செவ்வாய், 26 செப்டம்பர், 2006

வெண்பா

1. தாவணிப் பெண்களின் கெண்டை கொலுசும்
சுடிதார் மகளிர் சிரிப்புடன் - பூக்களின்
வாசம் முகம்பரவும் வெட்கம் அனைத்திலும்
மண்வாசம் வீசும் மரபு.

2. கன்னி கருவிழி கார்கூந்தல் அஃதனைத்தும்
இன்றேல் கவிஞர்தம் கண்ணீரின் கேள்விக்கு
பாட்டாய் வருமாம் நிலவு.

3. சினேகா சிம்ரன் திரிஷா கனாவர
நன்றாய் நிதமும் உறங்கு.

4. கண்ணே மணியே - திரிஷா எந்தன்
கவியின் மொழியாக, பூநின்னை எண்ணி
தினமும் வடிக்கிறேன் செய்யுளில் வெண்பா
படித்து அருகில் வா.

5. வேலையின்றி தெருபொறுக்கும் கணங்களில் - கையில்
அரிசிவாங் கபணமில்லை அடுப்பெரிக்க விறகில்லை
கடுப்பாய் அமர்ந்திருக்க அழைத்தனன் - நட்புடன்
வெண்பா வடிக்கலாம் வா.

*கனவுகள்!*


என்னை சில கனவுகள்
விரட்டி எடுக்கும்..
வாட்டியும் எடுக்கும்.

*முதல் கனவு..*
தூரத்தில் ஒருத்தி
ஓடி வருவாள்,
அவள் அருகில் வருகையில்
விழிப்பு வரும்.

*இரண்டாம் கனவு..*
நான் வீட்டில் இருக்க,
அம்மா எழுப்பி
காபி தருவார்.
விழித்தபின் நினைவு வரும்
இன்னும் இருப்பது சவூதியில்.

*மூன்றாம் கனவு..*
இதமான காற்றில்
சுகமான இசையில்
அழகான ஒளியில்
அன்னம் உண்பதாய்
அன்று தான் எனக்கு
மோர் கூட இருக்காது.

*நான்காம் கனவு!*
இதே சம்பளத்தை
இந்தியாவில் பெறுவதாய்..
அப்போது தான் நினைவு
வரும் வீட்டிற்கு தொலைபேச..


"கனவுகள் காண்பது நன்று"
கலாம் சொன்னார்.

அவர் கண்ட கனவுகளில்
ஒன்று கூட இதில் இல்லை
என்பது மட்டும் நிஜம்.

காதல்

நீ நிற்கும் இடம் மட்டும்
மழை பெய்யும்!

காற்று உன்னை
தாலாட்டும்!

கவிதை உன்
வசப்படும்!

காதலி வீட்டுத் திண்ணை
உனக்காக காத்திருக்கும்!

வண்ணத்துப் பூச்சிகளைவிட
அவள் தாவணி
அழகாய் இருக்கும்!

கண்ணாடி முன்னால்
நேரம் கழியும்!

தமிழ் ஜோக்ஸ்

பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
------------------------------------------------------------------------
பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது?
நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்.........!
------------------------------------------------------------------------
ஒருவன்: பஞ்சாப்ல ஏன் ATMம் ஒர்க் ஆகுறதில்லை....
மற்றவன்: ஏன்?
ஒருவன்: எல்லா சர்தாரும், "Enter ur PIN"ன்னு கேட்டா பொண்டாட்டி ஹேர்பின்ன சொருகிடுறாங்க.
------------------------------------------------------------------------
ஹலோ! PEPSI உமாவா?????? எனக்கு சிவகாசில இருந்து ஒரு பாட்டு போடுங்க.........
உமா: சாரிங்க...நான் இப்பொ சென்னைல இருக்கேன்.
------------------------------------------------------------------------
வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா!
பையன்: "STICK NO BILLS"
------------------------------------------------------------------------
வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
------------------------------------------------------------------------
TTR: டிக்கெட் கொடுங்க?
பயணி: இந்தாங்க.
TTR: இது பழைய டிக்கெட்
பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?
TTR: ......... ????
------------------------------------------------------------------------
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
------------------------------------------------------------------------
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...
------------------------------------------------------------------------

நையாண்டி இலக்கியம்

1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம். ஆனா, அதால LOCAL call, STD call, ISD call ஏன் MISSED call கூட பண்ண முடியாது!

2. கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம், ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?

3. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரலில தான் பேச முடியும்.

4. என்ன தான் உன் தலை சுத்தினாலும், உன்னால உன்னோட முதுகை பார்க்க முடியாது.

5. மீன் பிடிக்கிறவனை "மீனவன்" சொன்னா, நாய் பிடிக்கிறவன என்ன சொல்றது?

6. தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா ஏன் வலிக்கிறதில்ல?

7. பொங்கலுக்கு கவர்மெண்ட் லீவு இருக்கு, இட்லி, தோசைக்கு ஏன் லீவு கொடுக்க மாட்டேங்கிறாங்க?

8. கோல மாவில் கோலம் போடலாம், கடலை மாவில் கடலை போட முடியுமா?

9. வாழ்க்கையில ஒன்னும் இல்லாட்டி bore அடிக்கும், தலைல ஒன்னும் இல்லாட்டி glare அடிக்கும்.

10. 7 பரம்பரைக்கு உக்கார்ந்து சாப்பிட பணம் இருந்தாலும், fast food கடைல நின்னுகிட்டு தான் சாப்பிடணும்.

11. வாழை மரம் தார் விடும், ஆனா அதை வச்சு ரோடு போட முடியாது.

12. பால்கோவா பாலிலிருந்து பண்ணலாம், ஆனா ரசகுல்லாவ ரசத்திலிருந்து பண்ண முடியாது.

13. என்ன தான் படிப்பாளியா இருந்தாலும் பரீட்சை அறையில படிக்க முடியாது.

14. பள்ளிக்கூட "test"ல "பிட்" அடிக்கலாம். கல்லூரி "test"ல "பிட்" அடிக்கலாம். ஆனால், "Blood test"ல "பிட்" அடிக்க முடியாது.

15. என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும், அதால, "நன்றி"ன்னு சொல்ல முடியாது. இது தான் வாழ்க்கை.

16. ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்தி ஒன்னு தான் பெருசு.

17. என்ன தான் அஹிம்சா வாதியா இருந்தாலும், "சப்பாத்தி"ய சுட்டு தான் சாப்பிட முடியும்.

18. நீ என்ன தான் வீரனா இருந்தாலும், குளிர் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.

19. காசு இருந்தா "Call Taxi", காசு இல்லாட்டி கால் தான் "Taxi".

20. கோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும், கோவில் மணியால நம்மல அடிச்சா ரத்தம் வரும்.

21. பல்லு வலின்னா பல்ல புடிங்கிடலாம். ஆனா கண்ணு வலின்னா?

22. நீ என்ன தான் படிச்சு "Certificate" வாங்கினாலும், உன் கையால உன்னோட "Death Certificate" வாங்க முடியாது.

23. "Engineering College"ல படிச்சு "Engineer" ஆகலாம். "President College"ல படிச்சு "President" ஆக முடியுமா?

24. நீ "எத்தனால்" சாப்பிட்டா நீ ஆடுவ. ஆனால் "மெத்தனால்" சாப்பிட்டா ஊரு உனக்காக ஆடும்.

25. மெழுக வச்சு மெழுகு வத்தி செய்யலாம். ஆனா "கொசு"வ வைச்சு "கொசுவத்தி" செய்ய முடியாது.

நவீன ஆத்திச்சூடி

அகம் என்னை ஏச
ஆக்கம் என்னை பரிகசிக்க
இயக்கம் நின்று போக
ஈகை மறந்து போக
உணவு மட்டுமே வாழ்க்கையாக
ஊமையாய் அலுவல் செய்ய
எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் கண்ணீராக
ஏக்கங்கள் மட்டுமே நிலைத்திருக்க
ஐயம் இன்றி சொல்வேன் நான்
ஒன்றாக உறவுகள் இருக்கும் பச்சம்
ஓடி வருவேன் அலைபோல்
அஃதல்லவோ என் தேடல்...

*கற்பனை!*

விடிந்தும் விடியாமலும் இருக்கும் மார்கழி மாத காலை வேளை.

கையில் கோலப் பொடியோடு அவள் பிரசன்னமாவதற்காக காத்திருந்தான் சூரியன்.
அவனுக்கும் முன்னாள் அடியேன்.
எந்த நாளிலும், எட்டு மணிக்கு முன்னாள் எழுந்திருக்காத நான், கொஞ்ச காலமாய் காலை 4 மணிக்கெல்லாம், புத்தகமும் கையுமாக இருப்பதை பார்த்தும் பார்க்காத மாதிரி இருப்பார் அம்மா...

அவள் அன்று பச்சை தாவணி உடுத்தி இருந்தாள். அன்று நான் பச்சை சட்டைக்காக, கடை ஏறி இறங்கியதை நாடறியும். அவளைத் தவிர.
பச்சை நிறம் பற்றி "வைரமுத்து" எழுதிய பாடல் எனது தேசிய கீதமானது அப்போது தான்.

அவள் கோலமிடும் அழகை பார்ப்பதற்காக காத்திருந்த சூரியன் சட்டென விழித்தெழுவான்.

