சிலருக்கு கண்ணதாசன் என்பவரை கவிஞனாய் பார்க்கும் எண்ணம் இல்லை.
கண்ணதாசன் என்பவரை எனக்கு பிடிக்கும் மூல காரணம், அவரின் சந்தம் தான்.
பிடிக்கும், பிடிக்காது என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடியது. எனக்கு பிடிக்கும் எல்லாமுமே அனைவருக்கும் பிடிக்கும் என அனைவரின் சார்பாக என்னால் சொல்ல இயலாது. கண்ணதாசன் பாடல்களில் பயின்று வரும் சந்தம் மற்றும் மரபு இன்றும் எனக்கு ஆச்சர்யம் தரும் ஒன்று.
எனக்குப் பிடித்த கண்ணதாசனின் பாடல்....
*//ஆறு மனமே ஆறு -
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு... // *
எந்தவொரு மனம் கனத்துப்போகும் கணத்திலும் ஆறுதல் தரும் பாடல்கள் கண்ணதாசனின் பாடல்கள். இங்கே
//ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில்
இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை
அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும் //
சொல்வதை செய்பவர்கள் மட்டுமே அமைதியான மனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் மனம் அமைதியில் திளைக்கும் என்பதெல்லாம் சுத்தமாய் ஏற்றுக்கொள்ள இயலாதது. துன்பம் வரும்போது கலங்கி நிற்காதே, அந்த துன்பத்திலும் இன்பம் இருக்கிறது என்பது தான் இறைவனின் நியதி என்று கண்ணதாசன் எவ்வளவு நயமாய் கூறுகிறார்.
*ஒரு முறை ஒரு பெரும் பணக்காரன் ஒரு முனிவரிடம் வந்து எனக்கு ஏகப்பட்ட பணம் இருக்கிறது. ஆனால் சந்தோசம் என்பது இல்லை என்று சொன்னான். இதை கேட்டுக்கொண்டிருந்த முனிவர், அவனின் கைப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடினார். யாரும் பிடிக்க முடியாத மின்னல் வேகத்தில் அவர் ஓட, பணக்காரனின் மனம் படபடக்கத்துவங்கியது. சும்மாவா பின்ன, உள்ளே 1 லட்ச ரூபாய் பணமல்லவோ இருக்கிறது. போயும் போயும் ஒரு போலிச்சாமியாரிடம் ஏமாந்து போனதாக அந்த பணக்காரன் வருந்தினான். *
*சிறிது நேரத்தில் அந்த சாமியார் திரும்பி வந்து அந்த பணக்காரனிடம் பையை திருப்பிக்கொடுத்தார். வேக வேகமாக பையை பிரித்துப்பார்த்த அந்த பணக்காரன், பணம் முழுவதும் இருப்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியுற்றான்.
அப்போதுதான் அந்த முனிவர் சொன்னார், இதே பை உன்னிடம் முன்னம் இருந்தபோது இல்லாத மகிழ்ச்சி, இப்போது எப்படி வந்தது?? எனவே மகிழ்ச்சி மனதில் தான் இருக்கிறது என்றார். அதையே தான் கண்ணதாசன் மேலே சொல்கிறார்.
ஒவ்வொரு துன்பமும் ஆண்டவன் கொடுக்கும் போது அதைத்தாங்கிக்கொள்ளும் பக்குவமும் ஆண்டவன் நமக்குக்கொடுக்கிறான்.
//உண்மையைச் சொல்லி
நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது
பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் -
பெரும் பணிவு என்பது பண்பாகும் -
இந்த நான்கு கட்டளை
அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும் //
உண்மையை சொல்லவும், நன்மையைச் செய்யவும் வேண்டுமாம். நிலை உயரும்போது யாரிடத்தில் பணிவு இருக்கிறது??.
உண்மை என்பது அன்பு.. என்ன அற்புதமான வார்த்தை. அன்பு என்பதை எப்படி விளக்கலாம்??? நம்மிடம் மற்றவர்கள் எப்படி இருக்கவேண்டுமென நினைக்கிறோமோ அப்படியே நாம் அவர்களிடம் இருக்கவேண்டும். ஆனால் மற்றவர்களிடம் உண்மையாய் இருத்தல் என்பதே அன்பு.. என்ன அழகான ஒரு சித்தாந்தம்..
பணிவு என்பது பண்பு.. வாழ்வியல் அகராதியில் முன்னேற வேண்டும் என்ற உந்துசக்தி உள்ளதால் தான் மனிதன் என்ற சமுதாயம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் முன்னேற்றம் என்பது கிடைக்கும் போது மனிதன் மனிதனாக இருப்பதில்லை. இயற்கையை தன் கையில் எடுத்துக்கொண்டு அதனை அழித்து மிருகமாய் வாழ்கிறான். அந்த இடத்தில்தான் பணிவு என்பது வேண்டியதாய் இருக்கிறது. பணிவு என்பது பண்பு என்று கவிஞர் சொல்வதன் உள்ளர்த்தம் இதுவாக இருக்கலாம். முன்னேறிச்செல்லும்போது பணிவுகொள் மானிடா, அதன்மூலம் தான் பண்பு நிலைத்திருக்கும். உலகம் உன்னைப்போற்றும் என்கிறார்.
* நிலை உயரும் போது
பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும் *
//ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது
கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது
பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை
அறிந்த மனது
ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம்//
ஆசை என்பது இல்லாத மனிதன் இருக்க முடியுமா? எனக்குத்தெரிந்து இல்லை. வயதான பாட்டிக்கு கூட, பேரன் கையால் பால் அருந்தி சாக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது.
கோபம் என்பது கூடாது என்று எத்தனையோ இடத்தில் படித்திருந்தாலும், நாம் கோபப்படத்தான் செய்கிறோம். கோபத்தை நாம் வெளிக்காட்டும் இடம் தான் நம்மை வேறுபடுத்திக்காட்டுகிறது. நாம் நம் கோபத்தை அடக்கவேண்டும்.
களவு என்பது எத்தனை வகை??. மற்றவனிடம் ஒரு பொருள் இருக்கும்போது நமக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. அதை அபகரிக்க மனம் படாதபாடு படுகிறது.
இந்த மூன்றும் இல்லாது இருக்கும் நேரம் என்பது குழந்தை நிலைதான்.
அன்பு என்பதும் கருணை என்பதும் முக்கிய காரணியாக இருக்கிறது இந்த உலகம் நிலை பெறுவதற்கு. எங்கோ ஒரு மூலையில் எம் தமிழன் குண்டடி படும்போது துடிக்கிறோமே, எங்கோ ஒரு மூலையில் சூறாவளியோ, நிலநடுக்கமோ நம்மை துடிக்கச்செய்கிறதே அது தான் அன்பின் வெளிப்பாடு. அவர்களுக்கு ஏதாவது செய்யமுடியுமா என்று நம் இதயம் துடிக்கிறதே அது தான் கருணையின் வெளிப்பாடு. நன்றி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்தியாவசிய தேவையாய் இருக்கிறது. இவை அனைத்தையும் ஒவ்வொரு மனிதனும் நிலைபெற்று செயல்படுத்த வேண்டுமாய் விளம்பும் கவிஞன் கருத்துக்களுக்கு எதிர்கருத்து இருக்கிறதா என்ன???