செவ்வாய், 7 டிசம்பர், 2010

உம்மம்மா - அம்மாவின் அம்மா - சிறுகதை

ரூமுக்குள்ள தூங்கிட்டிருந்த உம்மம்மா மவுத்தாப்போச்சாம். என்னடா இது... இன்னைக்கு ஆபிஸ்க்கு ஜெனரல் மேனேஜர் வருவாரு. அந்த மனுசன் ஒன்னு தப்பு பண்ணா அதை நாலா சொல்லுவார். அவரு ஆபிஸுக்கு வரும்போது நாம போகாட்டி நல்லா இருக்காது. இந்த உம்மம்மா முன்னமே எறந்துபோச்சுன்னு ஒரு வாரம் லீவு போட்டுட்டு டெல்லி ஆக்ரான்னு சுத்தி வந்தாச்சு. இனி அதே காரணத்த சொல்ல முடியாது.

உம்மம்மா ஒன்னும் பெரிய பாசக்காரி இல்ல... அம்மா அடிக்கடி சொல்லும்... அவுக அக்கா புள்ளைகளை கையில தூக்கி வச்சு கொஞ்சுமாம். எங்களை கொஞ்சினதே இல்லன்னு. அதனால அம்மாவுக்கு ரொம்ப கோவம் அது மேல. ஆனா அம்மாவுக்கு உம்மம்மாவை ரொம்ப புடிக்கும். உங்களை எல்லாம் இப்ப சமாளிக்கிறேன்னா அது இவங்களால தாண்டான்னு அம்மா சொல்லும்போது என்ன சொல்றதுன்னு தெரியாது.


அம்மா போன்ல சொல்லும்போது அழுத அழுகைல எனக்கும் அழுகை வருது. ஆனா இனி பஸ் புடிச்சு ஊருக்குப் போறதுக்கு முன்னால உம்மம்மாவை அடக்கம் பண்ணிடுவாங்க.. ஊர்ல பெருசுங்க கல்யாணச் சாவுன்னு பேசிக்கிட்டு இருக்கும்.. உம்மம்மா எங்ககிட்ட பாசத்தைக் காட்டாட்டியும் அது அம்மாவுக்கு அம்மா தானே... என்ன செய்யுறது... உம்மம்மா சொந்தக் காரங்க ஊர்லேர்ந்து வர எப்படியும் ஆறேழு மணி நேரமாகும். நாம இன்னும் ஒரு ரெண்டு மூனு மணிக்குள்ள போயிடலாம்னு ஒரு எண்ணம் வந்துச்சு.

அன்னிக்கு நான் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு போனேன். நான் போற வரைக்கும் அவங்க மூத்த மக வரல. அதனால வீட்டில கசபு மாத்தி பென்ச்ல போட்டிருந்தாங்க. அப்பப்ப அந்த உடம்பை தூக்கி பவுடர் போட்டுட்டு இருந்தாங்க. அவுகவுக வேலையைப் பாத்துக்கிட்டு அப்பப்ப டீ குடிச்சுக்கிட்டு இருந்தாங்க...

அப்பத்தான் அம்மாவ கவனிச்சேன். அழுதழுது சோர்ந்து போன கண்கள். மொதநாள் ராத்திரி அம்மாவைக் கூப்பிட்டு பக்கத்துல உக்கார வச்சி கொஞ்சம் நேரம் பேசிக்கிட்டு இருந்துச்சாம். எனக்கு நேரம் வந்திருச்சுப்பா.. நான் எப்பப் பார்த்தாலும் உன் அக்கா புள்ளையை கொஞ்சுறேன்னு உனக்கு கோவம் இருந்திருக்கும். ஆனா உன் அக்கா பெத்தது பொம்பளைப் புள்ளை. அதும் இல்லாம அவ ரொம்ப கஷ்டப்படுறா. நீ பெத்ததெல்லாம் ஆம்பிளைப் புள்ளைக.. அதுகளைப் படிக்க வச்சிருக்க. அவனுக ஊரு தேசம்னு போறவனுக. அவனுகளுக்கு நான் பாசத்தைக் காட்டி வளத்தா, பின்னால நான் இல்லாத நாளு ரொம்ப கஷ்டமா இருக்கும்டா... அதனாலத் தான் அப்படி இருந்தேன்.. தப்பா நினைக்காதடா செல்லம்... எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவனுக இங்கல்லாம் வர வேணாம்னு சொல்லிடு. இப்படி நான் இருக்குறதால அவனுகள வர வேணாம்னு சொன்னா அவனுகளும் கெழவி தானே.. போனா போகட்டும்னு இருந்திடுவாங்க...இதெல்லாம் அத்தா சொல்லச் சொல்ல அம்மாவும் பக்கத்தில உக்காந்து அழுதுக்கிட்டு இருந்தாங்க...

அத்தா மட்டும் தான் எதுவுமே சாப்பிடல... மனுசன் கோவக்காரரா இருந்தாலும் பாசக்காரருன்னு அப்பத்தான் எனக்குத் தெரியும். அப்புறம் கடைக்குப் போய் வெள்ளைத் துணி, அத்தர், பன்னீர், சவுக்கு மரம், ஓலைப் பாய், பிளேடு, சந்தனம், மல்லிகைப் பூ எல்லாம் வாங்கிட்டு, குழி வெட்டுறவருக்கு சொல்லிட்டு வந்தோம். அத்தாவை வர வேணாம்னு சொல்லிட்டேன். ஆனா மனுசன் ரொம்ப கஷ்டப்பட்டார். உம்மம்மா மேல இருக்குற கோவத்துல ஏதாவது கொறை வச்சிடுவோமோன்னு பயந்தார். நல்ல படியா எல்லாம் செய்யணும்னு சொன்னார். கூடவே வந்தார்.

