சனி, 29 ஆகஸ்ட், 2009

அமீரக பதிவர்களின் இஃப்தார் விருந்து - 28.8.09

அமீரக பதிவர்களின் இஃப்தார் விருந்து

இறைவனின் கொடைகளில் சிறந்தவைகளே நமக்கு கிடைத்திருக்கிறது என்று ஒவ்வொரு கணமும் எண்ணி பூரிப்படையும் தருணங்களை நாம் பெற்றிருக்கிறோம்.

அது போன்ற ஒரு நிகழ்வு தான் 28ம் தேதி ஆகஸ்டு மாதம் ஷார்ஜா சத்திரத்தில் நிகழ்ந்த இஃப்தார் விருந்து.

உலகின் உன்னத நிமிடங்களை நாம் இந்த வேகமான சூழ்நிலையில் மறந்துபோகிறோம் என்பதனை உணர்த்திய மாலை.
வெள்ளிக் கிழமை மதிய வேளை உறக்கம் என்பதை இழந்து மஞ்சள் பூசிய பெண்ணைப் போல வானம் தன் பொலிவினைப் பெறும் மாலை நேரம். 4 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்ட ஆசாத் அண்ணனின் ரதம் கரவைக் குரல் தினேஷை எடுத்துக்கொண்டு என் வீட்டு வாசல் வந்தடைந்த போது மாலை 4:45 மணி.

”மஸ்டா 6” ல் புறப்பட்டு ஒரு வழியாய், அண்ணாச்சி வீட்டிலிருந்து 10 நிமிட நடையில் வாகனத்தை நிறுத்தி வழிகேட்டு 6 மணி சுமாருக்கு சத்திரத்தை அடைந்தோம்.

சாப்பாடு என்றால் எனக்கு சரிநிகர் சமானமாக கொள்ளத்தக்க நண்பன் குசும்பன் அங்கே எங்களை வரவேற்றார். என் வயதொத்த நண்பர்களுடன், எழுத்துக்களால் இணைந்த இதயங்களுடன் அளவளாவுவது ஆழ்ந்த மன மகிழ்வைத் தருகிறது.இப்தாருக்காக எல்லாமும் செய்து வைக்கப்பட்டிருக்க, நோன்பு திறந்தவுடன் நோன்புக்கஞ்சியும், ஹலீமும் என்னிடம் படாத பாடு பட்டன. (சரியாக ஒரு ஆண்டிற்குப் பிறகு)

பிறகு சுல்தான் பாய் இமாமாக தொழ வைக்க மஃரிப் தொழுதோம்.

டீச்சர் குடும்பம் (ஜெஸிலாக்கா & பேமிலி), படகும் துடுப்பும் (சஃபீனாக்காவின் பேமிலி), ”வடை” ராமன் குடும்பம், லொடுக்கு (அ) ஃபாஸ்ட்பௌலர் குடும்பம் - அனைவரும் குடும்ப சகிதமாய் வந்தது மனதுக்கு ஒரு திருப்தியைத் தந்தது. பதிவர் சந்திப்பு என்பது குடும்ப சகிதமாய் கலந்து கொள்ளக்கூடிய ஒரு கூடல் நிகழ்வு என்ற சந்தோசம் முக்கியமாய் பட்டது. ”தன் சுய அரிப்பை சொறிந்து கொள்ளவே பதிவு எழுதுகிறோம்” என்பவர்கள் மத்தியில் ஒரு சமூக சூழலின் நட்பின் ஆதரமாய், குடும்பமாய், குழு நிகழ்வாக மாற்றியிருக்கும் இந்த சந்திப்புகள் அடிக்கடி நிகழ வேண்டும்.

’நண்பன்’ ஷாஜி, முத்துக்குமரன், பினாத்தல் சுரேஷ் முதலானோர் கலந்து கொண்ட கூட்டத்தில் நாமும் கலந்து கொண்ட ஆனந்தம் கிடைத்தது என்றால் அது மிகையல்ல.