"அய்யோ!..வெயில் அடிக்குது, சீக்கிரம் போகணும்" என தனக்குள் சொல்லிக்கொண்டே அவளின் விரல்கள் புவியில் நாட்டியமாடும்.

"அவள் மனதிற்குள் சொல்லிக் கொண்டது எனக்குள் கேட்பது எப்படி?" இந்த கேள்வி எனக்குள் வந்த போதெல்லாம், "அவளே உனக்குள் இருக்கையில் அவள் மனதுடன் பேசியது எப்படி கேட்காமல் போகும்?" என்றே என் "அறிவு" பதில் தரும். (ச்சும்மா..அறிவு இருக்குன்னு ஒரு தற்புகழ்ச்சி!)

இப்படியாய் நாட்கள் சென்று கொண்டிருக்க, அற்புதமான வாய்ப்பு கிடைத்தது அன்று தான்.

அன்று அவளுக்கு கடைசி பரீட்சை. அன்று மட்டும் அவள் சற்று பயப்படுவதாகவே தெரிந்தது.

அவள் பள்ளிக்கு போகும் கடைசிப் பேருந்து சென்று விட்டிருந்தது. நான் நண்பனிடம் கடன் வாங்கிய மோட்டார் சைக்கிளில் அவள் கண்ணெதிரே போவதும் வருவதுமாய் இருந்தேன்.

அவளுக்கு புரிந்திருக்க வேண்டும், என்னை சைகை காட்டி அழைத்தாள்.
"என்ன ஸ்கூல்ல ட்ராப் பண்றீங்களா?" "Of Course".. (பொண்ணுங்கள மடக்குறதுக்கு English தான் மச்சி கரெக்ட்.)

அவள் என் பின்னால் அமர்ந்திருக்க, அன்று தான் நான் பிறந்ததாக உணர்ந்தேன். அவள் ஏதாவது பேசுவாளா? என்று என் மனம் துடிப்பதை அறிந்தவளாக, "நீங்க என்ன பண்றீங்க?" என்றாள்.

"நான் இஞ்ஜினியரிங் படிக்கிறேன் மெட்ராஸ்ல.."
"மெட்ராஸ் எப்படி இருக்கும்?"
"அது சூப்பரா இருக்கும்."
"சூப்பர்னா?" "பெரிய பெரிய சினிமா தியேட்டர், பெரிய பீச், அப்புறம் நிறைய.."
"ஓஹோ...அப்புறம், நீங்க நல்லா படிப்பீங்களா?" "ஆமா, இப்பவும் நான் தான் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட்." (என்ன தைரியம்..? அவள் வந்தா கேட்கப்போறா.!)

அப்படியே பேசியபடி அவளை பள்ளியில் விட்டு வந்தேன்.
அன்று நான் தூங்கப் போவதில்லை என்பது எனக்கு தெரிந்து போனது.

இப்படியே போய்க் கொண்டிருந்த வாழ்வில் ஒரு திடீர் பிரளயம் நடந்தது அன்று.

தேதி கூட நினைவில் உண்டு.

அவளை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் ஆக்ஸிடென்ட்டில் மொத்தமாக போய் விட்டனர்.

அவள் அழுது பார்த்தது அன்று தான். இதில் அவள் தவறு என்ன? எனக்கு புரியவில்லை.

ஆண்டவன் ஏன் இப்படி செய்தான்?. அவளை ராசி இல்லை என ஊர் ஒதுக்கியது.

நான் மட்டும் தைரியமாக அவளுடன் பேசுவேன். ஒரு நாள் அவளுடைய தந்தை என் அப்பாவுடன் சிறிது நேரம் பேசி விட்டு போனார்.

அன்றோடு அவர்கள் ரயிலேறி விட்டனர்.
இப்போது அவள் எப்படி இருப்பாள்? என்ன செய்து கொண்டு இருப்பாள்?

என் பேத்திக்கு அவள் பெயர் வைத்தது, அப்படியாவது அவளை கூப்பிடத்தானே?

இப்படியே எத்தனை காதல் மரித்துப் போயிருக்கும்?

பி.கு.: நான் இருக்கும் தெருவில் கோலம் போடும் வீடுகள் இல்லை, கல்யாண வயதில் பெண்களும் இல்லை. இப்படி எல்லாம் நடந்தால்..!

ஆண்

குழந்தை பருவத்தில்
பெண்களெல்லாம் அன்னையர்!
சிறுவனாய் இருக்கையில்
சகோதரிகள்!
இள வயதில்
தோழிகள்!
திருமண வயதில்
..................!

தந்தையான பின்
மகள்கள்!
மரண வயதில்
தோழிகள்!
ஆனால் எந்த வயதிலும்
ஆண்
தறுதலை தான்
மற்றவர்களுக்கு.

