சனி, 19 டிசம்பர், 2009

இரு திரைப்படங்கள் (வேட்டைக்காரன், அவதார்)

திரைப்படங்கள் நம் வாழ்வின் செய்ய முடியாத எண்ணங்களை செய்யக்கூடிய மனிதனாக நம்மை உணரச்செய்பவை என்ற எண்ணங்கள் எப்போதும் என் மனதில் இருக்கும்.


வெற்றி என்ற ஒன்றை மட்டுமே பெறும் ஹீரோக்கள் ஃபேண்டஸி ட்ரீம்களின் பிரதிபலிப்புகள்.

நமது காலங்களில் நாம் செய்ய இயலா செயல்களை ஹீரோக்கள் செய்யும்போது நமக்கு மிகவும் பிடித்தமாய் இருக்கிறது. அப்படிப்பட்ட மாஸ் ஹீரோக்களில் ஒருவர் தான் விஜய்.

நாலு பாட்டு, நாற்பது பேருக்கு அடி, ரெண்டு சோக காட்சி... எல்லாம் இருக்கும் படம் வேட்டைக்காரன்.

அனுஷ்கா அவ்வளவு அழகு... ஆனா டான்ஸ் வரல... நடிப்பு வரல... சும்மா பொம்மை மாதிரி வந்து போறாங்க...விஜய் பையன் அழகு...சூப்பரா இருக்கான். தத்தி மாதிரி பையன் விஜயையே அவங்க அப்பா இம்புட்டு தூரம் கொண்டு வந்திருக்கார். அவர் பையன் இன்னும் அழகா இருக்கான். பார்க்கலாம்...

படத்துல இன்னொரு விஷயம் வில்லன்கள். வேதநாயகம்னா பயம்னு சொல்லும் போது நல்லா இருக்கு.

ஆனா தேவையில்லாம கேரக்டருங்க வந்து போறது ரொம்ப ஓவரு.. கூடப்படிக்கிற பொண்ணுக்கு அண்ணனாத்தான் இருக்கணும்னு ஒரு விதி வேற... இந்த ஆபாசக் கலாச்சாரத்தை (நன்றி: மனுஷ்யபுத்திரன்) என்ன செய்வது??

காமெடிக்குன்னு யாரையும் ஸ்பெஷலா போடல.. ஏன்னா விஜய் பஞ்ச் டையலாக்கே போதும்னு நினைச்சிருப்பாங்க போல... இயக்குனருக்கு முதல் படம், தில், பாட்ஷா படங்களை அப்படியே மிக்ஸில அடிச்சு கொடுத்திருக்கார்.

வேட்டைக்காரன் - தமிழ் மனங்களில் வெற்றி நடை போடும்.. சீக்கிரமே சன் டி.வி.ல ;-)

இரண்டாம் திரைப்படம் - அவதார். ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படம் பார்த்த அதே மன ஓட்டத்தில் போனால் அவதாரில் சிறப்பென்று எதுவும் இல்லை.. ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் தவிர..

கால் நடக்க முடியாத ஹீரோ, வேற்றுக்கிரகத்தின் மலைகளில் கிடைக்கும் அபூர்வ உலோகத்தை ஆட்டயைப் போடும் மனித இனத்தின் ரெப்ரசண்டேடிவ். அதுக்கு ஒரு சயிண்டிஸ்ட் கும்பல், செக்யூரிட்டி கும்பல், மிதக்கும் மலை, அபூர்வ உயிரினிங்கள்...

வாவ்... 3D எஃபக்ட்ல சும்மா அட்டகாசம் பண்ணி இருக்கார் இயக்குனர்.

மனித இனம் எப்படி இருந்திக்கும் சில காலங்களுக்கு முன் என்பதை நினைத்தாலெ மெய் சிலிர்க்கிறது. தலைவரின் பேச்சை தலைகீழாய் நின்றாவது முடிக்க ஆசைப்படும் கூட்டம்.

ஏகப்பட்ட வித்தியாசமான காட்சியமைப்புகள்.. கால் நடக்க முடியாத ஹீரோ கூடு விட்டு கூடு பாய்ந்து புதிய பிறவி எடுப்பதைப் போல இன்னொரு உடலில் புகுந்து மண்ணைக் காலால் தடவும் இடம் கவிதை...

வேற்றுக்கிரக பெண்ணுடன் காதலும், காமமும்...வாவ்... அழகான கவிதையை மூன்றாம் பரிமாணத்துடன் காட்டும் அழகு...

ஒவ்வொரு உயிரினத்துக்கும் உண்டான ஸ்பெஷல் அழகு... மிருகங்கள்..அவைகளின் உதவி..

மனிதனின் ஆசை...அது என்றும் அடங்காது... ஆனால் ஆசை தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உத்வேகம் தருகிறது. வேறோர் உலகம் எப்படி இருக்கும், எப்படி சுவாசிக்கலாம்...எப்படி இருப்பார்கள்..??இதுபோன்ற கற்பனைக்கு உருவம் கொடுத்த இயக்குனருக்கும், கிராஃபிக்ஸ் வல்லுனர்களுக்கும், அதன் உழைப்பில் கலந்த ஒவ்வொருவருக்கும் சல்யூட்.

அழகான அந்த பைலட் பொண்ணுக்காக (Michelle Rodriguez) இன்னொரு தடவை பார்க்கலாம் ;-)அவதார் - எஃபக்ட்ஸ்க்காக.

வியாழன், 17 டிசம்பர், 2009

குசும்பனுக்கு பிறந்தநாள்..

குசும்பன் என்ற இமயம் எங்களுடன் வாழ்வதில் நாங்கள் பேருவகை கொள்கிறோம்..
அன்னாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்த வயதில்லை.. அதனால்.... (இதுக்கு மேல முடியல... கண்ணைக்கட்டுது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)வாழ்த்துகள் குசும்பன்... ;-)இப்படிக்கு,சுபைர்

குசும்பனைக் கலாய்ப்போர் சங்கம் (கு.க.ச.)

