சனி, 22 ஜனவரி, 2011

வலி

வலியுள்ள பொழுதுகளில் தான் இயலாமையின் கரங்கள் வீரியமாய்த் தாக்குகின்றன.

உடல் சார்ந்த மனமாகட்டும். மனம் சார்ந்த உடலாகட்டும். ஒன்றுடன் ஒன்று ஒப்பீட்டளவில் சமமில்லை என்றாலும் ஒன்றுக்கு அசூயை என்றால் மற்றொன்று அத்தனை அமைதியாக இருப்பதில்லை. மனத்தின் விளிம்புநிலையில் உண்டாகும் ஒரு சின்ன வலி, இயலாமையாலோ அல்லது ஏதேனும் ஒன்றாலோ இருந்தாலும் அந்தக் கணத்தில் உடல் முழுக்க வலியுண்டாக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகிவிடுகிறது. உடல் சார்ந்த வலியின்போது ஏதாவது ஒன்றைச் செய்து மனம் சார்ந்த வலியை உண்டாக்குதல் தோதாகப் படுகிறது.

இந்த வேதனைக் காலங்களில் பிடித்தவர்களுடனான அருகாமை மிகவும் தேவையானதாக இருக்கிறது. அருகாமை என்பது முகம் புதைத்து அழுவதாகவோ, தோள் சாய்ந்து அழுவதாகவோ இருக்கலாம் என்றாலும் கைகோர்த்து நடப்பதும் கூட இயல்பாக அமைந்துவிடுகிறது. மிக சோர்வான கணங்களில் அந்த அருகாமை நம்மை மிக மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும். சிலரின் அருகாமை நம்மை மிக வருந்தச் செய்யும்..

உடல் சார்ந்த வேதனைகளைத் தீர்ப்பதற்காய் மிக சாதாரணமாக மருந்துகள் புழங்குகின்றன. அதில் முக்கியமான பல் சார்ந்த வேதனையைச் சொல்லலாம். சமீப காலமாக, விஸ்டம் டூத் எனப்படும் அறிவுப்பல்லில் உண்டான வலி மிக அதி தீவிரமாக என்னை விரும்பியவர்களின் அருகாமை பற்றிய எண்ணத்தை உண்டாக்கிச் சென்றது. இங்கே மருத்துவரிடம் காட்டிய போது, அந்தப் பல் கடைசியாக இருப்பதால் தாடையை வெட்டி எடுத்து பல்லை எடுக்க வேண்டும். பிறகு சிமெண்ட் இட்டு நிரப்ப வேண்டும் என்று ஏதோ பாலம் கட்டப் போவது போல் பயமுறுத்தினர். (மூன்று டாக்டர்களும் ஒரே மாதிரி சொன்னார்கள்.).

அப்படிப்பட்ட ஒரு நாளில் தாயகம் சென்று வரத் தீர்மானித்தேன். வலியுள்ள பொழுதுகள் எப்போதும் நமக்கு உகந்ததாக இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தம் தர வைக்கக் கூடியது. மர்ஃபி விதிகள் உண்மையிலும் உண்மை. விமானங்களில் இருக்கைகள் நிரம்பி வழியும் டிசம்பர் மாத இறுதிகளில் நமக்கும் ஒரு இருக்கை கிடைப்பதற்கு நாம் நிறைய கொடுக்க வேண்டி இருக்கும். அந்தப் பொழுதுகளில் நாம் எத்தனை செலவென்றாலும் பயணப்பட வேண்டிய நிலை என்பதால் பயணச்சீட்டு வாங்கி பயணம் தொடங்கினேன்.

அவ்வப்போது சிற்சில சந்தர்ப்பங்கள் நமக்கு உதவாதெனினும் சிற்சில சந்தர்ப்பங்கள் நமக்கு மிகவும் மன அமைதி தருபவை. அப்படி என் நண்பனின் 2 வயதுக் குழந்தை என்னுடன் திருச்சி வரை வரப்போகிறான் என்றதும் மனம் மிகவும் அமைதியானது. குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது கூட மிகச்சிறந்த மன அமைதி தரும் செயல். அவனின் செய்கைகள், சேஷ்டைகள், அழுகை, எல்லாமும் மிகவும் ஆச்சர்யம் தரக்கூடிய ஒன்று.