ஆசிப் அண்ணாவின் சிறிய முன்னுரையுடன் ஆரம்பித்த இப்தாருக்கு பின்னரான நிகழ்வுகள் ராஜா கமாலின் கவிதை புத்தக வெளியீட்டுடன் துவங்கியது.

பிறகு வழக்கம் போல் நாரதர் வேலையை நான் ஆரம்பித்தேன். செந்திலின் ஒரு பதிவில் திரைப்படத்தைப் பற்றி நல்ல விஷயங்களையும் கூறலாமே என்ற கருத்தை ஏன் ஆதரிக்கக்கூடாது? என்று என் முதல் பிட்டைப் போட்டேன். பிறகு அது பத்திக்கொண்டு எரிந்தது. (கந்தசாமி படத்துல ஏதுடா நல்லவிஷயம்னு நான் கேட்டதுக்கு குசும்பன் ஸ்ரியா என்றார். அதை நான் இங்கே சொல்ல மாட்டேன்)

எப்போதும் தன் ஆழமான கருத்துக்களால் ஆச்சர்யப்படுத்தும் நண்பன் ஷாஜி ஏனோ அடக்கி வாசித்தார்.

ஆசிப் அண்ணாச்சி எங்கிருந்தோ எடுத்துக்கொண்டு வந்த ஜிப்பாவில் நன்றாக இருந்தார். அமீரகத்தில் பஞ்சாயத்தில் சொம்பு கிடைக்காததால் ப்ளாஸ்டிக் பாட்டில் கொடுத்து அண்ணாச்சியை அட்ஜஸ்ட் செய்ய சொன்னோம். (பாட்டில் உபயம் - சென்ஷி)

அமீரகப் பதிவர்கள் சார்பாக ஏதாவது ஒரு போட்டி நடத்தலாம் என்று இரவு உணவின் போது பேசிக்கொண்டிருந்தோம். அதில் “உங்களில் யார் அடுத்த கவிமடத் தலைவர்” போட்டி நன்றாக இருக்கும் என்று நான் சொன்ன கருத்து தலைவராலேயே நிராகரிக்கப்பட்டது.

கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பயாலஜி பற்றி பாடம் எடுக்கும் கலா மாஸ்டரை (மானாட மயிலாட) ஆசாத் அண்ணன் கலாய்த்த விதம் மிகவும் அருமை.

சிங்கை நாதன் உடல் நிலை குறித்தும், அவருக்கான உதவிகள் குறித்தும் அண்ணாச்சி தெரிவித்த போது ப்ரார்த்தனைகளுக்கும், மனமாற செய்த உதவிகளுக்கும் பலன் இருக்கிறது என்று மீண்டும் ஒரு முறை நிரூபணமானது.

முகம் தெரியாத ஒரு நபர் 2,000 திர்ஹாம் (சுமார் 26000 ரூபாய்) கொடுத்திருக்கிறார் சிங்கைநாதனின் சிகிச்சைக்காக என்று அண்ணாச்சி சொன்னதும் கண்களில் துளிர்த்த ஒரு துளி நீர் அந்த முகம் தெரியாத நண்பருக்கு நன்றி சொன்னது.

ஒரு வழியாக, ஆட்டமும், கொண்டாட்டமும், கோலாகலமும், நெகிழ்வும், பாசமும், ப்ரார்த்தனையுமாய் கழிந்த அந்த பொன்மாலைப் பொழுதினை இறைவா எங்களுக்கு அடிக்கடி கொடு என்ற வேண்டுதலுடன் விடைபெற்றோம்.

17 கருத்துகள்:

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

பதிவுஎழுதுறதில்லன்னு நேற்றுதானே சொன்னீங்க...

கோபிநாத் சொன்னது…

\\கிளியனூர் இஸ்மத் கூறியது...
பதிவுஎழுதுறதில்லன்னு நேற்றுதானே சொன்னீங்க...
\\
தல

அது நேற்று...;))

அகமது சுபைர் சொன்னது…

நம்ம பயலுக கோரிக்கை வச்சாங்க.. அதான் எழுதிட்டேன்.