அமீரகம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

இனியவை 50 - வெண்பா 1

புது முயற்சியாக வெண்பாவில் 50 கவிதைகள் எழுத விருப்பம். தங்களின் ஆதரவு வேண்டும்..


முதல் வெண்பா இறை வாழ்த்து...

கடலாய் அறிவும் கருத்தால் செறிவும்
உடலால் பணிவும் படலாய் பணமும்
திடமாய் மனமும் கடமை நினைவும்
தருவாய் இறைவா எனக்கு!

சனி, 21 நவம்பர், 2009

குர்பான் - திரை விமர்சனம்

நேற்று மாலை நண்பர்களுடன் வெளியில் சென்ற வேளையில், சினிமா சிட்டி என்று புதிதாய் திறந்துள்ள மல்டிப்ளக்ஸ் பற்றிய பேச்சு வந்தது. என்ன தான் இருக்கிறது பார்ப்போமே என்று போனால் அங்கே ”குர்பான்” என்ற ஹிந்தி திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. சைஃப் அலிகான் என்ற நடிகன் நடிப்பில் முன்னேறி வருபவர் என்ற வகையில் உன்னிப்பாக கவனித்து வருவதால் அந்த படத்திற்கு போக முடிவு செய்தோம்.

குர்பான் - திரைப்படத்தின் கதையொன்றும் சிறப்பானது என்று சொல்ல முடியாது. நியூயார்க் என்ற கத்ரினா கைஃப் திரைப்படம் போன்றதே.புரபசர் அவந்திகாவுடன் புரபசர் இஹ்சானுக்கு காதல் பூக்கும் காட்சிகள் கொள்ளை அழகு.. இதுமாதிரிலாம் நமக்கு தோணவே இல்லையேன்னு நினைத்துக்கொண்டேன். (அப்படியே தோணியிருந்தாலும் டங்குவாரு அந்திருக்கும்)அவந்திகாவை திருமணம் செய்ய விருப்பம் கேட்டு அவரின் அப்பாவிடம் பேசும் வசனங்கள் ஷார்ப்.அமெரிக்கா போகும் இந்த குடும்பம் எதிர்வீட்டு இஸ்லாமிய குடும்பத்தாரை சந்திக்க நேர்கிறது. அந்த குடும்பம் முழுக்க இஸ்லாமிய கோட்பாடுகளில் முழுக்க வேரூன்றி இருக்கிறது. அந்த வீட்டில் ஒரு பெண் தன்னை வேலை செய்ய அனுமதிப்பதில்லை என்பதை சொல்லும் வசனம் சிறப்பு.இதிலே சம்பந்தமே இல்லாமல் விவேக் ஓபராய் ரியாஸ் மசூத் என்ற பெயரில். செய்தித் தொலைக்காட்சியில் கேமராமேன். ரியாஸ் மசூத் காதலைச் சொல்லும் காட்சி ஒரு கவிதை. Do you want me to go down on one knee.. :-)விவேக் ஓபராயின் காதலி ஒரு குண்டுவெடிப்பில் இறந்து போகிறார். அதற்கு பழிவாங்கத் துடிக்கும் விவேக், போய் நிற்பது கரீனாவின் வீட்டில்.இதே நேரம் குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் நபர்களில் முக்கியமானவர் சைஃப் அலிகான் என கரீனாவுக்கு தெரியவருகிறது.இனி நடப்பவைகளை வெண்திரையில் காண்க..திரைப்படத்தின் சிறப்பம்சம் இசை. சலீம் மெர்சண்ட் & சுலைமான் மெர்ச்சண்டின் இசை நம்மை இருக்கை நுனிக்கு கொண்டு வருகிறது. கரன் ஜோஹரின் கதை என்கிறார்கள். மனுசனுக்கு மக்களின் நாடித்துடிப்பு சரியா கிடைச்சிருக்கு..இந்த திரைப்படம் என்னை உலுக்கிய இடங்கள்..1. எவ்வளவு தான் படித்த பெண்களாய் இருந்தாலும் ஒரு நிமிடத்தில் தடுமாறிப் போகிறார்கள்.

2. Islamic Fundamentalist - இஸ்லாமிய அடிப்படை வாதம் என்பது பலரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

3. கல்லூரியில் நடக்கும் விவாதத்தில் அமெரிக்கப் பெண் கேட்கும் கேள்விகள், அதற்கு விவேக் ஓபராயின் பதில்கள்.

4. ”ஆபா”வின் காரணங்கள்

5. அமெரிக்கர்களின் தொழில் ஈடுபாடு.. (சாகப்போவது தெரிந்தும் மற்றவர்களைக் காக்க நினைத்த வீரம் Agent Hayes..)இஸ்லாமியர்களை ஒட்டு மொத்தமாக குறைசொல்ல முடியாது என்றாலும் 9/11க்குப் பிறகு இஸ்லாமியர்களை மற்றவர்கள் பார்க்கும் பார்வை மாறி இருக்கிறது.நண்பர்களுக்கு..இந்த படம் பார்த்தால், ஏற்றுக்கொள்வீர்கள், வெறுப்பீர்கள், சில விவாதங்களில் குழப்பமடைவீர்கள், சில விவாதங்கள் சூடேற்றும். ஆனால் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.குர்பான் - தியாகம்.

சனி, 29 ஆகஸ்ட், 2009

அமீரக பதிவர்களின் இஃப்தார் விருந்து - 28.8.09

அமீரக பதிவர்களின் இஃப்தார் விருந்து

இறைவனின் கொடைகளில் சிறந்தவைகளே நமக்கு கிடைத்திருக்கிறது என்று ஒவ்வொரு கணமும் எண்ணி பூரிப்படையும் தருணங்களை நாம் பெற்றிருக்கிறோம்.

அது போன்ற ஒரு நிகழ்வு தான் 28ம் தேதி ஆகஸ்டு மாதம் ஷார்ஜா சத்திரத்தில் நிகழ்ந்த இஃப்தார் விருந்து.