சவூதி அரேபிய வாழ்க்கை! - ஒரு சிந்தனை

கனவுகளுடன் விமானம் ஏறி கையசைத்தேன்.

காகிதங்களுடன் போராடலாம் என்றிருந்தேன்.

இங்கே கற்களுடனும் கான்க்ரீட்டுடனும் போராட்டம்.

தமிழ் மட்டுமே போதும் என்றிருந்த என்னை மலையாளத்தின் அருமை புரிய வைத்த தேசம்.

காதலி கண்ணீர் துளியில் நான் எண்ணெய் வெளியில்
மரித்துப் போனது சொந்தம் மட்டுமா? என் மனிதமும் கூடத்தான்.

பணத்திற்காக பாலைவனத்தில் நான் இருக்க...
பாசத்திற்காக ஏங்கும் நாட்கள் மிச்சமிருக்க....
மோரும் பழங்களும் மட்டுமே உணவான நாட்களும் உண்டு.

உறக்கம் வராமல் புறண்ட நாட்களும் உண்டு.

என்ன தான் உழைத்தாலும் உண்மையில் என்னவோ மனதில் ஒரு வெற்றிடம் மட்டுமே மிச்சம்.

எதிர் பார்ப்போம் ஏதாவது நல்லது நடக்குமா
நம் குடும்பத்திற்கு!

அப்பா

நம்ம "அப்பா"வ பத்தி எழுதலாம்ல..."தவமாய் தவமிருந்து" படத்தில காட்டுற "ராஜ்கிரண் சார்" ஒரு மடங்குன்னா, எங்க அப்பா நூறு மடங்கு கஷ்டப்பட்டவர்.
அப்பா, இந்த மூன்றெழுத்து வார்த்தையின் அர்த்தம் என்ன?
கனவுகளுடன் கைகோர்த்து நடக்க கற்றுக் கொடுத்தவர். கண்ணீரின் வலிமையை அம்மாவின் கண்ணீரில் புரிய வைத்தவர்.
காதலின் மற்றொரு பரிமாணம் பாசம் என்றுணர்த்தியவர்.
காற்றாய், புயலாய் பூமி இருக்கையில் கால் வயிறு கஞ்சிக்காக என்னையும் வைத்து 15 கி.மீ. சைக்கிள் மிதித்தவர்.
என்னுடன் சேர்த்து நாங்கள் 6 குழந்தைகள், அதில் முதலாமவன் நான். மற்ற அனைவரும் சிறுவர்கள். கடைசியாக ஒரே ஒரு தங்கச்சி.
எங்கள் அனைவருக்கும், உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ செலவு, இத்யாதி, இத்யாதி....சற்று நினைத்துப் பாருங்கள்... எப்படி சாத்தியம்..மாதம் 1500 ரூபாய் சம்பளத்தில்?
குடும்பத்தை வழிநடத்துவது கவிதை எழுதுவதைப் போன்ற சுலபமான வேலையில்லை, எந்த IIMம் பாடமாக வைக்கவும் இல்லை.

நம் வாழ்வின் அசாத்திய நேரங்களில் நம்மை வழிநடத்துவது தந்தையின் அனுபவங்களே.

வாழ்வியல் ரீதியாக, நான் மற்றவர்களிடம் பழகும் போக்கில் என் தந்தையின் சாயலை அறியலாம்.

அனைவருக்கும் "ரோல் மாடல்" யார் என்றால், சச்சின் என்றோ, டாக்டர் அப்துல் கலாம் என்றோ, மற்றவர்களையோ சுட்டிக்காட்டுவார்கள்.
நான் என் தந்தையை சுட்டிக்காட்டுவேன். நான் சொல்வதில் எதுவும் மிகையில்லை.

இன்று ஏதோ ஒரு பாலைவன மதிய வேளை வெயிலில் ஷூவுடன் நடக்கும்போது, "வெறும் காலுடன் நடந்து கொண்டிருக்கையில் என் தந்தை என் வயதில் என்ன செய்து இருப்பார்?" என யோசிப்பேன்.

அவர் எங்களுக்காக கழனியில்* உழவு மாடுகளுடன் உழன்று கொண்டிருப்பார் என என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், ஒரு முறை கூட என் தந்தை அவர் பட்ட கஷ்டத்தை எங்களிடம் காட்டிக் கொண்டதில்லை.
நான் பத்தாம் வகுப்பில் 500க்கு 429 மார்க் மட்டுமே எடுத்தேன். ஆனால் நான் ஏதோ பெரிதாக சாதித்ததாக, என் ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் விருந்து வைத்தார். (முதல் வகுப்பு தொடங்கி அனைத்து ஆசிரியர்களையும்)

என் தந்தையை நான் ஆச்சர்யமாக பார்த்த நாட்கள் அவை. அந்த ஆச்சர்யம் இன்றும் தொடர்கின்றது.