அகமது சுபைர் சொன்னது…

கோபி,

பதிவு எப்படின்னு சொல்லிட்டுப்போ...

கலையரசன்.. சொன்னது…

பதிவு நன்று சுபைர்..

//நம்ம பயலுக//

யாருப்பா அந்த நம்ம பயலுக? கொஞ்சம் காட்டு.. நானும் ஒரு காட்டு காட்டுறேன்!!

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

அக்கக்க... பதிவு சூப்பரபு..

நல்ல வேலை நீங்க எந்த புத்தகக்கடைக்கும் போகவில்லை இந்த முறை ;)

அழகாக, நகைச்சுவையுணர்வோடு எழுதியுள்ளீர்கள். நடந்த எல்லாவற்றையும் அருமையாக எழுதியுள்ளீகள். தொடருங்கள்!

அகமது சுபைர் சொன்னது…

கலையரசா,

செந்தில் பின்னூட்டம் பாரு.. இவங்க மாதிரி ரசிகர்கள் இருக்குற வரைக்கும் என்னை யாரும் அசைச்சிக்க முடியாது!!

☀நான் ஆதவன்☀ சொன்னது…

கலக்கல் கவரேஜ் :)

குசும்பன் சொன்னது…

ராசா முதல் போட்டோவில் இருக்கும் ஹீரோ யாரு:)

அப்பாலிக்கா இப்படி டேமேஜ் செய்வதை நிறுத்திப்போம் ஓக்கேவா?

ஆசாத்பாய் பதிவில் உன்னை புகழ்ந்து ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கேன் பாரு:)

அகமது சுபைர் சொன்னது…

//ராசா முதல் போட்டோவில் இருக்கும் ஹீரோ யாரு:)//

என் ஆருயிர் அண்ணன் குசும்பன் அவர்கள்..

ஜெஸிலா சொன்னது…

படங்களும் பதிவும் அருமை

ராஜா | KVR சொன்னது…

//சாப்பாடு என்றால் எனக்கு சரிநிகர் சமானமாக கொள்ளத்தக்க நண்பன் குசும்பன் அங்கே எங்களை வரவேற்றார். //

அது ஃபோட்டோ பார்க்கிறப்போவே தெரியுது :-)

//என் வயதொத்த நண்பர்களுடன், எழுத்துக்களால் இணைந்த இதயங்களுடன் அளவளாவுவது ஆழ்ந்த மன மகிழ்வைத் தருகிறது.//

உன் வயதொத்த நண்பர்கள் வரிசையிலே ஆசிப் அண்ணாச்சி, ஆசாத் அண்ணன், குசும்பன் சித்தப்பால்லாம் வர்றாங்களா?

அகமது சுபைர் சொன்னது…

@ கேவி இராஜா

ஆசாத் அண்ணா, ஆசிப் அண்ணா எல்லாரும் அண்ணாக்கள்..

நான் சொல்ல வந்தது சென்ஷி, கோபி மாதிரி ஆளுங்களை..

நல்லா கிளப்புறாங்கையா பீதியை :-)

ராஜா | KVR சொன்னது…

//நான் சொல்ல வந்தது சென்ஷி, கோபி மாதிரி ஆளுங்களை.//

அப்போ குசும்பனை சித்தப்பான்னு ஒத்துக்குறே!! அது போதும் எனக்கு.

அகமது சுபைர் சொன்னது…

இதைத் தனியா வேற சொல்லணுமா??

வெளங்கிடும்..

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

அப்பு...... சூப்பர்அப்பு... நல்ல நிகழ்ச்சி ..மனதுக்கு ரொம்ப இதமாக /பெருமையாக / சற்று பொறாமையாகவும் இருந்தது ... என் நண்பன் எல்லாருக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி சொன்னார்.

கீழை ராஸா சொன்னது…

//உலகின் உன்னத நிமிடங்களை நாம் இந்த வேகமான சூழ்நிலையில் மறந்துபோகிறோம் என்பதனை உணர்த்திய மாலை.//

அருமையான வரிகள்....