உலகின் உன்னத நிமிடங்களை நாம் இந்த வேகமான சூழ்நிலையில் மறந்துபோகிறோம் என்பதனை உணர்த்திய மாலை.
வெள்ளிக் கிழமை மதிய வேளை உறக்கம் என்பதை இழந்து மஞ்சள் பூசிய பெண்ணைப் போல வானம் தன் பொலிவினைப் பெறும் மாலை நேரம். 4 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்ட ஆசாத் அண்ணனின் ரதம் கரவைக் குரல் தினேஷை எடுத்துக்கொண்டு என் வீட்டு வாசல் வந்தடைந்த போது மாலை 4:45 மணி.

”மஸ்டா 6” ல் புறப்பட்டு ஒரு வழியாய், அண்ணாச்சி வீட்டிலிருந்து 10 நிமிட நடையில் வாகனத்தை நிறுத்தி வழிகேட்டு 6 மணி சுமாருக்கு சத்திரத்தை அடைந்தோம்.

சாப்பாடு என்றால் எனக்கு சரிநிகர் சமானமாக கொள்ளத்தக்க நண்பன் குசும்பன் அங்கே எங்களை வரவேற்றார். என் வயதொத்த நண்பர்களுடன், எழுத்துக்களால் இணைந்த இதயங்களுடன் அளவளாவுவது ஆழ்ந்த மன மகிழ்வைத் தருகிறது.இப்தாருக்காக எல்லாமும் செய்து வைக்கப்பட்டிருக்க, நோன்பு திறந்தவுடன் நோன்புக்கஞ்சியும், ஹலீமும் என்னிடம் படாத பாடு பட்டன. (சரியாக ஒரு ஆண்டிற்குப் பிறகு)

பிறகு சுல்தான் பாய் இமாமாக தொழ வைக்க மஃரிப் தொழுதோம்.

டீச்சர் குடும்பம் (ஜெஸிலாக்கா & பேமிலி), படகும் துடுப்பும் (சஃபீனாக்காவின் பேமிலி), ”வடை” ராமன் குடும்பம், லொடுக்கு (அ) ஃபாஸ்ட்பௌலர் குடும்பம் - அனைவரும் குடும்ப சகிதமாய் வந்தது மனதுக்கு ஒரு திருப்தியைத் தந்தது. பதிவர் சந்திப்பு என்பது குடும்ப சகிதமாய் கலந்து கொள்ளக்கூடிய ஒரு கூடல் நிகழ்வு என்ற சந்தோசம் முக்கியமாய் பட்டது. ”தன் சுய அரிப்பை சொறிந்து கொள்ளவே பதிவு எழுதுகிறோம்” என்பவர்கள் மத்தியில் ஒரு சமூக சூழலின் நட்பின் ஆதரமாய், குடும்பமாய், குழு நிகழ்வாக மாற்றியிருக்கும் இந்த சந்திப்புகள் அடிக்கடி நிகழ வேண்டும்.

’நண்பன்’ ஷாஜி, முத்துக்குமரன், பினாத்தல் சுரேஷ் முதலானோர் கலந்து கொண்ட கூட்டத்தில் நாமும் கலந்து கொண்ட ஆனந்தம் கிடைத்தது என்றால் அது மிகையல்ல.

ஆசிப் அண்ணாவின் சிறிய முன்னுரையுடன் ஆரம்பித்த இப்தாருக்கு பின்னரான நிகழ்வுகள் ராஜா கமாலின் கவிதை புத்தக வெளியீட்டுடன் துவங்கியது.

பிறகு வழக்கம் போல் நாரதர் வேலையை நான் ஆரம்பித்தேன். செந்திலின் ஒரு பதிவில் திரைப்படத்தைப் பற்றி நல்ல விஷயங்களையும் கூறலாமே என்ற கருத்தை ஏன் ஆதரிக்கக்கூடாது? என்று என் முதல் பிட்டைப் போட்டேன். பிறகு அது பத்திக்கொண்டு எரிந்தது. (கந்தசாமி படத்துல ஏதுடா நல்லவிஷயம்னு நான் கேட்டதுக்கு குசும்பன் ஸ்ரியா என்றார். அதை நான் இங்கே சொல்ல மாட்டேன்)

எப்போதும் தன் ஆழமான கருத்துக்களால் ஆச்சர்யப்படுத்தும் நண்பன் ஷாஜி ஏனோ அடக்கி வாசித்தார்.

ஆசிப் அண்ணாச்சி எங்கிருந்தோ எடுத்துக்கொண்டு வந்த ஜிப்பாவில் நன்றாக இருந்தார். அமீரகத்தில் பஞ்சாயத்தில் சொம்பு கிடைக்காததால் ப்ளாஸ்டிக் பாட்டில் கொடுத்து அண்ணாச்சியை அட்ஜஸ்ட் செய்ய சொன்னோம். (பாட்டில் உபயம் - சென்ஷி)

அமீரகப் பதிவர்கள் சார்பாக ஏதாவது ஒரு போட்டி நடத்தலாம் என்று இரவு உணவின் போது பேசிக்கொண்டிருந்தோம். அதில் “உங்களில் யார் அடுத்த கவிமடத் தலைவர்” போட்டி நன்றாக இருக்கும் என்று நான் சொன்ன கருத்து தலைவராலேயே நிராகரிக்கப்பட்டது.

கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பயாலஜி பற்றி பாடம் எடுக்கும் கலா மாஸ்டரை (மானாட மயிலாட) ஆசாத் அண்ணன் கலாய்த்த விதம் மிகவும் அருமை.

சிங்கை நாதன் உடல் நிலை குறித்தும், அவருக்கான உதவிகள் குறித்தும் அண்ணாச்சி தெரிவித்த போது ப்ரார்த்தனைகளுக்கும், மனமாற செய்த உதவிகளுக்கும் பலன் இருக்கிறது என்று மீண்டும் ஒரு முறை நிரூபணமானது.