உடம்பை குளிப்பாட்ட பொம்பளைக தூக்கிட்டுப் போனாங்க. அம்மா தான் குளிப்பாட்டுனாங்களாம். பெரியம்மா உடுப்பு மாத்துக்கு எதும் கொண்டு வரலன்னு உம்மம்மா பக்கமே போகலையாம். உம்மம்மாவைக் குளிப்பாட்டி கஃபன் துணி போட்டு கொண்டு வந்தாங்க. உம்மம்மாவை அந்தக் கோலத்துல பார்க்க முடியல.. மனுஷி பட்ட கஷ்டம்லாம் கண்ணுக்குள்ள வந்து போச்சு. ஒரு வழியா உம்மம்மாவை சந்தாக்குல வச்சு பள்ளி வாசலுக்கு கொண்டு போக தூக்கினதும் அம்மா அழுதாங்க ஒரு அழுகை. ஒப்பாரி மாதிரி ஒரு அழுகை..

தங்கமா என்னை வளத்த
தங்கமே எங்க போன
மக்களைப் பெத்தவ உன்னை
மண்ணு திங்க போகுதடி

அப்படின்னு ஒரு அழுகை... அப்படியே மனசு கனத்திடுச்சு. எல்லாம் முடிஞ்சு ஊருக்குப் போயிட்டேன்.

ஒரு ரெண்டு வருசத்துல எனக்கும் கல்யாணம் ஆச்சு..

அத்தா அம்மா பாத்து வச்ச கல்யாணம். அவ ரொம்ப பாசக்காரி. ரொம்ப சந்தோசமான வாழ்க்கை. ஆபிஸ்க்கு வந்து உடனே மிஸ்டு கால் கொடுக்கணும். ஒரு மணிக்கொருக்கா மெயில் அனுப்பணும். அப்பப்ப ஏதாவது கிஃப்ட் வேணும். வாரத்துல ஒரு நாள் சினிமா வேணும்.

மனசு முழுக்க சந்தோசம். அப்பப்ப சண்டைனு ப்ரமாதமான வாழ்க்கை. அப்பத்தான் ஒரு நா அந்த விசயத்தை சொன்னா. டாக்டரைப் பாக்கணும். கொஞ்சம் ஒரு மாதிரி இருக்குன்னு. அரக்க பரக்க அவளை டாக்ஸி பிடிச்சு கொண்டு போனா, என் பதட்டத்தைப் பார்த்து டாக்டர் சிரிக்கிறாங்க..

நான் அத்தாவாகப் போறேனாம். சொன்னதும் அவளை அங்கேயே விட்டுட்டு அடையார் ஆனந்த பவன்ல அஞ்சுகிலோ ஸ்வீட் வாங்கி ஆஸ்பத்திரி முழுக்க கொடுத்தேன். அப்புறம் அத்தா அம்மா கிட்ட சொன்னேன். எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம்.

எனக்கு ஆம்பிளைப் புள்ளை வேணும்னு அவ சொல்றா. எனக்கு பொம்பளைப் புள்ளை வேணும்னு நான் சொல்றேன். அதைச் செய்யாதே.. இதைச் செய்யாதே.. அதைத் தூக்காதே.. இதை எறக்காதேன்னு ஏக கெடுபுடி.. எல்லா சமையலும் நானே தான். அம்மணிக்கு ஏக சந்தோசம். எப்பவும் அவுக வீட்டுக்குப் போன் போட்டு மருந்து மாத்திரை பத்தின டீட்டெயிலெல்லாம் கேட்டுட்டு இருப்பா. அரசமரத்து வேரு, ஆலமரத்து விழுதுன்னு என்னென்னமோ மருந்து ஓடும்.

கொஞ்ச நாள்ல அவளுக்கு வளைகாப்புன்னு, அவளைக் கொண்டு போய் அவுக வீட்டுல விட்டுட்டு வந்தேன். மொத கொழந்தை பொறக்கப் போகும் நாளுக்காக நானும் அவளும் நாள் கணக்கு பார்க்கத் தொடங்கினோம். இன்னும் 4 நாள் இருக்கும்போது லீவு போட்டுட்டு கிளம்பிட்டேன். அவளை ஆஸ்பத்திரிக்குள்ள கொண்டு போகும் போது என் கையைப் பிடிச்சுொரு பார்வை பார்த்தா.. கண்ணோரத்தில ரெண்டு சொட்டுக் கண்ணீர். மனசு ரொம்ப வலிச்சது.

கொஞ்ச நேரத்தில நர்ஸ் ஒரு தேங்காப்பூ துண்டுல சுத்தின பஞ்சுப்பொதியைக் கொண்டு வந்தாங்க. அப்படியே கைல நான் வாங்கினது தான் தாமதம். அம்மா கொழந்தையை என்கைலேர்ந்து பறிச்சுக்கிட்டு, பொண்ணுன்னு தெரிஞ்சதும் என் அம்மா வந்திருக்காடா... அதே கண்ணு அதே மூக்குன்னு சொல்லிக்கிட்டு ஒரு அழுகை அழுதாங்க பாருங்க.. அது இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குது.

தங்கமா நான் வளக்க
தங்கமே வந்தாயோ
மக்களைப் பெத்தவ உன்னை
மறுபடியும் பாத்தேனே..
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
அருஞ்சொற்பொருள்:

1. மவுத் - இறப்பு
2. கசபு மாற்றுதல் - இறக்கும்போது அணிந்த உடையைக் கழட்டி வைத்து வேறு உடை அணிவித்தல்
3. கஃபன் - வெள்ளை நிறத்தில், தைக்காத துணி
4. சந்தாக்கு - இறந்த பின் உடலை எடுத்துச் செல்லும் பாடை வகை.

வியாழன், 25 நவம்பர், 2010

மாமன் தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
தென்னகத்து தேவதையே
தெள்ளமுது புன்னகையே
மண்ணகத்தில் வந்துதித்த
பெண்ணழகே கண்ணுறங்கு..

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
சின்னஞ்சிறு பூவெனவே
செல்லம்நீ வந்தனையோ
கன்னத்தி லெப்பவுமே
கண்ணீரும் வேண்டாமே..

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
அப்பா ரடிச்சாலும்
அம்மாவேதும் சொன்னாலும்
மாமந்தான் நானிருக்கேன்
மருமகளே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
வெற்றிகள் எல்லாமே
வெள்ளமாய் வந்திடுமே
சுத்துப்பட்டு எல்லாமே

சத்தமாய் போற்றிடுமே

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
கட்டளைநீ கொடுத்தால்
காற்றுமுந்தன் காலடியில்
தலைமகளே கண்ணுறங்கு
தங்கமேநீ கண்ணுறங்கு...