விமானத்தில் ஒரு இடத்தில் அமராமல் தூக்கிக்கொண்டு நடக்கச் சொல்வான். ஆரம்ப இருக்கை முதல் கடைசி இருக்கை வரை நடந்து கொண்டே இருக்க, நன்றாக உறங்க விட்டு நாம் நம் இருக்கையில் அமரும்போது விழித்துக் கொள்வான். குழந்தைகளுக்கு ஒருவரைப் பிடித்து விட்டால் அவரை விடுவதே இல்லை. அப்படி என்னுடன் ஒட்டிக்கொண்ட அவனை திருச்சியில் பிரியும்போது சற்றே மனம் வலிக்கத்தான் செய்தது.

இந்தக் களேபரங்களுக்கு ஊடாக சென்ற வேலை மிக சுமுகமாக முடிந்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமே. கடவாய்ப் பல்லின் இருபுறமும் திருப்புளியால் ரெண்டு தட்டு தட்டி அசால்ட்டாக எடுத்துவிட்டார் மருத்துவர். அன்று இரவு மட்டும் எந்த விதமான சூடான அல்லது குளிர்ந்த உணவு கூடாது என்றார். அவ்வளவு தான்.

இந்தியாவில் இதற்கான செலவு ரூபாய் 860. அதற்கு முன்னால் நான் இங்கே செலவளித்த தொகை 13200 ரூபாய். வேலை முடியாமலே இந்த அளவு செலவு.. :(

ஒரு கடவாய்ப் பல்லுக்கு ரூபாய் 14000 செலவளித்தவன் நானாகத்தான் இருக்க முடியும். :(

வலிகள் தான் வாழ்வை ருசிக்க வைக்கின்றன.

வியாழன், 20 ஜனவரி, 2011

டோபி கட் (Dhobi Ghat) - கருத்து

வெளியான அன்றே பார்க்க சில படங்களை பார்த்தே ஆக வேண்டுமென்ற உத்வேகம் இருக்கிறது. அதிலும் படம் எடுக்க ஆரம்பித்த நாளிலிருந்து காத்திருந்து படம் பார்க்கவேண்டிய அளவுக்கு சில கலைஞர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். அப்படி குறிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவர் அமீர்கான்.

அமிதாப்பின் குரலில் ஆமிர்கானின் தயாரிப்பில் வந்த திரைப்படங்களைக் (aamir productions) காட்டும்போது அருமையாய் இருக்கிறது. அது டில்லிபெல்லி என்ற படத்தின் ட்ரைலர் என்று பிறகே புரிகிறது. இதையும் காத்திருந்து பார்க்கலாம் என்ற எண்ணம் உண்டானது.

இப்போது டோபிகட் படத்துக்கு வருவோம். ஹிந்தியிலும் கொஞ்சம் ஆங்கிலத்திலும் கொஞ்சம் கலந்த ஒரு திரைப்படம். ஆமிரின் மனைவியின் இயக்கத்தில் வந்திருக்கும் படம்.

கவிதையான படம் என்று சொல்லிவிடலாம். நிறைய கவிதைகள் புரிவதில்லையே!

நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களைச் சுற்றிய கதை. நான்கு பேருக்கும் எதிர்பார்ப்புகள். அது பூர்த்தியாகிறதா இல்லையா.. இதில் மும்பையின் கோரக் கரங்கள் என்ன செய்கிறது என்பதே கதை.

ஆமிர் ஒரு ஓவியர். அவருக்கும் என்.ஆர்.ஐ. பெண்ணுக்கும் உருவாகும் நட்பு ஒரு கதையாக, அந்த பெண்ணுக்கும் சலவைத் தொழிலாளி பையனுக்கு உள்ள நட்பு இன்னொரு கதை, அமீர்கானின் வீட்டில் முன்பு குடியிருந்த ஒரு பெண் தன் தம்பிக்கு சொல்லும் கடிதமாக இன்னொரு கதை.

ஒவ்வொன்றும் தனித்த கதையாக பயணித்திருந்தால் அத்தனை சிறப்பாக இருந்திருக்குமாவென்று தெரியவில்லை.

இந்தத் திரைப்படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகள் சில...

1. காணும் அன்றே போதையில் கலவி கொள்ளும் நாயகன் நாயகியின் மறுநாளைய உரையாடல்
2. இரண்டு டீ கொடுக்க சொன்னதும் வேலைக்காரி நாயகிக்கு கப்பிலும், சலவைத் தொழிலாளிக்கு கண்ணாடி க்ளாஸிலும் தருவது. அந்த க்ளாஸை அவள் எடுத்துக்கொண்டு வேலைக்காரியை பார்க்கும் பார்வை
3.  சிகரெட் பிடிப்பதான பாவனையில் நண்பனிடமிருந்து சிகரெட்டை வாங்கும்போது அந்த காரின் கண்ணாடிக்கும் கதவுக்கும் இடையே அவர் சிகரெட் பிடிப்பதாக காட்டுவது (உண்மையில் சிகரெட் பிடிக்கவில்லை!)
4. அந்த சலவைப் பையனின் உடன் வரும் சல்மான் கதாபாத்திரம் (மும்பை மொழியில் "டபோரி")
5. அமீரின் வீட்டில் முன்பு குடியிருந்த பெண்ணின் நடிப்பு. கண்கள் பேசுது.
6. அவள் இறந்ததும் அழும் அமீரின் நடிப்பு
7. சலவைப் பையன் ஓடி வந்து தரும் அமீரின் முகவரியை அவள் பெற்றதும் அழும் அழுகை
8. அமீரின் வீட்டுக்குப் பக்கம் இருக்கும் அந்தக் கிழவி