முகம் தெரியாத ஒரு நபர் 2,000 திர்ஹாம் (சுமார் 26000 ரூபாய்) கொடுத்திருக்கிறார் சிங்கைநாதனின் சிகிச்சைக்காக என்று அண்ணாச்சி சொன்னதும் கண்களில் துளிர்த்த ஒரு துளி நீர் அந்த முகம் தெரியாத நண்பருக்கு நன்றி சொன்னது.

ஒரு வழியாக, ஆட்டமும், கொண்டாட்டமும், கோலாகலமும், நெகிழ்வும், பாசமும், ப்ரார்த்தனையுமாய் கழிந்த அந்த பொன்மாலைப் பொழுதினை இறைவா எங்களுக்கு அடிக்கடி கொடு என்ற வேண்டுதலுடன் விடைபெற்றோம்.

திங்கள், 27 ஜூலை, 2009

குசும்பனை கும்மலாம் வாங்க..!!

குசும்பன் மட்டும் போட்டோ கமெண்ட் போடுறார். அதுனால அவர் பிரபல பதிவர் ஆயிட்டாரு. நான் எப்ப பிரபல பதிவர் ஆகிறது..??
இருட்ட ஆரம்பிச்சிடுச்சி, முகம் தெரியாது.. சிரிங்கன்னு என்னைத் தானே சொன்னாங்க..இவரு ஏன் இப்படி சிரிக்குறாரு??
நாம எம்புட்டு சீரியஸா பேசிட்டிருக்கோம். குசும்பன் எதுல ஆர்வமா இருக்கான் பாருங்க..!!
குசும்பன் கையில இருக்கிறது என்ன புத்தகம்னு சொல்லி இந்த ”உலக”த்தில் ”விளம்பரம்” தேடிக்கிற ஆசை எனக்கில்லை..
நான் வர்றதுக்குள்ள வடையை சாப்பிட்டுட்டு “ஸ்மைல் ப்ளீஸ்” வேற சொல்றான் பாரு..!


சிம்ரன் ஆப்பக்கடைங்கிற பேரை நம்ம கிட்ட கேக்காம “ஆப்பக் கடை”ன்னு எப்படிங்க மாத்தலாம்??
அடுத்த சந்திப்புல அய்யனார் செறிவு, பொறுப்புன்னெல்லாம் பேசினா நான் வர மாட்டேன். சொல்லிப்புட்டேன். இன்னைக்கு வந்ததே வடைக்குத் தான்.. அதுவும் கிடைக்கல..


இது போனஸ்.. !! குசும்பனோட வயசுக்கும் இந்த தாத்தாவோட வயசுக்கும் சம்பந்தம் இல்லை..இல்லை..இல்லவே இல்லை..


செவ்வாய், 21 ஜூலை, 2009

அமீரக வலைப்பதிவர் மாமாநாடு - 19 ஜூலை 2009

வலைப்பூக்களில் அதிகம் ஈடுபாடு இல்லாவிட்டாலும், நண்பர்களை உருவாக்கிக்கொள்ளும் பேராவல் முன்னிற்க, முதல் நாளே ஆசாத் அண்ணனிடம் சொல்லி, திட்டமிடல்கள் சரியாய் செய்தாயிற்று.


ஒரு மாதம் முன்பு தான் சந்திப்பு நடந்திருந்தாலும், நான் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதற்கு தமிழ்மணத்தின் சர்வாதிகாரப் போக்கை சாடிய சக்தியை ஒரு வளரும் வலைப்பூ எழுத்தாளன் எனும் முறையில் பாராட்டும் நோக்கமே முன்னெடுத்துச்சென்றது என்றால் மிகையில்லை. 


ஞாயிற்றுக்கிழமைகளில் அமீரகத்தில் விடுமுறை என்பது அத்தி பூத்தாற்போன்ற நிகழ்வு. இந்த முறை அது நடந்தபோது ஆசாத் அண்ணனுடன் பொழுதைக் கழிக்க திட்டம் தீட்டினேன்.


மதியம் உணவு முடித்துவிட்டு கினோகுனியா புத்தகக்கடை செல்வதாகவும், பிறகு அங்கிருந்து 
பதிவர் சந்திப்புக்கு போவதாயும் ஏற்பாடானது.


புத்தகக்கடையென்று சொன்னால் அது குறை. 
அதனை புத்தகக் கடல் என்றே குறிப்பிடல் முறை. 
(எப்படிடா சுபைர்..கவிதையா பேசுற..??)


மனசுக்கு லேசா பறக்குற மாதிரி ஒரு பீலிங் கிடைக்கும் நேரம் புத்தகக் கடைகளில் வாய்க்கும். புத்தகங்களின் வாசம் மட்டுமே சில பல பானவகைகளில் முங்கிய போதை தரும் காலங்களை நான் வெகு வேகமாக இழந்து வருவதாகப் பட்டது. ஒரு புத்தகக்கடைக்குப் போய் புத்தகங்கள் வாங்காது திரும்பி வந்தது அனேகமாய் இது தான் எனக்கு முதல் முறை.


உலகின் பெரிய புத்தகம் முதல் நாவல்கள் ஈடாக, பொறியியல் முதல் மருத்துவம் ஈடாக புத்தகங்களும், மொழியியலில் ஜப்பானீஷ் முதல் ப்ரெஞ்ச் ஈடாக புத்தகங்களும் இருக்கின்றன.


பொறியியலுக்கு சென்னை பாரீஸ் கார்னரில் பாதிவிலைக்கு வாங்கிய புத்தகங்களுக்கு இவை ஈடாக தெரியவில்லை. அழகழகான புகைப்படங்கள் மட்டுமே புத்தகங்களாகிவிடுவதில்லை என்பதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.


புத்தகங்களை திருடிக்கொண்டு போனால் வாயிலில் இருக்கும் கருவி காட்டிக்கொடுத்துவிடும் என்று ஆசாத் அண்ணன் சொன்னார். நான் அதெல்லாம் மனிதன் கண்டுபிடித்தது. அதில் பிடிபடாமலே என்னால் கொண்டுபோக முடியும் என்றேன். எப்படி என்றார்.. ??


