ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

பொங்கல் விழா சிறப்புக் கவியரங்கம் - பண்புடன் இணைய குழு

நான் கலந்து கொண்ட இணைய கவியரங்கத்தில் வழங்கிய கவிதை..

இனி வரும் நாள்கள்

கடவுள் வாழ்த்து:

இறைவா!
இல்லா மலிருந்தன உயிர்கள்
இல்லா மலிருந்தன உலகங்கள்
எல்லாமுமாய் நீ
என்றைக்கும்  நீ
வல்லமை உனக்கே!
வணங்குகிறேன்..


தமிழ் வாழ்த்து:

அங்கி யணிதல்  அடையாளம் யார்க்குமே
தங்கமும் தந்திடும் தோரணை - அங்ஙனமே
என்னுள்  தமிழணங்கே உன்னை அணிந்தனன்
மின்னிடு  வாய்நீ மிகைத்து!

சபையோர்க்கு:

சிந்தனையில் தான் தோன்றி
சிதறியதை தொடுத்திட்டேன்
சிறப்பெனில் சுட்டிடுங்கள்
குறைஎனில் குட்டிடுங்கள்
 
தலைவர் வாழ்த்து:
 
அறிவிற் சிறந்தீர்; அன்பில் மிகைத்தீர்
 ஆயின் ஏனோ வாழ்த்தை மறுத்தீர்
நெறிகள் கூறும் நலமே கொண்டீர்
 பாடும் குயிலே; பண்பா ளர்நீர்.
தெரிந்த வரைக்கும் தலைவர் என்றால்
 தெளிவாய் உங்கள் தகுதி வேண்டும்.


முதன்மைக் கவிதை:
 
கடந்து வந்த பாதை
சில நேரம் கற்கள்
சில நேரம் புற்கள்
சில நேரம் முட்கள்

கற்கள் காயப்படுத்தலாம்
புற்கள் துன்புறுத்தலாம்
முட்களால் முடக்கப்படலாம்
பயணம் மட்டுமே நிரந்தரமானது
பயணம் வேறு வாழ்க்கை வேறா?

வேண்டுமென்பதே வாடிக்கையாய்
வேண்டியவர்கள்!
நகைக்காய் நகைப்பவர்கள்
தொகைக்காய் தவிப்பவர்கள்
உறவுகள் என்பதாம் பெயர்

இவர்கள் இருப்பிடம் தேடி
செல்வம் சேர்க்கும் திறன்பெற
வேண்டும் இனி வரும் நாளில்

வெற்றியில் மட்டுமே
சுகம் கொள்வதும்
தோல்விகள் வருவதில்
துவண்டுபோவதும்
இல்லாத மனம்
பெறவேண்டும் இனி வரும் நாளில்

"நான்" என்றோர்களும் இல்லை
நான் தான்  என்றோர்களும் இல்லை
நான் மட்டும்தான் என்பதும் இல்லை
நான் அடங்கும் ஞானம்
கைவரப் பெறவேண்டும்
இனிவரும் நாளில்..
 
இல்லையென வருவோர்க்கு
இல்லையென இயம்பாது
இயன்றதை செய்வேன்
என்பதன்று,
இல்லையென்ற சொல்லே
இல்லாது விரட்டவும்
வேண்டும் இனிவரும் நாளில்
 
திருந்தட்டும் உலகந்தான்
திருந்தட்டும் மற்றவரும்
வருந்துகின்ற போக்கின்றி
வகையாக  'நான்' திருந்தவும்,

எளியவரின் வலிகளிலே
வலியவரும் வாழ்கின்ற
இயலாமை சுடுகின்ற
இன்னல்கள் மாறிடவும்,

ஒருநாளே வாக்காளர்
உயர்வுகளை பெறுவதுவா?
கருமைமிகு பணநாயகம்
கட்டாயம் மாறிடவும்,

பேரினவாத நச்சுப்பற்கள்
பிடித்திருக்கும் எம்மக்கள்
பெருமூச்சு விடுகின்ற
பெருங்காலம் வாய்த்திடவும்,

தம்மக்கள் அவலங்கள்
தானுணரா தலைவர்க்கு
இன்னுயிர் மாய்த்துணர்த்தும்
இழிநிலைகள் மாறிடவும்,

நன்மைக்கும் தீமைக்கும்
நடக்கின்ற போரினிலே
என்பங்கும் உண்மைக்காய்
இருக்கின்ற வாழ்வுக்கே,

இனிவரும் நாள்களை
இறைவா அருள்வாய்!

நன்றிகள்..

அன்புடன்,
சுபைர்