வேற ஒன்னும் சொல்றதுக்கில்ல...

இலக்கியவாதிகள் சொல்லிக்கொள்ளலாம் அருமையான திரைப்படம் என...

என்னைப் பொறுத்தவரை "காசு வேஸ்ட்".

திங்கள், 10 ஜனவரி, 2011

நட்பின் வலியும் புத்தாண்டு இழப்பும்

2003ம் ஆண்டு டிசம்பர் இறுதி நாள்.. 2004ம் வருடம் ஆரம்பம்..

இந்தப் புத்தாண்டு இரவு என் வாழ்வின் முக்கியமான நட்பைத் தரும் இரவாக மாறப்போவதை அறியாமலே நின்று கொண்டிருக்கிறேன்.

கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் காலம். மெல்லிய குளிர் பரவும் இரவு நேரம். தாம்பரம் கிழக்கு பகுதியில் கேம்ப் ரோடுக்கு அருகில் ஒரு சர்ச்சுக்குப் பக்கத்தில் அவளை முதன் முதலாகப் பார்த்தேன்.

கையில் குழந்தையுடன் தடுமாறிக் கொண்டு, கொண்டுவந்த பொருள்களை பேக் செய்ய முடியாமல் கொரியர் அலுவலகத்துக்கு வந்திருந்தாள். அழகென்றெல்லாம் சொல்ல முடியாது. கருப்பு தான். ஆனால் களையான முகம். குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும். டெல்லிக்கு ஏதோ அனுப்ப கொரியர் அலுவலகம் வந்திருந்தாள்.

நண்பனின் மோதிரத்தை அடகு வைத்து விட்டு, அவன் நண்பனுக்கு பழைய புத்தகங்கள் வாங்கி அனுப்ப கொரியர் அலுவலகம் போயிருந்தேன். உடன் என் நண்பன், மற்றுமொரு ஜூனியர் பையன்.

அவர்களெல்லாம் தன் கடமையை செய்து கொண்டிருக்க மனதில் உறங்கிக்கொண்டிருந்த ஹீரோ விழிக்க, வலிய சென்று அவளுக்கு உதவினேன். பெண் என்பதால் உதவினேனா என்று இப்போதும் சந்தேகமாக இருக்கிறது.

அவளுடனான பேச்சு படிப்பைச் சுற்றியும், அவளின் வசிப்பிடம் பற்றியும் வளர்ந்துகொண்டே போனது. சொந்த ஊர் கன்னியாகுமரி பக்கம் என்றாள். நிறைய பேசினோம். அந்தக் குழந்தை அவள் சித்தி குழந்தை என்றாள். ப்ராஜக்ட் விசயமாக சென்னைக்கு வந்தேன் என்றாள். இதெல்லாம் ஏன் சொல்கிறாள் என்று தோன்றினாலும், அவளைப் பேச விட்டுக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

சில நாட்கள் கழித்து, பொங்கல் வாழ்த்து அனுப்பினாள். அதற்குள் என்னை குண்டன் என்று அழைக்க ஆரம்பித்திருந்தாள். கல்லூரிக்குள் ஒரு தேவ தூதனைப் போல் வலம் வந்து கொண்டிருந்தேன். உடன் படிக்கும் பெண்களெல்லாம் இவன் இப்போதெல்லாம் மிக வித்தியாசமாக இருக்கிறானே என்று எண்ணம் வந்திருக்க வேண்டும். ஆனால் அது நட்பு என்றே சொல்லி வந்திருக்கிறேன்.