நான் பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு சேருகையில், ஊரில் உள்ளவர்கள் என் தந்தையிடம்," உங்க பிள்ளையை சிங்கப்பூர், மலேசியா அனுப்பி வையுங்கள், உங்களின் குடும்ப பாரம் குறைந்த மாதிரி இருக்கும்" என்று சொல்லிப் பார்த்தனர். ஆனால் என் தந்தையோ, "அவன் படிக்க ஆசைப்படுகிறான், படிக்கட்டுமே!" என்றார். (என்னைக் கேட்காமலே...)
நான் பன்னிரண்டாம் வகுப்பில் 1200க்கு 911 மார்க் எடுத்தேன்.
அப்போதும் என் மீதான நம்பிக்கையை தந்தை இழந்து விடவில்லை.
யார் யாரையோ பார்த்து, எப்படியோ பொறியியல் கல்லூரி ஒன்றில் அப்ளிகேஷன் போட்டாயிற்று.

அந்த கல்லூரியில் தனியாக என்ட்ரென்ஸ் வைப்பார்கள். தமிழ் மீடியத்தில் படித்து ஆங்கிலத்தில் வைத்த பரீட்சையில் என்னையும் அறியாமலேயே முதலாவதாக வந்தேன். (நம்ம ஆங்கிலப் புலமை ரொம்ப அதிகம், காந்திஜி இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாம், கொஞ்சம் காத்திருந்தால், என்னுடைய ஆங்கில பேச்சிலேயே, ஆங்கிலேயர்கள் தலைதெறிக்க ஓடியிருப்பார்கள்.)

அதனால், கடவுள் கிருபையால், எனக்கு கல்விச் செலவு முழுமையும் கல்லூரியே ஏற்றுக் கொண்டது. ஆனாலும் எனது பயணச்செலவு, புத்தகம், நோட், இத்யாதிகளுக்கு நான் ஊருக்கு வரும்போது ரூ 500/- தருவார். அந்த காசை எப்படி புரட்டினார் என்பது இன்றும் எனக்கு புரியாத புதிர்.
எத்தனை கஷ்டங்கள் பட்டாலும், எங்களை கஷ்டப்படாமல் வளர்த்தார்.
ரம்ஜான் மாதத்தில் முதல் 2 அல்லது 3 நாட்கள் நோன்பு வைத்தபின், என் முகத்தைப் பார்த்து நோன்பு வைக்காதே என்று சொல்வார்.

பசி, அழுகை, சோகம் போன்று எதையும் எங்களுக்கு காட்டாதவர். ஆனால், தண்டனை கொடுப்பதில் தமிழ்நாடு போலீசைவிட கடுமையானவர்.
உதாரணத்திற்கு என் தம்பிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஒன்று.,
கையிரண்டையும் கட்டி, கால் இரண்டையும் கடுவார். பிறகு, கால்களை மடக்கி, கைகளுக்குள் நுழைத்து, கால் முட்டி, கை முட்டிகளை ஒரே நேர்கோட்டில் வைத்து ஒரு கம்பை நுழைத்து விடுவார்.
இப்போது, கையையும் பிரிக்க முடியாது, காலையும் பிரிக்க முடியாது, குனிந்த நிலையிலேயே, வெயிலில் சாக்கை விரித்து கிடத்தி விடுவார். இது குறைந்தபட்ச தண்டனை என்று கூட சொல்வார்.

ஆனால், அந்த தண்டனைக் காலம் முடிந்த பின் தனியாக அழைத்து கடையில் தின்பண்டம் வாங்கிக் கொடுத்து அறிவுரை சொல்வார், ஏன் அப்படி செய்தார்? நாங்கள் செய்த தவறு என்ன? என்பதாக.

இத்தனை கடுமையாக இன்று வரை இருந்தாலும் மனதிம் ஓரத்தில் எங்களுக்காக ஒரு அன்பான அப்பாவை மறைத்து வைத்திருக்கிறார் இப்போதும்.
---------------------------------------------------------------------------­---------
*கழனி - வயல்

சனி, 16 செப்டம்பர், 2006

லிஃப்ட் கொடுத்தவர்கள்.

காட்சி 1:
காலம்: கல்லூரியின் நான்காம் ஆண்டு 2003 ம் வருடம் நவம்பர் மாதம், சனிக்கிழமை.
இடம்: கல்லூரி விடுதி.

அதிகாலை சுப்ரபாதத்திற்கு பதிலாக நண்பனின் திட்டுக்களுடன் விடிந்தது பொழுது.