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ


(தென்றல் குழுமத்தின் நண்பர் கந்தசாமி நாகராஜனின் மகளுக்கு நான் எழுதிய மாமனின் தாலாட்டு...)

செவ்வாய், 23 நவம்பர், 2010

இலக்கியவியாதி (அ) மொக்கை இலக்கியம்

ஏதாவது எழுதியாக வேண்டுமென்ற உத்வேகத்தில் அமரும்போது இரவு 11 மணி. நள்ளிரவு தான் பெரிய பெரிய வெற்றியாளர்கள் பணி செய்ய சிறந்ததாம். ஏ.ஆர்.ரஹ்மான் முதல் பெரிய அளவில் பெயர் பெற்றவர்கள் இரவில் தான் தமது பணியை செவ்வனே செய்யமுடியும் என்ற கருத்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இப்போது படித்துக்கொண்டிருக்கும் வருங்கால சாகித்ய அகாதெமி எழுத்தாளனும்..மரியாதை... மரியாதை.. எழுத்தாளரும் அதே எண்ணம் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை.

என்ன எழுத வேண்டும் என்ற எண்ணம் இல்லாத போதும் ஏதாவது எழுத வேண்டும் என்ற உத்வேகம் இருக்கிறது. எழுத்து என்பது பிரசவம் போன்றதாம். எங்கேயோ படித்திருக்கிறேன். எழுத ஆரம்பிக்கும் போது அடிவயிற்றில் ஒரு இறுக்கம் உருவாகி ஓய்வு அறை (பாத்ரூம்னு சொல்லலாம் தான்.. ஆனால் சாகித்ய அகாதமி அளவுக்கு நீங்கள் இன்னும் பழகவில்லை என நினைக்கிறேன்) செல்ல எண்ணம் உருவாகும். ஒரு பதிவு எழுதும் முன் ஓய்வு அறை போய் வந்தாலும் இப்போதெல்லாம் அடிக்கடி இந்த வயிறு இறுக்கம் தீர்ந்து போவதில்லை. கலைத்தாகம் இருப்பதால் மலச்சிக்கல் போல் எழுத்துச்சிக்கல் உருவாகி இருக்கலாம் என்ற எண்ணம்.

என்ன எழுத ஆரம்பித்தேன் என்றே மறந்துவிட்டேன். உங்களிடம் பேசிக்கொண்டிருத்தலில் இருத்தலின் இல்லாமை காலவெளியின் நீட்சியாக போய்க்கொண்டே இருக்கிறது. உலகமும் ஒரு நாள் அழியுமாமே?? காலம் என்பதே காலை, மாலை என சூரியனைக்கொண்டு கணக்கிடப்படுவதால் இன்னும் சுமார் 10000 ஆண்டுகளில் சூரியன் இல்லாது போகும் நாட்களில் காலமும் இல்லாது போகுமல்லவா?? இந்த சிந்தனையை காபிரைட் வாங்கி வைக்க வேண்டும். யார் யாரோ கதைகளை சுட்டு படம் எடுக்கிறார்களாம். எனக்கு இந்த திரைப்படங்கள் என்றாலே ஒவ்வாமை இருக்கிறது. அறுபது வயது ஆண் இருபது வயது பெண்ணுடன் கொஞ்சிக் குலவுகிறார். ஏன் இருபது வயதில் ஆண்களே இல்லையா?? அல்லது இருபது வயது பெண்களுக்கு இருபது வயது ஆண்களைப் பிடிப்பதில்லையா? உளவியல் ரீதியாக தன்னை விட வயது அதிகமானவர்கள் மீதே ஈர்ப்பு இருக்கும் என்று ஏதோ ஒரு கட்டுரையில் படித்தேன். அது ஆங்கிலத்தில் இருந்ததால் நான் தவறாகக் கூட புரிந்திருக்கலாம். நமது இலக்கு சாகித்ய அகாதமி. ஆங்கிலம் அல்ல.

என்ன எழுத வருகிறேன் என்றே தெரியவில்லை. நேற்று அம்மா என்னை கருப்பசாமி கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். அந்த பூசாரி கடந்தகால எச்சங்களின் மிச்சங்களாக கடாமீசை வைத்திருந்தார். தற்போதைய பரிணாம வளர்ச்சியினால் இனி வரும் தலைமுறைக்கு தேவையில்லா இடங்களில் மயிர் முளைக்கப் போவதில்லை. ஆனால் நான் ஏதும் சொன்னால் அவர் ஏதாவது சொல்வார். ஆனால் அந்த மீசை அழகு. அவர் ஏதோ ஜெபித்த படி..ஜெபித்த என்றால் கிறிஸ்துவ பிரார்த்தனையோ? இதையும் ஆராய்ந்து எழுத வேண்டும்.. நமக்கெதுக்கு வம்பு..சபித்த படி வேப்பிலையால் என்னை அடித்தார். அம்மா என்னவோ சொன்னார்... கவிதை எழுதியே செத்துப்போன கவிஞன் ஒருவனின் ஆவி பிடித்திருப்பதாக. கவிதை எழுதுகிறேன் என்பவனை எல்லாம் சாருவிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். அட்லீஸ்ட் ஆசிப் மீரானிடமாவது.