காதல் என்பதற்கும், நட்பு என்பதற்கும் வித்தியாசம் புரிவதில்லை. அவளுடன் பேச வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் பேசி இருக்கிறேன். அனேகமாக 7 ஆண்டுகளாக, வகுப்புத் தோழி இல்லாத ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

சவூதியிலும், துபாய் வந்த பிறகும், அவளுடைய பிறந்தநாளுக்குத் தவறாமல் வாழ்த்து சொல்லப் பழகி இருக்கிறேன். அவளை என் வாழ்வில் ஒருத்தியாகவே எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது நட்பு என்பதாகத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

என் நண்பர்கள் கேலி செய்வார்கள்... என்னடா லவ்வர் மாதிரி எப்பவும் பேசிட்டு இருக்க அவ கிட்ட என்று... ஆனால் அவளுடன் பேச வேண்டும் என்று தோணும்போது பேசுவேன்.

அவள் மேற்படிப்பு படித்தாலும், பிறகு சென்னையிலேயே வேலை செய்தாலும், அவளுடனான தொலைபேசி அழைப்புகள் குறைவதாயில்லை. ஒரு முறை சென்னை சென்ற போது அவளைப் பார்த்தேன்.

"ஃபாரின்ல இருந்து வந்திருக்க, எனக்கென்ன கிஃப்ட் வாங்கிட்டு வந்த?" என்றாள்.
"உனக்கென்ன வேணும்?" என்றேன்.
"நீ நல்லா இருந்தா போதும்" என்றாள்.
"உன் மொக்கையெல்லாம் ஊர்ல வச்சுக்க... என்ன வேணும் உனக்கு?" என்றேன்.
(அப்போதெல்லாம் பதிவெழுத ஆரம்பித்திருந்தேன் என்று சொல்லித் தெரிய வேண்டாம் :-))
"எனக்கு ஏதாவது ட்ரெஸ் எடுத்துக் கொடு" என்றாள்.

அப்போதே அவளை அழைத்துக் கொண்டு சென்னை சில்க்ஸ் போய், சுடிதார் துணி எடுத்துக் கொடுத்தேன். விலையைப் பற்றிய கவலை ஏதும் இல்லை அப்போது. ஆனால் அவள் கேட்டு நான் இல்லை என்று சொல்லாத அளவில் என் நட்பு இருக்கிறது என்ற கர்வம் கொண்டேன்.

என்னுடைய திருமணத்திற்கான அழைப்பிதழை அவளுக்கு ஈ -மெயிலில் அனுப்பி இருந்தேன். அவளால் வர இயலவில்லை. அதற்கான காரணமும் சொல்லி இருந்தாள். ஆனாலும் மனம் கேட்கவில்லை. அவளுடன் பேசவில்லை.

சில நாட்களில் அவள் எனக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பினாள். ஆனால், அவள் திருமணத்துக்கு என்னால் போக இயலவில்லை. அப்போது தான் என் திருமணத்துக்கு வராமல் அவள் சொன்ன காரணம் போன்று எனக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்பது புத்தியில் உறைத்தது.

அவள் திருமணம் நல்லபடியாக நடந்ததாகவும், மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொன்ன போது மிகவும் மகிழ்ந்தேன். எல்லாமும் சரியாய் போய்க்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். இடையில் வேலை மாற்றம், இந்தியா விஜயம் என நானும் பிஸியாகப் போனதால் அவளைப் பற்றிய நினைவே இல்லை.

பின்னொருநாள் நள்ளிரவில் எனக்கு போன் அழைத்து அவள் விக்கி விக்கி அழுதாள். மனம் பதறியது. என்ன ஆச்சு என நான் கேட்கக் கேட்க அவள் அழுது கொண்டே இருந்தாள். அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தேன். பிறகு எல்லாமும் சொன்னாள். கணவன் சந்தேகப் பிராணியாம்.

எது செய்தாலும் சந்தேகமாம். அவள் மொபைலை எடுத்து பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறான். குண்டன் என்ற பெயர் பார்த்து அவளிடம் விசாரித்திருக்கிறான். அவளும் வெள்ளந்தியாக எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறாள். முன்ன பின்ன பழகாம, எந்தவித கொடுக்கல் வாங்கலும் இல்லாம எப்படி நட்பு என்கிறாய் என சரமாரியாக கேள்விகளால் துளைத்திருக்கிறான். நான் ட்ரெஸ் வாங்கித் தந்ததை அவள் சொல்லி இருக்கிறாள். அந்த ட்ரெஸ் விலை அறிந்ததும் என் மீதான சந்தேகம் வலுத்திருக்க வேண்டும்.

அவன் வீட்டில் இல்லாத பொழுது அவள் எனக்கு போன் செய்திருக்கிறாள். "என்ன செய்யணும்னு புரியல" என்றாள்.

அவளுக்கு நான் சொன்ன பதில்,
"என் நம்பரை அழித்துவிடு. முடிந்தால் என் நினைவுகளையும்"