"மச்சான், இன்னக்கி எழுத்துத்தேர்வு, சீக்கிரம் கிளம்பு".
"நடு ராத்திரி 5:00 மணிக்கி ஏண்டா டிஸ்டர்ப் பண்றே?, த்ரிஷா கனவுடா..கெடுத்திடியே!"
"உன்னோட வாழ்க்கைக்காக சொன்னேன். எனக்கு என்ன? நீ தூங்கு!".
"நமக்கு மேல வகுப்பில 11 பேர் இருக்காங்க... நம்மலயா செலெக்ட் பண்ண போறாங்க"


சிறிது நேரம் கழித்து,
"மச்சான், மணி என்னடா?" - இது நான்.
"8:00 ஆக போகுது."
"என்னாது எட்டா? ஏண்டா எழுப்பலே?, நண்பனுக்கு ஹெல்ப் பண்ணவே மாட்டேங்கிறாங்க., நான் குளிச்சுட்டு வர்றேன், நீ சாப்பிடு, டெஸ்ட்க்கு போய்டாதே."
"சரி சரி. சீக்கிரம் வந்து தொலை"

காட்சி 2:
காலம்: அதே நாள் காலை 10 மணி
இடம்: எல்&டி அலுவலகம்.

"மச்சான், ப்ரிபேர் (Prepare) பண்ணிட்டியா?"
"பிட் அடிக்க தான் ப்ரிபேர் பண்ணணும், சொந்தமா எழுத ப்ரிபேர் தேவையில்லை. அதோ பார் டெஸ்ட் பேப்பர் எடுத்துட்டு வர்றாங்க" - இது நான்.

"Dear Friends, please fill up the friend page & until I say Don't Open next pages (நண்பர்களே! தங்களைப் பற்றிய விபரங்களை முதல் பக்கத்தில் எழுதிவிட்டு எனது அறிவிப்புக்காக காத்திருங்கள், அடுத்த பக்கங்களை திருப்பாதீர்கள்)" - அலுவலர்.

"மச்சான், கொல்றாங்கடா... பெரிய GATE exam மாதிரி.! (பொறியியல் மேற்படிப்புக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வு) "

"கேள்வி எப்படி இருக்கும்?"

பலவாறான எண்ணங்கள், பேச்சுகள்.

"மச்சான், டெஸ்ட் முடிஞ்சாச்சு. சாப்பாடு?"
"ஆபிசர் வர்றார்டா.. கேட்டுறப்போறார், மெதுவா பேசு"

"Results will be announced later in the evening. Company has arranged lunch Downstairs"
(முடிவுகள் மாலை அறிவிக்கப்படும், மதிய உணவு கீழே தயாராக இருக்கிறது) - இது அலுவலர்.

"அவர் கேட்டுட்டார்னு நினைக்கிறேன். எது எப்படியோ, சாமி சோறு போடுது. டெஸ்ட்ல பெயிலானாலும் பரவாயில்ல, நல்ல சாப்பாடு."

காட்சி 3:
காலம்: அதே நாள் மாலை 4 மணி
இடம்: எல்&டி அலுவலகம்.

"கிரசண்ட் கல்லூரி, சிவில் பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்,
1. ஜுக்னு
2. ஐனுல்"

"மச்சான், எல்லா காலேஜ்லயும் இரண்டு பேர்தான் செலெக்ட் பண்றாங்கடா, நம்ம காலேஜ்ல ரெண்டும் பொண்ணுங்க தாண்டா..."

"3. ராம் ப்ரசாத்"

"என்னடா மச்சான், நம்ம அய்யர் பேர் வரல"

"4. அரவிந்த் ஸ்ரீனிவாஸ்"

"முடிஞ்சது, அய்யர் பேர் வந்தாச்சு. நமக்கு அவ்ளோ தான்"

"5. அஹமது சுபைரா"

"சார் அது சுபைரா இல்ல சார், சுபைர் A" - நண்பன்

வானில் சிறகின்றி பறக்கிறேன்.

வகுப்பில் 12 வது ரேங்க் எடுத்தாலும், செலெக்ட் ஆன டாப் 5 பேர்ல நானும் ஒருத்தன்.

"O.K. Selected People wait here to attend the GD now."

(தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் காத்திருக்கவும், இப்போது GD நடக்க இருக்கிறது.)

"மச்சான், 5 மணிக்கு எழுப்பினா எந்திரிக்கல.. ஆனா தூங்கிக்கிட்டே ஜெயிச்சுட்ட"
"தேங்க்ஸ்டா..."
"ஆல் த பெஸ்ட்"

காட்சி 4:
காலம்: அதே நாள் மாலை 5 மணி
இடம்: L&T அலுவலகம்.