என்ன பேசிக் கொண்டிருந்தோம்? ஆ... ம்ம்ம்.. என்னை பூசாரி நாலு சாத்தி சாத்தி திருநீறு இட்டார். அம்மா அவருக்கு நூறு ரூபாய் கொடுத்தார். உண்மையில் பணம் தான் பேயாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரையும் எப்படி மாற்றிவிடுகிறது?. மூன்றாம் தெரு மல்லிகா இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து வரும்போது தான் வீட்டை விட்டு வெளியே வருகிறாள். எதற்கு என்று எனக்கென்ன தெரியும்?? நான் பேசிக்கொண்டிருந்தது பணம் பற்றி. அனேகமாக அந்தப் பணம் தான் எனக்கு பேய் என்று இந்த பூசாரியை சொல்ல வைத்திருக்கிறது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. குவாட்டரும், தண்ணி பாக்கெட்டுமே ஐம்பது ரூபாய் ஆகிவிடுகிறது. மிச்ச பாக்கியையும் தருவதில்லை டாஸ்மாக் ஆட்கள். படித்த ஆட்களை அரசு வேலையில் இருத்தியதால், இப்போதெல்லாம் சரக்கு கலப்படம் மிக லாவகமாக நடக்கிறது. நாம் சொன்னால் நீயும் குடிப்பியா? என்கிறார்கள். ஒரு குவாட்டர் அடித்தாலே வாந்தி எடுக்கும் எதிர்வீட்டு சண்முகம் இப்போதெல்லாம் இரண்டு குவாட்டருக்கும் போதை இல்லை என்கிறான். அனேகமாக அவனுக்குப் பழகி இருக்கலாம். அல்லது நான் சொன்னதுபோல் கலப்படமாக இருக்கலாம். யாருக்குத் தெரியும்?

ஆங்.. எங்க விட்டேன்?? அப்படி பூசாரி என்னைச் சாத்து சாத்தென்று சாத்தியதால் இப்போது நன்றாக உறங்குவதாக அம்மா சொல்லிக்கொண்டிருந்தால் வெளியே ஒரு ஆயாவிடம். அனேகமாக பால்கார ஆயாவாக இருக்கும். இரவு 11 மணிக்கு எந்த ஆயா வருவாள்?? அனேகமாக அம்மாவும் என்னைப்போல் கதைசொல்லியாகிவிட்டாளா?? வெளியே போய் பார்க்கலாம் தான்.. ஆனால் நான் உங்களுடன் பேசுவது நின்றுவிடுமே? ம்.. அம்மா சத்தம் நின்றுவிட்டது.

நாளைக்கு அழுவாள் அம்மா... என்ன செய்ய? எனக்குத்தான் இலக்கியத்தில் பெரிய ஆளாக வர வேண்டுமென்ற ஆசை உண்டே..

திங்கள், 22 நவம்பர், 2010

பெருநாள் நினைவுகள்

பெருநாள் என்றால் என்ன என்பது தெளிவாக எப்போது புரிய ஆரம்பித்தது என்ற எண்ணத்தில் பின்னோக்கி பயணிக்கிறேன். பெருநாள் என்பதை மற்றும் ஒரு நாளாக எப்போதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

கொல்லைப்புறத்து வீட்டிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு முன்னதாக கொண்டு வரும் வட்டிலப்பம் என்ற இனிப்புடன் அந்த நாள் ஆரம்பமாகும். முட்டை அதிகம் இருக்கும் பதார்த்தம் அது. எல்லா நாட்களிலும் பல் விளக்கினால் தான் தேனீர் என்னும் எழுதப்படாத சட்டம் அன்று மட்டும் தளர்த்தப்படும்.

வீட்டில் நானும் தம்பிகளும் அதிகாலை எழுந்து, வட்டிலப்பத்தை கொஞ்சம் தின்று விட்டு, டாய்லெட் பக்கத்தில் க்யூவில் நிற்க வேண்டும். வீட்டிலிருந்த ஒற்றை டாய்லெட்டிற்கு வாளி நிறைய தண்ணீர் கொண்டு போக வேண்டும். இருந்த ஒற்றை வாளியை முன்னமே டாய்லெட் போயிருப்பவர் வைத்திருப்பதால் அவர் டாய்லெட்டிலிருந்து வந்தவுடன் வாளியை பிடுங்கிக்கொண்டு, ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வருவதற்குள் யாராவது உள்ளே போயிருப்பார்கள். வாளியை வெளியில் வைத்து விட்டு தேமே என்று நிற்க வேண்டும். உள்ளே இருப்பவர் தான் தண்ணீர் கொண்டு போகவில்லையே... கொஞ்ச நேரத்தில் உள்ளிருந்து சத்தம் வரும்... யாராவது தண்ணி கொடுங்களேன்னு... வேண்டா வெறுப்பாக கதவுக்கு பக்கத்தில் தண்ணீரை தள்ளி வைத்து விட்டு நாம் விலகிச் சென்றுவிடுவோம். அவன் வெளியே வந்ததும் தண்ணீர் கொண்டு வாடா என்றால் உனக்குத் தானே வேண்டும்.. நீ எடுத்துக்கோ என்று சொல்லி விட்டு ஓடி விடுவான். இதற்காகவே இப்போது கட்டிய புது வீட்டில் ஆறு அறைகளுக்கும் அட்டாச்டு பாத்ரூம் வைத்து கட்டினேன். :)

அந்த களேபரத்திற்கு பிறகு, பைப் தொட்டியில் ஏற்கனவே பைப்பை திறந்து வைத்திருந்ததால் நிரம்பிய தண்ணீரை ஒருவர் அள்ளித் தர ப்ளாஸ்டிக் தொட்டியில் ஊற்றவேண்டும். இரு ப்ளாஸ்டிக் தொட்டி நிரம்பினால் அதற்குள் அந்த நபர் குளித்திருக்க வேண்டும். ஒரு ப்ளாஸ்டிக் தொட்டி இரண்டு குடம் கொள்ளும். சுமார் 20 லிட்டர். அந்த வகையில் மூத்தவன் கடைசியாக குளிக்க வேண்டும். எல்லாரும் குளிக்கும் வரை காத்திருந்து தண்ணீர் அள்ளிக் கொடுத்து..

இப்படிக் குளித்துவிட்டு வந்து, பாயில் அவரவர்க்கான உடைகள் ஜட்டி முதல் எல்லாமும் புதியதாய் இருக்கும். அதை அணிந்து கொண்டு தொழுகைக்கு ஓட வேண்டும். இல்லையென்றால் அத்தா திரும்பி வரும்போது அடி விழும்.