நாலுநாலு பக்கங்களாக கிழித்துக்கொண்டுபோக வேண்டும் என்றேன். அதுக்கு அப்புறம் புத்தகக் கடையில் பேசவே இல்லை என்னிடம்.. :-)


பதிவர் சந்திப்புக்கு கராமா போய் சேரும்போது தூரத்திலே ஒரு நல்ல இடத்தில் பார்க்கிங் கிடைக்க வண்டியை நிறுத்திவிட்டு, புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய் சேரும் போது மாலை 6 மணி.


நண்பர்களுடனான அறிமுகமும், புண்ணியவான்களின் வடை மற்றும் தண்ணீரில் ஆரம்பித்தது சந்திப்பு.


ஆப்பு மற்றும் ஆப்பரசனின் ஐ.பி. முகவரி வளைகுடா நாடுகளை குறிப்பிடுவதாக குண்டைப் போட்டார் குசும்பன். 


ஒரு பதிவு எப்படி இருக்கவேண்டும் என்பது முதல் எதற்காக பதிவெழுத வந்தீர்கள் வரை எல்லோரும் ஒரு மார்க்கமாய் பேச ஆரம்பித்தனர். 


எப்போதுமே அரட்டையாய் ஆரம்பித்த பதிவர் சந்திப்புகள் கொஞ்சமே சீரியஸாய் ஆனாலும் எஸ்கேப் ஆகிவிடும் எனக்கு ஆசாத் அண்ணனுடன் மட்டுமே ஊருக்கு ஒதுக்குப்புறம் இருக்கும் பன்னாட்டு நகரத்துக்கு (இண்டர்நேஷனல் சிட்டி) போகமுடியும் என்பதால் காத்திருக்க வேண்டியதாயிற்று.


அய்யனாரின் தீர்க்கமான வார்த்தைகளும், குரல்வழியே பொங்கிப்பாயும் வெள்ளமாய் காதுகளை நனைக்கும்போது இதமான தென்றல் காற்று வீசத்தொடங்கியிருந்தது.


ஆசிப் அண்ணாச்சியின் வழக்கமான பாணியும், மரத்தடி நட்பினைப் பற்றிய ஒரு நெகிழ்வான அறிமுகமும் மனதில் நீங்காது நிற்கும்.


ஆசாத் அண்ணனின் பதிவெழுதும் போது 10% மட்டுமே எழுதுவதாயும், மீதி 90% அதன் முழு பின்னணி தெரிந்ததாயும் இருக்கவேண்டும் என்றபோது என்னைப் பார்த்து நீயெல்லாம் எழுதவே கூடாது என்று சொன்னதாய்ப்பட்டது.


சென்ஷி, சந்திரசேகர், அப்துல் வாஹித், செந்தில், சுந்தர், ஆதவன், கீழை ராஸா, கோபிநாத்
இஸ்மத், கலை, கார்த்திக், தினேஷ், ராதாகிருஷ்ணன், லியோ சுரேஷ், வினோத் கௌதம், நாகா, பிரதாப், சுல்தான், சைய்யது  என்று பலபேர் வந்திருந்தனர்.

ஒரு இனிய மாலைப் பொழுதை சந்தோசமாய் கழித்த நினைவுகளுடன் பிரிந்தோம்.

லியோ சுரேஷை ஏன் எழுதுவதில்லை எனக் கேட்டபோது குப்பைகளாய் கிடக்கிறது வலையுலகம் என்றும், அது மாறும் வரை எழுத மாட்டேன் என்றும் சொன்னார். அதுபோல் ஆசிப் அண்ணாச்சியும் ஒரு முடிவெடுத்தால், லியோ சுரேஷ் மீண்டும் எழுதக்கூடும் எனத் தோன்றியது. ஆனால் நான் சொல்லவில்லை.. 

கிசுகிசு:

என்ன புத்தகம் போட்டிருக்கிறார்? அது ஒன்றுக்கும் உதவாது இதற்குத்தவிர என்று ஒரு பதிவர் எழுதிய புத்தகத்தை விசிறிக்கொண்டிருந்தார் ஒரு பிரபல பதிவர். அவரின் இந்த செய்கை மிகவும் மன சஞ்சலம் தந்தது.. :-)

அவர் யார் என்பதை பின்னூட்டத்துல சொல்லிடுங்க மக்கா..

ஞாயிறு, 10 மே, 2009

எழுத்துக்கூடத்தில் ஒலித்த என் குரல் - அரசியல்

நண்பர்களுக்கு,

எழுத்துக்கூடம் என்ற குழுமம் சவூதி தலைநகர் ரியாதில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

அதில் உறுப்பினர்களாக நண்பர் நாக.இளங்கோவன், அண்ணன் ஆசாத், நண்பர் கேவிராஜா, மற்றும்  நண்பர் இப்னு ஹம்துன் முதலானோர் இருக்கின்றனர். (என்னையும் சேர்த்து..)

பேராசிரியர் பெரியார்தாசன் சிறப்பு அழைப்பாளராக வெள்ளிக்கிழமை ரியாத் எழுத்துக்கூட கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் தலைமையில் கவியரங்கத்தில் ஏதாவது ஒரு தலைப்பில் பாட கேட்டுக்கொள்ளப் பட்டோம்..


கவிதையை இங்கிருந்து தட்டச்சி அனுப்பினேன். இது மட்டும் போதாதென்று என்னுடைய குரலில் பதிவு செய்திருக்கிறேன்.

அந்த கவிதை இதோ...!

