ஞாயிறு, 10 மே, 2009

எழுத்துக்கூடத்தில் ஒலித்த என் குரல் - அரசியல்

நண்பர்களுக்கு,

எழுத்துக்கூடம் என்ற குழுமம் சவூதி தலைநகர் ரியாதில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

அதில் உறுப்பினர்களாக நண்பர் நாக.இளங்கோவன், அண்ணன் ஆசாத், நண்பர் கேவிராஜா, மற்றும்  நண்பர் இப்னு ஹம்துன் முதலானோர் இருக்கின்றனர். (என்னையும் சேர்த்து..)

பேராசிரியர் பெரியார்தாசன் சிறப்பு அழைப்பாளராக வெள்ளிக்கிழமை ரியாத் எழுத்துக்கூட கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் தலைமையில் கவியரங்கத்தில் ஏதாவது ஒரு தலைப்பில் பாட கேட்டுக்கொள்ளப் பட்டோம்..


கவிதையை இங்கிருந்து தட்டச்சி அனுப்பினேன். இது மட்டும் போதாதென்று என்னுடைய குரலில் பதிவு செய்திருக்கிறேன்.

அந்த கவிதை இதோ...!

அரசியல்

கலர்கலரா கரைவேட்டி
கைகூப்பி வந்திடுவார்
கண்டபடி பேசிவிட்டு
'கருத்தில்லை' என்றிடுவார்

பலமனிதர் தமைசேர்த்து
பிரியாணி போட்டிடுவார்
பக்கத்தில் தேர்தல்தான்
பார்ப்பவரும் புரிந்திடுவார்

சிலசமயம் இனமானம்
சவுண்டாகச் சொல்லிடுவார்
சில்லறைகள் தேறிவிட்டால்
மொத்தமாக மறந்திடுவார்

கலகமதை ஏற்படுத்தி
குளிர்தானே காய்ந்திடுவார்
கண்டவர்கள் கேட்டுவிட்டால்
'சகஜமப்பா' என்றிடுவார்

நேற்றைக்கு வேறுபேச்சு
இன்றைக்கு வேறுபேச்சு
நேரத்தில் தக்கபடி
நிலைமையினை மாற்றிடுவார்

காற்றுக்கு மேல்வருவார்
காணாமல் போய்விடுவார்
காட்டுகிற கவனத்தில்
கண்ணீரும் பன்னீராய்.

தூற்றுவதில் போற்றுவதில்
தாண்டிடவும் முடியாது
தேர்ந்தெடுக்கும் வார்த்தைக்கே
அகராதி கிடையாது

தோற்றாலும் ஒட்டவில்லை
மீசையிலே மண்ணென்பார்
தோதாக காரணத்தை
தோரணமாய் கட்டிவைப்பார்.

கண்டபடி திட்டியபின்
கூட்டணிக்கு கால்பிடிப்பார்
கண்டித்து கேட்டுவிட்டால்
காரணத்தின் வால்பிடிப்பார்

மண்டையிலே ஏதுமின்றி
மாபழிகள் சுமத்திடுவார்
மயங்கிவிட்டால் மண்டையிலே
மசாலாவை அரைத்திடுவார்

திண்ணையிலே கழிக்கின்ற
திருவாளர் நாவெல்லாம்
தினசரியும் வந்திருந்து
திளைக்கின்ற பேர்வழிகள்

பண்ணையகம் போயிடுவார்
பொழுதுகளை கழிப்பதற்கு
பாராளச் செல்வதாக
பசப்புகளைச் சொல்லிவிட்டு.

சாக்கடையில் நாற்றத்தை
செய்கின்ற குப்பைகளை
சேர்க்காமல் இருந்தாலே
சுகம்பெறுமே எம்தேசம்

பூக்கடையாய் அரசியலை
பார்க்கின்ற ஏக்கத்தை
பெருஞ்செயலால் தொடங்கிடுவோம்
பாராட்டு தேடிவரும்

தேக்கடையில் கூடுகின்ற
தீப்பழக்கம் விட்டுவிட்டு
தேசத்தின் நலங்காக்க
தொடங்கிடுவோம் நம்முயற்சி

வாக்குடையோம் நாமெல்லாம்
வாய்ப்புடையோம் என்பதனால்
வேண்டியொரு கவியளித்தேன்
ஒழுங்காகச் சிந்திப்பீரே!