தொழுகை முடித்தவுடன் அத்தாவுடன் சேர்ந்து பேசிக்கொண்டே நடந்து வருவோம். தன்னுடைய எதிர்பார்ப்புகள், கனவுகள் எல்லாமும் அத்தா நம்மிடம் பகிரும் நேரம் அது தான். எப்போதுமே ஒரு கடுப்புடன், கண்டிப்புடன் இருக்கும் அத்தா, காலைத் தொழுகை முடிந்து கொஞ்சம் சகஜமாக பேசும் அந்த நேரங்கள் தான் நாங்கள் பள்ளிக்கு நோட்டு, புத்தகம், பரீட்சை காசு கேட்கும் நேரம். :) எங்களுடைய தேவைகளும் அதற்கு மேல் இருந்ததில்லை.

விபரம் தெரியாத காலத்தில் அத்தா மீது ஏறி அமர்ந்து சவாரி செய்வேனாம். அப்போது அத்தா சொல்வாராம்.. இப்படி நெஞ்சுல நீ குதிச்சு வெளையாண்டா அத்தா அப்புன்னு செத்துடுவேன்டா என்பாராம். எனக்கு கோட் சூட் வாங்கிட்டு செத்துப்போத்தா என்பேனாம். இப்போதும் சொல்லிச் சிரிப்பார்.. என் திருமணத்துக்கு கோட் சூட் எடுத்துத் தரேன் என்ற அவர் போனில் சொன்னபோது இதெல்லாம் ஞாபகம் வந்து அழுதேன். அப்படி எதும் நடக்கக் கூடாது என்பதற்காக அவரை வாங்க வேண்டாம் என்று சொல்லி விட்டு நானே வாங்கினேன்.

வீட்டிற்கு வந்து அன்றைய வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கும் போது கமகமக்கும் புதினா சட்னியுடன் ஆவிபரக்க இட்லி ரெடியாக இருக்கும். அதில் ஒரு ஏழு எட்டு தின்றால் கொஞ்சம் இனிப்பு அம்மா செய்து வைத்திருப்பார்கள். அதையும் கலந்து அடித்துவிட்டு ரெடியாகும்போது, அத்தா பெருநாள் காசு கொடுப்பார்கள். கைக்கு 10 ரூபாய் தருவார்கள். எந்தச் செலவும் இல்லை என்றாலும் அதை வாங்கிக்கொள்வோம். அப்படியே பெருநாள் சிறப்புத் தொழுகைக்கு ஓட வேண்டும்.

தொழுகை முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆரத்தி கரைத்து வைத்திருப்பார் அம்மா... ஆரத்தியெல்லாம் எடுக்கக் கூடாது என்று அத்தா சொன்னாலும், அம்மாவின் அரசியல் புரிய வெகு நாளானது. ஆரத்தி எடுத்தால் அதில் காசு போட வேண்டுமாம். நான் அந்த 10 ரூபாயை அப்படியே போட்டு விடுவேன். தம்பிகள் 1 ரூபாய், 2 ரூபாய் வைத்திருப்பதை போடுவார்கள். அத்தா ஆரத்திக்கு 100 ரூபாய் போடுவார். மற்ற நாட்களில் அத்தாவிடமிருந்து பைசா பெயராது என்பதால் இந்த திட்டம்.. :)

அப்படியே கறி ஏதாவது ரெடி செய்ய வேண்டுமென்றால், வீட்டில் வளர்க்கும் கோழியைப் பிடித்து, தம்பியை ஒரு பக்கம் பிடிக்கச் சொல்லி அறுத்து, அப்படியே தோலை உரித்து, சுத்தம் செய்து அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். கோழி கொஞ்சம் சீக்காக இருந்தால் தொலைந்தேன். பேன் போன்ற வெள்ளை பூச்சிகள் அந்தக் கோழியின் இறகிலிருந்து நம்மேல் விழுந்துவிடும். அப்புறம் அரிக்கும். அதனால் கவனமாக கையாள வேண்டும். அதே நேரத்தில் அத்தா ஆட்டுக்கறி வாங்கி வந்திருப்பார். அப்படியே எல்லாவற்றையும் அம்மாவிடம் கொடுத்துவிட்டு வெங்காயம், வெள்ளைப் பூண்டு உரித்துக் கொடுத்து, இஞ்சி அரைத்துக் கொடுப்பேன். இப்போது போல மிக்ஸி இல்லாமல் அம்மியில் அரைக்க வேண்டும்.

ஒரு முறை அம்மிக் குழவியை அம்மியுடன் அழுத்தித் தேய்த்து அப்படியே ரிவர்ஸில் வரும்போது குழவி தன்னால ரொட்டேட் ஆக வேண்டும். இல்லையென்றால் குழவியில் ஒரு இடத்தில் மட்டும் நன்றாக அரைந்திருக்கும். மற்ற இடம் அரைந்திருக்காது. அந்த லாவகம் தெரியாவிடில் எதையும் அரைப்பது மிகக் கடினம். அப்படியே குழவியை நிற்க வைத்து ஒரு கையால் சுற்றிக் கொண்டே, அரைத்த இஞ்சியை வழித்தெடுத்து சேர்க்க வேண்டும். பிறகு அதை ஓரம் வைத்து மிச்சம் மீதம் அம்மியில் சேர்ந்திருக்கும் இஞ்சியை வழிக்க வேண்டும்.

அதை அம்மாவிடம் கொடுக்கும்போது கண்களால் சொல்லும் தேங்க்ஸ் இப்போது 5000 ரூபாய் பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தாலும் கிடைப்பதில்லை. அந்த நாள் மதிய உணவு முடிந்ததும் அப்படியே நானும் தம்பிகளும் மண்டிக்குளத்தில் நடக்கும் சைக்கிள் ரேஸ் காண செல்வோம். மண்டிக்குளம் என்றால் ரொம்ப தூரமெல்லாம் இல்லை... ரொம்ப பக்கம் தான். அந்த ரேஸ் சமயத்தில் தம்பிகள் ஐஸ் சாப்பிடுவார்கள்.. குச்சி ஐஸ் சாப்பிட ஆசைப்பட்டாலும் பால் ஐஸ் தான் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பது அத்தா ஆணை. 25 பைசா சேமியா ஐஸை விட 50 பைசா பால் ஐஸ் எப்போதும் சுவையாய் இருந்ததில்லை என அத்தாவிடம் எப்படிச் சொல்லி புரியவைப்பது?