அரசியல்

கலர்கலரா கரைவேட்டி
கைகூப்பி வந்திடுவார்
கண்டபடி பேசிவிட்டு
'கருத்தில்லை' என்றிடுவார்

பலமனிதர் தமைசேர்த்து
பிரியாணி போட்டிடுவார்
பக்கத்தில் தேர்தல்தான்
பார்ப்பவரும் புரிந்திடுவார்

சிலசமயம் இனமானம்
சவுண்டாகச் சொல்லிடுவார்
சில்லறைகள் தேறிவிட்டால்
மொத்தமாக மறந்திடுவார்

கலகமதை ஏற்படுத்தி
குளிர்தானே காய்ந்திடுவார்
கண்டவர்கள் கேட்டுவிட்டால்
'சகஜமப்பா' என்றிடுவார்

நேற்றைக்கு வேறுபேச்சு
இன்றைக்கு வேறுபேச்சு
நேரத்தில் தக்கபடி
நிலைமையினை மாற்றிடுவார்

காற்றுக்கு மேல்வருவார்
காணாமல் போய்விடுவார்
காட்டுகிற கவனத்தில்
கண்ணீரும் பன்னீராய்.

தூற்றுவதில் போற்றுவதில்
தாண்டிடவும் முடியாது
தேர்ந்தெடுக்கும் வார்த்தைக்கே
அகராதி கிடையாது

தோற்றாலும் ஒட்டவில்லை
மீசையிலே மண்ணென்பார்
தோதாக காரணத்தை
தோரணமாய் கட்டிவைப்பார்.

கண்டபடி திட்டியபின்
கூட்டணிக்கு கால்பிடிப்பார்
கண்டித்து கேட்டுவிட்டால்
காரணத்தின் வால்பிடிப்பார்

மண்டையிலே ஏதுமின்றி
மாபழிகள் சுமத்திடுவார்
மயங்கிவிட்டால் மண்டையிலே
மசாலாவை அரைத்திடுவார்

திண்ணையிலே கழிக்கின்ற
திருவாளர் நாவெல்லாம்
தினசரியும் வந்திருந்து
திளைக்கின்ற பேர்வழிகள்

பண்ணையகம் போயிடுவார்
பொழுதுகளை கழிப்பதற்கு
பாராளச் செல்வதாக
பசப்புகளைச் சொல்லிவிட்டு.

சாக்கடையில் நாற்றத்தை
செய்கின்ற குப்பைகளை
சேர்க்காமல் இருந்தாலே
சுகம்பெறுமே எம்தேசம்

பூக்கடையாய் அரசியலை
பார்க்கின்ற ஏக்கத்தை
பெருஞ்செயலால் தொடங்கிடுவோம்
பாராட்டு தேடிவரும்

தேக்கடையில் கூடுகின்ற
தீப்பழக்கம் விட்டுவிட்டு
தேசத்தின் நலங்காக்க
தொடங்கிடுவோம் நம்முயற்சி

வாக்குடையோம் நாமெல்லாம்
வாய்ப்புடையோம் என்பதனால்
வேண்டியொரு கவியளித்தேன்
ஒழுங்காகச் சிந்திப்பீரே!

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

இருண்ட எதிர்காலம் - சிறுகதை

நான் மஸ்கட் வந்து 4 வருஷமாயிடுச்சு. இன்னும் ஊருக்குப் போக முடியல. காசு முக்கியமாச்சே..இதை விட்டுட்டு போனா அடுத்த நாள் ஊரில ஒன்னும் பண்ணமுடியாது..

இந்த பாழாப்போன பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. ஒரு நல்ல நாளுக்கு நல்ல துணி மணி எடுக்கணும்னாலும் இதே காசுக்கு ஊர்ல இருக்குற எல்லாருக்கும் துணி எடுத்துப்புடலாம். நமக்கே 200 திர்ஹாம் ஆயிடுது. ஊருக்குப்போகையில ஏதாவது வாங்கிட்டுப் போனாத்தானே நல்லாயிருக்கும்.

அம்மாகிட்ட நேத்து பேசினப்போ, “ரொம்ப ஆசையா இருக்குடா புதுசா தோடு போட்டுக்கணும்னு. இலை இலையா டிசைன்ல பச்சைக் கலர் இலையும் சேந்தா மாதிரி தோடு வாங்கியாடா”ன்றாங்க.

தங்கச்சிக்கிட்ட பேசினா,”இத்தனி வருசமா ஃபாரின்ல இருக்க..என் குழந்தைக்கு மாமன்கிற முறையில என்ன செஞ்சிப்புட்ட”ன்னு கேக்குறா.

அப்பா “புதுசா ஒரு மொபைல் வாங்கிக்கொடு, இப்ப இருக்குறது வெயிட் அதிகமா இருக்கு”ன்னு சொல்றார்.

இவங்களை எப்படி சமாதானப் படுத்துறதுன்னே தெரியல..இங்க குடிக்க தண்ணி இல்லாம, நல்லதா சாப்பிடாம வயித்தக் கட்டி வாயக் கட்டி சம்பாதிக்கிறோம்னு தெரியக்கூடாதுன்னு தானே வீட்டுக்கு நாம போறப்போ இதெல்லாம் வாங்கியாறோம்..

அவங்களுக்கு எங்க புரியப் போகுது.. ஊருக்குப் போகையில வாங்கிட்டுப் போகணும்..யாருகிட்டயாவது ரூவா கடன் கேட்டா முறைக்கிறானுவோ..இன்னைக்கு இந்த பாழாப்போன ரிசஷென்னால எப்ப எவன் சீட்டை கிழிப்பான்னு தெரியாது..யாரு நம்மள நம்பி பணம் கொடுப்பா..??

நாம நல்லா வேலை பாக்குறதுனால பிரச்சினை இல்ல..அந்த சலீம் பாய் தான் கொஞ்சம் ஓவர் அலும்பு பண்ணுவார்..

அதோ வர்றார் பாருங்க..அவர் தான்..கத்தரிக்காய்க்கு குல்லா போட்டது மாதிரி..தொப்பையும் வழுக்கையுமா...பார்த்தாலே சிரிப்பு வருது.. மனுசன் எச்சிக் கையால காக்கா ஓட்ட மாட்டாரு. 

