப்படி நான் நேற்று போய் பார்த்த படம் தான் “குட்டி” - feel my love.

தெள்ளிய நீரோடையான கதையை அங்கங்கே தூவி இருக்கும் காட்சிப்பதிவுகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் சிறப்பானதாகி இருக்கும். ஆனால் நடக்கவில்லை.

மித்ரன் இயக்கம் என்றதும் அதே பழைய தெலுகு ”ஆர்யா” படம், ஆனால் நன்றாக சொல்லி இருப்பார் என நினைத்து மூன்று மணிக்கே போய் டிக்கட் வாங்கியதற்கு என்னை நானே கண்டபடி திட்டிக் கொண்டேன்.

ஸ்ரியா என்ற பெண்ணையும் ஒரு பாடலில் அழகாய்க் காட்ட முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். அட்டகாசமாய் ஜோதிகா நடித்திருக்க வேண்டிய படம். ஒவ்வொரு காட்சியிலும் நம்மை நெளிய வைக்கிறார்.




இன்னொரு அம்சம் இசை.. தேவி ஸ்ரீ ப்ரசாத்துக்கு என்ன வந்துச்சோ.. எங்கேயோ கேட்டது போன்ற பாடல்கள்.

தனியே தெரிவது தனுஷ் மட்டும் தான். மனுசன் காதலைச் சொல்லிவிட்டு சிரிக்கும்போதும், அவள் திருமணத்தின் போது என்னுடைய காதலை நீ உணரவில்லையா எனும்போதும் உதடுகள் துடிக்க அழுகைக்கான அத்தனை உணர்ச்சிகளையும் கொண்டு வருகிறார்.

பழைய சினிமாக்களைப் போல் அங்கங்கே கதாநாயகன் வெல்வதும், அவ்வப்போது வில்லன் வெல்வதும் புளித்துப்போய்விட்டது.

கடைசி சண்டைக்காட்சியில் நின்று கொண்டிருக்கும் இரும்பு ட்ரம்மில் காலை வைத்து வில்லனை அடிக்கும்போது அவர் கையைப் பிடிப்பதும், பிறகு தலையால் அடிப்பதும், தலையைப் பிடித்தால் கையால் அடிப்பதும் நல்ல சிந்தனை. ஆனால் ஒல்லிப்பிச்சான் இப்படி அடிப்பதை ஜீரணிக்க முடியவில்லை ;)

பாவாடை தாவணியில் அம்மணி வரும்போது அம்சமாய் இருக்கிறார். படத்தின் பாடல்கள் மனதில் ஒட்ட மறுக்கிறது.

திரைக்கதையில் தூக்கி நிறுத்தி இருக்கலாம். ஆனால் இயக்குனர் விட்டுவிட்டார்.

நல்ல படமாகக் கூடிய தகுதிகள் இருந்தும் நீளம் தாண்டுதலில் ஓடாமலே தாண்டியதைப் போன்று இருக்கிறது.

குட்டி திரைப்படம் - விமர்சனம் செய்ய தேவை இல்லை.

4 கருத்துகள்:

ஹுஸைனம்மா சொன்னது…

//குட்டி திரைப்படம் - விமர்சனம் செய்ய தேவை இல்லை. //

அப்புறம் ஏஏஏன்?

வடுவூர் குமார் சொன்னது…

நான் இருந்த‌ போது 2 திர்ஹாமாக‌ இருந்த‌து இப்போது 10 காசு ஏற்றிவிட்டார்க‌ளா?
அதுக்கு ப‌ய‌ந்தா ம‌க்க‌ளை காணும்?

அகமது சுபைர் சொன்னது…

சின்ன வயசுல பசுவை பத்தின கட்டுரையை பரீட்சைக்கு படிச்சிட்டு போனா, தென்னை மரம்னு கேள்வி கேப்பாங்க. அப்ப பசுவைப் பத்தி எழுதிட்டு தென்னை மரத்தில் பசு கட்டப்பட்டிருக்கும்னு முடிச்சிடுவோம்.

அது மாதிரி குட்டி படம் பத்தி எழுத நினைச்சேன். ஆனா அதுக்கு எழுத எதுவும் இல்லன்னு பஸ் பத்தி எழுதிட்டேன் ;-)

அகமது சுபைர் சொன்னது…

//அதுக்கு ப‌ய‌ந்தா ம‌க்க‌ளை காணும்?//

ஆமாண்ணே... 10 ஃபில்ஸ்னு சொன்னா ஒரு ரூவா 20 காசாச்சே! ;)