இப்படி ருசியான பெருநாளை அனுபவித்து வீட்டிற்கு வந்து நிம்மதியாக படுக்கும்போது ஏதோ ஒன்றை சாதித்ததாக மனம் சந்தோசப்படும். இரவு நிம்மதியான உறக்கம் வரும். அத்தோடு பெருநாள் முடிந்து போகும்.

அந்த நாள்கள் இப்போதும் மனதில் ஆழமாய் பதிந்திருக்கின்றன...

இப்போதும் பெருநாள்கள் வந்து போகின்றன மற்றுமொரு நாளாக..

புதன், 28 ஏப்ரல், 2010

நிலாரசிகனின் கனவுகள்

ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் என்ற கவிதை நூலை சென்ற ஃபிப்ரவரி 7ம் தேதி நண்பர் நிலாரசிகன் பரிசளித்தார். சாதாரணமாக புதுக்கவிதைகளால் மனம் நொந்து இருக்கும் எனக்கு இந்தக் கவிதைப் புத்தகம் ஆறுதலான ஒன்றாக அமைந்திருந்தது.

கவிதைப் புத்தகங்களை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அப்படியே முழுமையாக படிக்கக் கூடாது என்று மற்றுமொருமுறை செவிளில் அறைந்து சொல்லிச் சென்றது இந்தக் கவிதை நூல். ஒவ்வொரு கவிதையையும் நம் மனதில் இருத்தி வைத்து புது அனுபவத்தை அப்படியே நாம் உணர்ந்தாக வேண்டும். இந்தக் கவிதைகளை அப்படி ஒரு நாளிற்கு ஒன்று அல்லது இரண்டு என நாம் படித்து அதன் தொடர்பான சிந்தனைகளை நம்முள்ளே கொண்டிருந்தால் சிறப்பான அனுபவத்தை ஒவ்வொரு கவிதையும் நமக்குத் தரும்.

இந்தக் கவிதைகளில் தன்னையும் மீறி வெளிப்படும் கிராமத்தானின் வார்த்தைகள், ஒவ்வொரு கவிதையிலும் தன்னைத்தானே உட்புகுத்திக் கொண்டு பார்வையாளனாக மாறிக்கொள்ளும் தன்மை, வெவ்வேறு சூழ்நிலைகளிலும் வெளியாகும் கவிதைகளின் வீச்சு இவை அத்தனையும் நம்மை ஆத்மார்த்தமான ஒரு அனுபவத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

நான் ரசித்த சில கவிதைகளைப் பற்றிய என் கருத்துகள் இங்கே...

நான் பெத்த மகளே...

ஒரு தாயின் வருத்தம் தோய்ந்த குரலில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கவிதையின் வீச்சில் ஓரிரு நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தேன். தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தை விட தந்தை தன் மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கும் கவிதை இது.

அப்பாவுக்கு ஒரு பார்வைக் கடிதம்

ஒரு பெண்ணின் பார்வையில் தந்தையின் பாசம் சொல்லும் மற்றுமொரு கவிதை. ஆனால் வார்த்தைகளால் கோர்த்த இந்த கவிதையில் நாம் அந்த திருமண மண்டபத்தில் சென்று அமர்ந்துவிடுகிறோம் இறுதி வரிகளில்..

வலி கொண்ட மௌனங்கள்

எப்போதும் எங்கேனும் சில மௌனங்கள் கலைக்கப்படுகின்றன என்ற வார்த்தை நம் மனதில் ஆழமான சில சிந்தனைகளை விட்டுச் செல்கின்றது.

நிழல் தேடும் மரங்கள்

இதமான அரவணைப்பு என ஆரம்பிக்கும் ஒரு கவிதையில் ஒரு சில நிமிடங்களில் நம் மனதில் ஜம்மென்று உட்கார்ந்துவிடும் வார்த்தைகள் ஆழ்கடலின் அமைதியை தந்து விடுவதில்லை. மாறாக ஆழிப்பேரலையாய் சுழன்றடிக்கின்றது.

வலி

இந்தக் கவிதையில் அம்மாவின் அன்பை அப்படியே வெளிப்படுத்தி இருக்கும் கவிஞர் நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிடுகிறார்.

அவரவர் வாழ்க்கை

எறும்புகளுக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்றெண்ணும் கவிதை நாயகன், தனக்கென்று வரும்போது தன்னைப் பற்றியே சிந்திக்கும் மனம் பெற்றிருப்பதை நினைக்கும்போது உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறேன், உறுத்தலுடன்.

என் பிரியமான கனவொன்று

பெயர்தெரியா பூவினைப் பார்த்து ரசிக்கும் கவிஞனின் நாட்கள் கிடைக்க தவமிருக்கலாம்.

கடலோரக்கவிதை

கால்சட்டைப் பருவநினைவுகளில் சுழலும் காதலனைக் கலைக்கும் காதலியை தாமதமாய் வந்திருக்கலாம் எனச் சொல்லும்போது காதலுக்காய் நம்மை இரக்கம் கொள்ளச் செய்கிறார்.

கருத்தப்புள்ள செவத்தரயிலு

வெரசா ஓட்டு என ரயில் ட்ரைவரை சொல்லும் வார்த்தைகளில் கண்ணாடி போட்ட நிலாரசிகன் என்ற கவிஞனையும் மீறி வெளிப்படும் கிராமத்தானால் நாம் புன்சிரிப்பை உதிர்க்கிறோம்.

மென்பொருளாளனின் வாழ்க்கை-2

அயல்தேசத்து அகதிகள் என்ற ஒரு கவிதையையும், இந்த மென்பொருளாளனின் வாழ்க்கை கவிதையையும் தமிழ் பேசத் தெரிந்த, இ-மெயில் முகவரி உள்ள எல்லாரும் நன்கறிவார்கள். எத்தனை முறை ஃபார்வேர்ட் செய்யப்பட்டது என்றே அறியாத அளவுக்கு ஃபார்வேர்ட் ஆன கவிதை இதுவாகத் தான் இருக்கும்.