"என்ன பாய், வயித்துக்குக் கூட ஒழுங்காச் சாப்பிடாம  அப்படி என்னதான் காசு சேர்க்கறீங்க, கபுறுக்கு எடுத்துட்டா போப்போறிங்க?" என்ற கேள்விக்கு மையமாக முறுவலிப்பார்
 
அது சமாளிப்பா, அசடா என்று எனக்கு இன்று வரை புரியவில்லை .

எமகாதகத் திருடன்..இன்னைக்கு என்ன திட்டமோ தெரியல...
 
“என்னலே..என்ன பண்றீக..!” - சலீம் பாய்
“ஒன்னும் இல்லைன்னே..நம்மள வேலையை விட்டுத் தூக்கிருவாங்களோன்னு பயமா இருக்குன்னே”..

“போடா போக்கத்த பயலுவளா..!, இந்த மடம் இல்லாட்டி சந்த மடம்னு போவீகளா..பயந்துகிட்டு..நான் நம்ம முதீரை நேத்து பார்த்தேன்.அவருக்கு உன் மேல நல்ல அபிப்ராயம்லாம் இல்லை. நீயா வேலையை விட்டுப் போனீன்னா ரொம்ப நல்லது..வேலையை விட்டுப்போறேன், வீட்டுல கஷ்டம், நான் இருந்தே ஆகணும்னு பேசிப்பாரு.. ஒத்துக்கிட்டாருன்னா சம்பளம், சாவடில்லாம் நல்லா போட்டுக் கொடுப்பாரு..அவரா அனுப்பினா ஒரு நயா பைசா பேறாது..புரிஞ்சு நடந்துக்கோ என்ன..!”

“சரிண்ணே, பேசிப் பாக்குறேன்..”

ஒரு பத்து நிமிசத்துல போன் வருது நம்ம சலீம் பாயை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்களாம்னு நம்ம பையன் சிவா சொல்றான்..பதறிப் போய்ட்டேன்..ஹ்ம்..யாரை நம்புறதுன்னே தெரியல..

இப்பத்தான் பேசிட்டுப் போனார்..ஹ..என் மேல முதீருக்கு நல்ல அபிப்ராயம் இல்லையாம்...காமெடி..

சலீம் பாயை போய் பார்ப்போம். மனுசனை இப்ப விட்டா ஓட்டுறதுக்கு வேற வாய்ப்பே கிடைக்காது..

“என்ன சலீம் பாய், விஷயம் கேள்விப் பட்டேனே உண்மையா?” - லொள்ளுக்கு ஒண்ணும் குறைச்சலே இல்லை.. 

“ஒண்ணும் இல்ல தம்பி..துணிமணிலாம் அடுக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு நைட்டே கிளம்பணுமாம்..நான் இத்தனை நாளா ஒரு பைசா கூட யாருக்கும் வச்சுக்கோன்னு கொடுத்ததில்ல..அது ஏன்னு யாரு கிட்டயும் சொல்லல..இன்னைக்கு உன்கிட்ட சொல்லணும்னு தோணுது பேசலாமா?”

“ஐயோ என்ன பாய்...நீங்க சொல்லுங்க பாய்..”

“எனக்கு நகம் முளைச்ச காலத்துலேர்ந்து சம்பாதிக்கேன்..அக்கா, தங்கச்சிங்க கல்யாணம், தம்பிக படிப்புன்னு இம்புட்டு காலம் ஓடிப்போச்சு..இப்பதான் ஒரு நிலம் வாங்கி வீடு கட்ட ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க அந்த இடம் பங்காளிங்க இடமாம்..இப்ப கோர்ட்ல கேஸ் நடக்குது..ஒத்த ஒத்த ரூபாயா சேத்து கட்டுற வீடு தம்பி..இப்படி நடுவுல நிக்கிது..ஊருக்கு போனா எல்லாரும் கேலி பேசுவாங்க தம்பி..துபாய்ல ஒட்டகத்தை மேய்ச்சிட்டு இங்க மாடு மேய்க்க வந்துட்டான்னு, நினைச்சாலே அழுகையா வருது தம்பி”

“ஐயோ, ஏன் அழறீங்க சலீம் பாய்..ஒரு கதவை அடைச்சா ஆண்டவன் இன்னொரு கதவை திறப்பான் சலீம் பாய்”..

“இல்லைப்பா, நான் இப்ப ஊருக்கு போனா நான் தற்கொலை தான் பண்ணிக்குவேன், இந்த துறைல யாராவது இரண்டு பேர அனுப்பனும்னு முடிவு பண்ணுனப்ப, உன் வயசு காரணமா உன்னை வச்சிக்கிட்டாங்கலாம்..ஓடி ஆடி வேலை செய்வேன்னு..இன்னொருத்தன் அந்த ஜின்ஞ்சா பார்ட்டி.., மவ கல்யாணத்துக்கு வாங்கின வட்டியே மாசாமாசம் கழுத்தை நெரிக்குது.என்ன செய்யப்போறோமோ தெரியலப்பா” 
”மனச தேத்திக்கங்க பாய்..எல்லாம் நல்ல படியே நடக்கும்.”

ஆதரவு சொன்னாலும் மனச ரம்பம் போல அறுக்குது.. என்னா செய்றது.. நாம என்னா செய்ய முடியும்னு தோணுது.

இதெல்லாம் நடந்தது 3 மணிக்கு..

சிவா போன் பண்ணான்..சாயங்காலம் 6 மணிக்கு ”டேய் மாப்ள..சலீம் பாயை போக வேண்டாம்னு முதீர் சொல்லிட்டாருடா..அதுக்கு பதிலா வேற ஒருத்தன் போறானாம், யாருன்னு தெரியுமா?”