"GDனா என்னடா?" - இது நான்.
"Group Discussion, அது அரட்டை அரங்கம் மாதிரிடா..ஆனால் இங்கிலீஷ்ல பேசணும்"- இது என் நண்பன் பாலாஜி மின்னியல் துறை.
"நல்லதா போச்சு, தமிழ்னா பரவாயில்ல...(கவனிக்கவும் பரவாயில்ல..ஏன்னா நம்ம தமிழ் அதுமாதிரி..)நாம இங்கிலீஷ்ல பேசினா எல்லாம் ஓடிடுவாங்களேடா..."
"பரவாயில்ல. முயற்சி பண்ணுவோம்..."

காட்சி 5:
காலம்: அதே நாள் இரவு 10 மணி
இடம்: விடுதி

"மச்சான் காலைல சீக்கிரம் இன்டர்வியூ போகணும், எழுப்பி விட்டுடுடா.." - இது நான்.
"நான் பெயிலாயிட்டேன், எனக்கு மனசு கஷ்டமா இருக்கு...உன்ன எழுப்ப முடியாது"
"டே..உனக்கு முத்து குளிக்கிறது தெரியுமா?"
"இப்ப எதுக்குடா அத கேட்குற...?"
"தெரியுமா...இல்லயா?"
"தெரியாது."
"அந்த முத்து குளிக்கிறவன் இடுப்பில ஒரு கயிறு கட்டிக்கிட்டு, மறுமுனையை ஒருத்தன்கிட்ட கொடுத்துட்டு உள்ள குதிப்பான். அந்த ஒருத்தன் யாரு தெரியுமா, கடல்ல குதிக்கிறவனோட மச்சான்."
"அதுக்கென்ன இப்போ..."
"நான் உன்ன மச்சான்னு கூப்பிடுறது விளையாட்டுக்கு இல்லடா...உனக்கு அக்கா, தங்கச்சி யாரும் இல்லன்னு எனக்கு தெரியும், ஆனாலும் நான் யார கட்டிக்கிட்டாலும் அவ உனக்கு தங்கச்சி தானடா..., நான் கடல்ல முத்து குளிக்க போற மாதிரி நினச்சுக்கோ..காலைல எந்திரிக்கணும்..அப்புறம் உன்னோட இஷ்டம்.."
"நெஞ்ச நக்கிட்ட...போய் தூங்கு... நான் எழுப்பி விடுறேன்."

மற்றொரு நண்பன்,
"டே! அவன இவ்வளவு சமாதானம் பண்றதுக்கு ஒரு அலாரம் வச்சா போதுமே.."
"போடா லூஸு...அவன் முகத்தில முழிச்சதால தான் நான் டெஸ்ட்ல பாசானேன். அவன் முகத்தில முழிச்சாதான் இன்டெர்வியூ நல்லா பண்ண முடியும்."

காட்சி 6:
காலம்: அடுத்த நாள் காலை 8 மணி
இடம்: விடுதி

"மச்சான், கிளம்பு...வண்டி எடுத்துட்டு வரவா?" - என் நண்பன்.
"இல்லடா... நான் பஸ்ஸிலயே போய்க்கிறேன்"
"10 மணிக்கு இன்டர்வியூ, வெறும் வயித்தோட போகாதே, கிண்டி சங்கீதால ஏதாவது சாப்பிட்டுட்டு போ...!"
"சரிடா...மச்சான், ஷூ இல்லடா...இப்ப என்ன பண்றது?"
"எல்லாம் கடைசி நேரத்தில கேளு, நான் அரேஞ்ச் பண்றேன், நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா."
"மச்சான், நல்ல சட்டை கூட இல்லடா..."
"சரி என் சட்டையை அயன் பண்ணி வைக்கிறேன். நீ இன்டர்வியூ போறதுக்கு நான் தான் கஷ்டப்படுறேன்"

காட்சி 7:
காலம்: அடுத்த நாள் காலை 9 மணி
இடம்: வண்டலூர் மிருகக்காட்சி சாலை பேருந்து நிறுத்தம்.

"PP18 வர்ற மாதிரி தெரியுது" - இது நான்.
"ஆமா மச்சான், சில்லறை வச்சிருக்கியா, கண்டக்டர் கத்துவாரு."
"ஹ்ம். இருக்கு"
"கூட்டமா இருக்கு, வண்டி எடுத்துட்டு வரட்டுமா?"
"இல்லடா..நீ கஷ்டப்படாதே..பார்த்துக்கலாம்"
"கண்டக்டர் சார், மச்சான பத்திரமா கொண்டு போய் சேர்த்திடுங்க." - நண்பன்
"ஆமா இவர் ஒருத்தர்க்கு மட்டும் தான் மச்சான் இருக்காங்களா...இங்க எல்லாரும் இன்னொருத்தங்களுக்கு மச்சான் தாம்லே.."-கண்டக்டர்
"இல்ல சார், பையன் இன்டர்வியூக்கு போறான், அதான்..."
"சரி ரைட்"
"ஆல் த பெஸ்ட் டா.."