உயிர் வாங்கும் தேவதை

காதலில் உழலும் எல்லோருக்கும் பொதுவான கவிதையை இந்த கவிதைக் காதலன் தந்திருக்கிறார்.

வாழ்க்கை என்னும் வரம்

தற்கொலை செய்யும் எண்ணம் இருக்கும் எல்லா முட்டாள்களும் கட்டாயம் படிக்க வேண்டிய கவிதை இது. வாழ்க்கை நீங்கள் நினைப்பது போல சாதாரணமானதில்லை என்று நம்மை உணர்த்தச் செய்யும் வார்த்தைகள். அற்புதமான தெள்ளிய நீரோட்டம் போன்ற இந்தக் கவிதையின் மொழிநடை நம்மிடையே மிக ஆழமாகச் சென்றடைகிறது.

விடை தெரியாக் கேள்வியொன்று

நாம் உயிருக்காக இரங்குகிறோமா அல்லது உயிரின் வடிவத்திற்கா? என்ற கவிஞனின் கேள்வி சாட்டையாய் நம் மனக் கண்முன் உருமாறுகிறது. நான் எழுதிய மரணம் எனும் கட்டுரையில் ஒரு இடத்தில் “மாடு இறந்ததற்காய் அழுத குடும்பம் பாட்டி இறந்த போது அழவில்லை. ஏனென்றால் உபயோகமான ஒன்றை இழந்தால் தான் அழுகை வரும். பாட்டிக்கு அல்ல” என்ற ரீதியில் எழுதி இருப்பேன். அதே போன்ற சிந்தனையை இங்கே காண்கிறேன். கவிஞனின் சமூக சிந்தனை இங்கே மிக ஆழமாய்க் காணக் கிடைக்கிறது.

நேற்றுப் பெய்த மழை

ஒரு இடத்தில் “பனித்துளியில் குளித்த பூ இவள்” என்று கவிஞன் சொல்லும் காட்சியில் ஒரு சின்ன காட்சியை விதைத்துச் சென்றது இந்தக் கவிதையின் வார்த்தை விளையாட்டுகளை பறைசாற்றப் போதுமானது. ஆனால் அடுத்தடுத்த வரிகளில் அவர் இறக்கி வைக்கும் இடிகளைக் கண்டு மனம் அந்த காதலர்களுக்காய் பரிதாபப் படுகிறது.

நிதர்சனங்கள்

இந்தத் தலைப்பில் உள்ள 23 கவிதைகளும் முத்துக்கள்.

வருடம் 1940

ஹிட்லரை அறைந்துவிட்டு
திரும்பினேன் கால இயந்திரத்தைக்
காணவில்லை!

அவ்வளவு தான். இந்தக் கவிதையில் சொல்லப்பட்டிருக்கிற சூழல், சிந்தனை மற்றும் அதன் அடுத்த நிகழ்வு என்னவாக இருக்கும் என்ற அனைத்தும் ஒரு சிறுகதைக்கான கருவோடு இருக்கின்றது.

மனவலி

மருத்துவமனைச் சூழலை அப்படியே ஒரு அடிபட்ட ஒருவனின் உள்ளக் கிடக்கையாக வெளிப்படுத்துமிடத்தில் சபாஷ் பெறுகிறார் கவிஞர்.

அம்மா

இந்த ஒற்றை வார்த்தையே கவிதை தான் எனினும் அம்மாவைப் பற்றிய கவிதைகள் எப்போதும் தனித்துவம் பெற்று விடுகின்றன. இந்தக் கவிதை போல..

அருமையான கவிதைத் தொகுப்பை வாசிக்கும் வாய்ப்பு தந்த நிலாரசிகனுக்கு வாழ்த்துகள். நிலாரசிகனின் நண்பன் என்பதற்காய் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறேன்.

திங்கள், 8 மார்ச், 2010

அவள்

நீண்ட நெடிய பாதை அது.. இருமருங்கிலும் பச்சைவர்ணம் போர்வை போர்த்தியிருந்தது. கருமையான தார்ச்சாலையின் நடைமேடைகளில் கண்கவர் பூக்கள் நம்மிடம் ஏதோ சொல்லத்துடிப்பதாய்த் தோன்றும். பக்கத்தில் அவள் சொல்ல முடியா துயரத்தின் விளிம்பில் நிற்கிறாள்.
 
அவளுடனான பயணம்
தகிக்கும் கோடையின்
நினைவுகளைக் கிளறிவிடுகிறது
 
வெற்றுக்கால்களுடனான
பயணங்கள் சுகமானது..
சாலையின் வெப்பம் பரவா
பொழுதுகளில் மட்டும்..
இன்று அவள் தோள்
சாய்ந்து கதறி அழும்போது
ஆதரவாய் சாய்த்துக்கொள்வது தவிர
வேறெதையும் சிந்தித்தவனாயில்லை நான்.
 
இல்லாத பொருளொன்றை இழந்த துக்கத்தை அவள் என்னிடம் உண்டாக்கி இருந்தாள் ஒரு மாலைப் பொழுதில் நான் இனி உன்னிடம் பேச மாட்டேன் என்ற பொழுதில். ஆனால் இன்று என் தோளில் அவள் தேம்பி அழும்போது விரல்கள் அவள் கண்களைத் துடைக்கவில்லை. அவளை அழ விட்டு வேடிக்கை பார்க்கிறது.
 
மனித மனம் குரூர எண்ணங்களை வெளிப்படுத்த துடித்துக்கொண்டே இருக்கிறது. அவள் என்னை வேண்டாமெனச் சொன்ன போது துடித்த மனம் அவள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டுமென உதடு சொல்லும்போதெல்லாம் உள்ளுக்குள் சிரித்துக்கொள்கிறது.
 
துன்பமான கோடையில் வெயில் வெற்றுக்கால்களை தீண்டும் போதெல்லாம் இதே ஒரு பொழுதில் அவள் விட்டுச்சென்ற வார்த்தைகள் ரணப்படுத்துகின்றன.
 