------------------------------------------------------
முதீர் - மேலாளர்.
கபுறு - அடக்கஸ்தலம்

திங்கள், 9 மார்ச், 2009

தேவதைகளின் உலகம் - மகளிர் தின வாழ்த்துகள்

வலிகளினதும் இரைச்சலினதும்
ஆனதான உலகத்தில்
கைபிடித்து இழுத்து வந்தாள் தாய்
 
உள்ளார வருந்தும் கணங்களில்
மடி சாய்ந்து அழ முடிகிறது அவளிடம்
 
பிடித்த பெண்ணைப் பற்றியோ
பிடித்த விஷயம் பற்றியோ
ஒரு பெண்ணியப் பார்வையை
என்னிடம் புகுத்தியவள் சகோதரி
 
தேவதைகள் எப்போதும்
என்னைச் சுற்றியே இருக்கிறார்கள்..

குளிர்பானம் முதல்
அசைன்மெண்ட் வரை
பகிர்ந்து கொண்டு
காதல் முதல் கவிதை வரை
அத்தனையும் விவாதித்து
அழகான சட்டை எடுப்பது முதல்
முறையாக ஆங்கிலம் கற்றது வரை
என்னுடன் வந்த தோழி

சொந்தங்களைப் பிரிந்து,
கைபிடித்த காரணத்தால்
உலகின் கடைசி வரை
கூட வரும் மனைவி

தேவதைகள் எப்போதும்
என்னுடனேயே இருக்கிறார்கள்..
 
இரவின் நிசப்தத்தை
சன்னமாய் அறுத்தெறியும்
விசும்பலில் கூட 
ரீங்காரமாய் மகள்
 
தேவதைகள் எப்போதும்
அருகில் இருக்கிறார்கள்..
 
தனியே ஒருதினம் தேவையில்லை
எனினும் மகளிர் தின வாழ்த்துகள்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

பொங்கல் விழா சிறப்புக் கவியரங்கம் - பண்புடன் இணைய குழு

நான் கலந்து கொண்ட இணைய கவியரங்கத்தில் வழங்கிய கவிதை..

இனி வரும் நாள்கள்

கடவுள் வாழ்த்து:

இறைவா!
இல்லா மலிருந்தன உயிர்கள்
இல்லா மலிருந்தன உலகங்கள்
எல்லாமுமாய் நீ
என்றைக்கும்  நீ
வல்லமை உனக்கே!
வணங்குகிறேன்..


தமிழ் வாழ்த்து:

அங்கி யணிதல்  அடையாளம் யார்க்குமே
தங்கமும் தந்திடும் தோரணை - அங்ஙனமே
என்னுள்  தமிழணங்கே உன்னை அணிந்தனன்
மின்னிடு  வாய்நீ மிகைத்து!

சபையோர்க்கு:

சிந்தனையில் தான் தோன்றி
சிதறியதை தொடுத்திட்டேன்
சிறப்பெனில் சுட்டிடுங்கள்
குறைஎனில் குட்டிடுங்கள்
 
தலைவர் வாழ்த்து:
 
அறிவிற் சிறந்தீர்; அன்பில் மிகைத்தீர்
 ஆயின் ஏனோ வாழ்த்தை மறுத்தீர்
நெறிகள் கூறும் நலமே கொண்டீர்
 பாடும் குயிலே; பண்பா ளர்நீர்.
தெரிந்த வரைக்கும் தலைவர் என்றால்
 தெளிவாய் உங்கள் தகுதி வேண்டும்.


முதன்மைக் கவிதை:
 
கடந்து வந்த பாதை
சில நேரம் கற்கள்
சில நேரம் புற்கள்
சில நேரம் முட்கள்

கற்கள் காயப்படுத்தலாம்
புற்கள் துன்புறுத்தலாம்
முட்களால் முடக்கப்படலாம்
பயணம் மட்டுமே நிரந்தரமானது
பயணம் வேறு வாழ்க்கை வேறா?

வேண்டுமென்பதே வாடிக்கையாய்
வேண்டியவர்கள்!
நகைக்காய் நகைப்பவர்கள்
தொகைக்காய் தவிப்பவர்கள்
உறவுகள் என்பதாம் பெயர்

இவர்கள் இருப்பிடம் தேடி
செல்வம் சேர்க்கும் திறன்பெற
வேண்டும் இனி வரும் நாளில்

வெற்றியில் மட்டுமே
சுகம் கொள்வதும்
தோல்விகள் வருவதில்
துவண்டுபோவதும்
இல்லாத மனம்
பெறவேண்டும் இனி வரும் நாளில்

"நான்" என்றோர்களும் இல்லை
நான் தான்  என்றோர்களும் இல்லை
நான் மட்டும்தான் என்பதும் இல்லை
நான் அடங்கும் ஞானம்
கைவரப் பெறவேண்டும்
இனிவரும் நாளில்..
 
இல்லையென வருவோர்க்கு
இல்லையென இயம்பாது
இயன்றதை செய்வேன்
என்பதன்று,
இல்லையென்ற சொல்லே
இல்லாது விரட்டவும்
வேண்டும் இனிவரும் நாளில்
 
திருந்தட்டும் உலகந்தான்
திருந்தட்டும் மற்றவரும்
வருந்துகின்ற போக்கின்றி
வகையாக  'நான்' திருந்தவும்,

எளியவரின் வலிகளிலே
வலியவரும் வாழ்கின்ற
இயலாமை சுடுகின்ற
இன்னல்கள் மாறிடவும்,

ஒருநாளே வாக்காளர்
உயர்வுகளை பெறுவதுவா?
கருமைமிகு பணநாயகம்
கட்டாயம் மாறிடவும்,

பேரினவாத நச்சுப்பற்கள்
பிடித்திருக்கும் எம்மக்கள்
பெருமூச்சு விடுகின்ற
பெருங்காலம் வாய்த்திடவும்,

தம்மக்கள் அவலங்கள்
தானுணரா தலைவர்க்கு
இன்னுயிர் மாய்த்துணர்த்தும்
இழிநிலைகள் மாறிடவும்,

நன்மைக்கும் தீமைக்கும்
நடக்கின்ற போரினிலே
என்பங்கும் உண்மைக்காய்
இருக்கின்ற வாழ்வுக்கே,

இனிவரும் நாள்களை
இறைவா அருள்வாய்!

நன்றிகள்..

அன்புடன்,
சுபைர்