கண்டக்டரின் வசனங்கள்...
"யாருப்பா அது, படியில தொங்கிட்டு வர்றது...உள்ள வாப்பா.."
"ராஜா, கீழ விழணும்னு நினெச்சா இன்னொரு வண்டில விழுடா...என் தாலிய அறுக்காதே"

தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் நிறுத்தங்கள் கடந்தன...

"ஐய்யய்யோ...வண்டிய நிறுத்துங்க...படில தொங்கிட்டிருந்த பய விழுந்துட்டான்"
"அவன கண்டக்டர் அப்பவே சொன்னார். அவன் கேட்கல...பெரிய அடியா?"
"இல்லங்க...தப்பிச்சிட்டான்.."
"இந்த அரசாங்கம் ஏன் நிறைய வண்டி விட மாட்டேங்கிதோ.."

எல்லோரும் அவரவர் கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்க,
எதிர் சாரியில்
நின்று கொண்டிருக்கும்
தேவதை என் கருத்துக்களை
தின்று கொண்டிருந்தாள்.

அசரீரி குரல் கேட்டு விழித்தெழுந்தேன். "அடங்குடா..இன்னக்கி உனக்கு இன்டர்வியூ"

கற்பனை சிறகடிக்கும் நேரங்களில் எப்படியோ தடங்கள்கள் தவறாமல் வந்துவிடுகிறது.

"என்னப்பா..வண்டி போகலே...கீழ விழுந்தவன் தான் வந்து ஏறிட்டான்ல...போலாம் ரைட்..."
"அண்ணே வண்டி ப்ரேக் டவ்ன். இனி போகாது"

"மணி என்ன ஆச்சு?" - இது நான்.
"09:40 ஆச்சு" - யாரோ.

சே! ஒழுங்கா கிளம்பி இருந்தா எந்த பிரச்னையும் இல்ல...இப்ப என்ன பண்றது. லிஃப்ட் கிடைக்குமா..பலவாறான எண்ணங்கள். ஏர்போர்ட் காம்பௌண்டுக்கு வெளியில் கால் கடுக்க லிஃப்ட் கேட்டேன்.

"தம்பி, எங்க போகணும்." - ஒரு பைக் அருகில் நின்றது.
"நான் எல்&டி இன்டர்வியூ போகணும். பூந்தமல்லீ ரோட். என்ன கிண்டில விட்டுட்டீங்கன்னா, நான் ஷேர் ஆட்டோ பிடிச்சு போய்டுவென்"
"தம்பி நான் கோயம்பேடு போகணும் பா.."
"பரவாயில்ல.. ஏறிக்கோ. நான் ரவுண்டானால விட்டுர்றேன்."
"ரொம்ப நன்றிங்க.."
"என்ன படிக்கிறீங்க..."
"நான் சிவில் இன்ஜினியரிங் கடைசி வருசம், நீங்க எங்க சார் வேலை பார்க்கிறீங்க...?"
"நான் ஒரு சின்ன கம்பெனில சேல்ஸ்ல இருக்கேன், நான் கூட மெக்கானிக்கல் இன்ஜினியர் தான்"
"எல்&டில இன்டர்வியூக்கு கூப்பிட்டதே பெரிய விஷயம், பயமில்லாம இரு. உனக்கு தான் வேலை."
"ரொம்ப நன்றிங்க...சார் நீங்க கிண்டி பக்கம் போறீங்க"
"தெரியும்பா...எனக்கு உதவி பண்ண யாரும் இல்ல..உன்னய கிண்டில இறக்கி விட்டுர்றேன். நீயாவது நல்லாயிரு."

"எல்லாரும் லிஃப்ட் கொடுத்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில இறக்கி விட்டு விடுவார்கள். நீங்கள் என்னை உயர்த்தி விட்டிருக்கிறீர்கள். ரொம்ப தேங்க்ஸ்"

"பரவாயில்லப்பா..ஆல் த பெஸ்ட்".

பி.கு.:
இன்று அதே கம்பெனியில் வேளை கிடைத்து நல்ல நிலையில் இருக்கிறேன். அந்த முகம் தெரியாத நண்பர் கொடுத்த லிஃப்டும், முகம் தெரிந்த கல்லூரி நண்பன் கொடுத்த லிஃப்டும் தான், நான் சிறப்பாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், நன்றாக இருக்கிறேன் என்று சொல்ல வைத்தது.

"இதனை போட்டிக்கு அனுப்புவதின் முக்கிய நோக்கம் வெற்றி பெறுவதல்ல. நான் இன்னும் அவர்களை மறக்கவில்லை, அதைப் போல் உதவி பெற்ற யாரும் அதனை மறக்க மாட்டார்கள் என உலகிற்கு உணர்த்தவே.."