புதன், 13 டிசம்பர், 2006

திரு. B. H. அப்துல் ஹமீது பற்றிய முன்னுரை

திரு. B. H. அப்துல் ஹமீது ரியாத் வந்த போது, அவருக்கு முன்னுரை வழங்க தயாரிக்கப்பட்டது. நேரமின்மை காரணமாக இந்த முன்னுரை நிகழ்ச்சியில் வாசிக்கப்படவில்லை.

அதனை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்..................


இங்கே குழுமியிருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு TAFAREG (தமிழ் கலை மனமகிழ் மன்றத்தார்) சார்பாக வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு.B.H. அப்துல் ஹமீது அவர்களைப் பற்றி கடலை அளக்க நினைக்கும் குவளை போல, நான் செய்துள்ள சிறு முயற்சி.

காலைக் கதிரில் துயிலெழுப்பி...
அந்தநாள் ஞாபகங்களை சுருதி மீட்டி...
பொங்கும் பூம்புனலாய் பரவசப்படுத்தி...
இரவின் மடியில் நாம் தலை சாய்க்கும் வரை.......

நமது அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்திருக்கும் வானொலியில் ஏறக்குறைய 44 ஆண்டுகள் அறிவிப்பாளராக பணி புரிந்து தம் செம்மையான தமிழ் உச்சரிப்பாலும், வசீகரமான பேச்சினாலும் ரசிக நெஞ்சங்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் திரு.பி.எச்.அப்துல் ஹமீது அவர்களை அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன்.

"I am a Tamil, but I don't know Tamil" என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் தலைமுறையில், தமிழ், தமிழ், தமிழுக்காக தன்னை அர்ப்பணித்த திரு. B.H. அப்துல் ஹமீது அவர்களைப் பற்றிய "சில" குறிப்புகள்.

இவர் நமது நெஞ்சங்களை கொள்ளை கொண்ட அறிவிப்பாளர் மட்டுமல்ல..நாடகாசிரியர், இயக்குனர், நடிகர், இன மத மொழி பேதங்களைக் கடந்த ஒரு நல்ல ரசிகர். அத்தோடு படைப்பாளிகள் நல்ல ஒழுக்க சீலர்களாய் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமான மனிதர் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவர் என்றுமே புகழுக்கு அடிமைப்பட்டவர் அல்ல. அவர் பெயரே சொல்வது போல் "புகழுக்குரியவனின் அடிமை".

இலங்கை வானொலியில் வயதில் மிகக்குறைந்த அறிவிப்பாளனாக, மிக இளம் வயதிலேயே இணைந்த போதிலும் வெறும் அறிவிப்புகளோடு நின்று விடாமல், ஒலிபரப்பிலே உள்ள பல துறைகளையும் கற்றுணர வேண்டும் என்ற உந்துதல் இவரிடம் இருந்தது.

மிகச்சிறிய வயதிலேயே வானொலியின் சிறுவர் மலரில் ஆரம்பித்து நாடகங்களிலெல்லாம் நிலையக்கலைஞனாக நடித்திருந்தாலும், 1967ம் ஆண்டிலேதான் அறிவிப்பாளனாக இலங்கை வானொலியில் இவரது சேவையை ஆரம்பித்தார்.

மிக இளம் வயதிலேயே ஜான்சி ராணியாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, கர்ணனாக நடித்திருக்கிறார். "கோமாளிகள்" என்ற நாடகத்தின் தயாரிப்பாளர். அந்த நாடகம் மூன்றரை வருடம் ஒலிபரப்பானது. அந்த நாடகம் திரைப்படமானபோது, அதில் ஐயர் வேடம் ஏற்றிருந்தார். அந்த 97 நாட்கள் ஓடியது.

நீண்ட நாட்களுக்குப்பின் "இசைப்பயணம்" என்றொரு திரைப்படத்தில் அப்துல் ஹமீதாகவே நடித்திருந்தார். அது "சூரியோதயம்" என்ற பெயரில் வெளியானது.

இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை, சன் தொலைக்காட்சியிலும் கொண்டு வந்த பின், அது தேசம் கடந்து தமிழர்களை விரைவாக சென்றடைந்தது. வானொலியிலும், தொலைக்காட்சியிலும் சேர்த்து தென்கிழக்காசியாவிலேயே ஒளிபரப்பான, ஒலிபரப்பான முதல் நிகழ்ச்சி இந்த பாட்டுக்கு பாட்டு.

குளியலறை சங்கீத ஞானம் கொண்டவர்களின் திறமையை வெளிக்கொணர்வதற்கான இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்ததோடு மட்டுமில்லாமல், நமக்கு பல அற்புத பாடகர்களையும் பெற்றுத்தந்தது.

இலக்கியத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள், பொது அறிவு நிகழ்ச்சிகள், செய்தித்தொகுப்புகள், நாடகங்கள் என பல நிகழ்ச்சிகளில் இவரின் திறமையை காணலாம்.

சிறு வயது முதலே இவர் ஒரு நல்ல ரசிகர். ரவிசங்கரின் சித்தார் என்றாலும், ஹரி பிரசாத் சௌரஷியாவின் புல்லாங்குழல் என்றாலும், கர்நாடக சங்கீதமென்றாலும், துள்ளிசையாக இருந்தாலும் எல்லா வகையான இசை வடிவங்களையும் நன்றாக ரசிப்பார்.

விசேஷமாக சொல்வதென்றால் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது அதன் கலை நிகழ்ச்சிகளின் நிறைவு நாளன்று மூன்று நாடகங்களை தேர்வு செய்தார்கள். அதில் முழுக்க முழுக்க பெண்களை வைத்து இயக்கிய இராவணேஸ்வரனுடைய கதையை அரங்கு நிரம்பி வழிய யாழ் வீரசிங்கம் மண்டபத்திலே மேடையேற்றினார்.

ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நிற்காமல் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும், தற்கால விஞ்ஞான மாற்றங்களை உள் வாங்கிக் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும் என்றும்... ஒரு மாணவ சிந்தனையோடு இன்றுவரை கற்றல் நிலையிலேயே காணப்படுவதால் உள்ளத்தளவில் இளைஞனாக இருக்கிறார்.

சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனுடைய அன்பு வேண்டுகோளுக்கிணங்க தெனாலியில் அப்துல் ஹமீதாகவே நடித்தார்.

பிரபல நாவலாசிரியர் பாலகுமாரன் அவர்கள் 'பெண்மணி' என்ற இதழில் தன் ஞாயிற்றுக்கிழமை காலைப்பொழுதை திரு. அப்துல் ஹமீது அவர்கள் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மூலம் கொள்ளை அடித்துவிடுகிறார். தன்னை மட்டுமல்லாமல் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருக்கின்றது இந் நிகழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார்.

செய்தி வாசித்தாலென்ன, வெறும் விளம்பரம் ஒன்றை வாசித்தாலென்ன, வளரும் தலைமுறைக்கு தமிழ் அட்சரங்களை பிழையின்றி தெளிவாக, அதிலும் காதுக்கு இனிமையாக வாசிக்க வேண்டும் என்ற கருத்து கொண்டவர்.

மொழியின் பால் அளவு கடந்த நேசம் வைத்துள்ளதால் வார்த்தைகளை கூட கடித்துக் குதறாமல் கேட்பவருடைய காதுகளை இம்சை செய்யாமல் அழகாக வார்த்தைகளை உச்சரிக்கக்கூடிய ஒரு பக்குவம் வரும்.

இத்தகைய சிறப்புகள் பெற்ற திரு. B.H. அப்துல் ஹமீது பற்றிய முன்னுரையை இத்துடன் நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்.