இப்போதும் அந்த வார்த்தையை அவள் ஏன் சொன்னாள் என்பதை விட அவளுக்கு இப்போது என்ன பிரச்சினை என்பதையே ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காணும் மனம் எனக்கும் வாய்த்து விட்டதோ என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.
 
தனக்கான வாழ்க்கை தன்னை விட்டுப்போய் விட்டதாய் கதறி அழுகிறாள். ஆனால் என்னுடனான வாழ்வை அவள் விட்டுப்போன கணத்தை நான் இன்னும் மறக்காமல் இருப்பதை அறியாமல் இருக்கிறாள்.

அவளுடன் நான் நடந்து கொண்டிருக்கும் போதே வேகமாய் வந்த லாரி என் மீது ஏறி போய்க்கொண்டிருக்கிறது.

அவள் இன்னும் அழுதுகொண்டிருக்கிறாள்.

சனி, 23 ஜனவரி, 2010

துபாய் பேருந்துகளும் குட்டி திரைப்படமும்

துபாய் என்ற கனவு தேசம் கண்களுக்கு முன்னால் சில்லு சில்லாக சிதறிக்கொண்டிருக்கிறது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வரிசையில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் கூட்டம் காணாமல் போய்விட்டது. இந்த தேசத்தின் தற்போதைய நிலை யாருமே எதிர்பார்த்திராதது. ஆனாலும் இது ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் என்ற நம்பிக்கை மட்டும் மனதின் ஓரத்தில் இருக்கிறது.


துபாயின் அனைத்து அரசுப் போக்குவரத்துகளும் “NOL" என்ற ஒற்றை அட்டை மூலம் பயணத்திற்கான கட்டணம் செலுத்த வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பேருந்துகள், தொடருந்துகள், நீர்நிலைப் பேருந்துகள் என அனைத்திற்கும் இந்த அட்டையே போதும். இதனை அங்கங்கே ரீ-சார்ஜும் செய்துகொள்ளலாம். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கான குறைந்த பட்சக் கட்டணம் 2 திர்ஹம் 10 ஃபில்ஸ் (அதாவது 30 ரூபாய்). முழுதும் குளிரூட்டப்பட்ட பேருந்தில் பயணம் செய்வது அதி ஆனந்தம்.அப்படி நான் நேற்று போய் பார்த்த படம் தான் “குட்டி” - feel my love.

தெள்ளிய நீரோடையான கதையை அங்கங்கே தூவி இருக்கும் காட்சிப்பதிவுகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் சிறப்பானதாகி இருக்கும். ஆனால் நடக்கவில்லை.

மித்ரன் இயக்கம் என்றதும் அதே பழைய தெலுகு ”ஆர்யா” படம், ஆனால் நன்றாக சொல்லி இருப்பார் என நினைத்து மூன்று மணிக்கே போய் டிக்கட் வாங்கியதற்கு என்னை நானே கண்டபடி திட்டிக் கொண்டேன்.

ஸ்ரியா என்ற பெண்ணையும் ஒரு பாடலில் அழகாய்க் காட்ட முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். அட்டகாசமாய் ஜோதிகா நடித்திருக்க வேண்டிய படம். ஒவ்வொரு காட்சியிலும் நம்மை நெளிய வைக்கிறார்.
இன்னொரு அம்சம் இசை.. தேவி ஸ்ரீ ப்ரசாத்துக்கு என்ன வந்துச்சோ.. எங்கேயோ கேட்டது போன்ற பாடல்கள்.

தனியே தெரிவது தனுஷ் மட்டும் தான். மனுசன் காதலைச் சொல்லிவிட்டு சிரிக்கும்போதும், அவள் திருமணத்தின் போது என்னுடைய காதலை நீ உணரவில்லையா எனும்போதும் உதடுகள் துடிக்க அழுகைக்கான அத்தனை உணர்ச்சிகளையும் கொண்டு வருகிறார்.

பழைய சினிமாக்களைப் போல் அங்கங்கே கதாநாயகன் வெல்வதும், அவ்வப்போது வில்லன் வெல்வதும் புளித்துப்போய்விட்டது.

கடைசி சண்டைக்காட்சியில் நின்று கொண்டிருக்கும் இரும்பு ட்ரம்மில் காலை வைத்து வில்லனை அடிக்கும்போது அவர் கையைப் பிடிப்பதும், பிறகு தலையால் அடிப்பதும், தலையைப் பிடித்தால் கையால் அடிப்பதும் நல்ல சிந்தனை. ஆனால் ஒல்லிப்பிச்சான் இப்படி அடிப்பதை ஜீரணிக்க முடியவில்லை ;)

பாவாடை தாவணியில் அம்மணி வரும்போது அம்சமாய் இருக்கிறார். படத்தின் பாடல்கள் மனதில் ஒட்ட மறுக்கிறது.

திரைக்கதையில் தூக்கி நிறுத்தி இருக்கலாம். ஆனால் இயக்குனர் விட்டுவிட்டார்.

நல்ல படமாகக் கூடிய தகுதிகள் இருந்தும் நீளம் தாண்டுதலில் ஓடாமலே தாண்டியதைப் போன்று இருக்கிறது.

குட்டி திரைப்படம் - விமர்சனம் செய்ய தேவை இல்லை.

சனி, 9 ஜனவரி, 2010

தமிழ் படம் - பாடல் விமர்சனம்

”தமிழ் படம்” என்று அழகிரி குடும்பத்திலிருந்து அடுத்த படம் வருகிறது..


”சென்னை 600028” புகழ் சிவா நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் நேற்று கேட்டேன்.

புது இசையமைப்பாளர் கண்ணன் ரணகளம் செய்திருக்கிறார். படமும் பாடல்கள் போல் இருந்தால் 2010ம் முதல் மாபெரும் வெற்றிப்படமாய் அமையும்.

பாடல்கள் விமர்சனம் போகலாமா...??

முதல் பாடல் ஓ மகசீயா

ஹரிஹரன், ஸ்வேதாவின் தேன் குரல்களும், ரம்யமான இசையும் நம்மைக் கட்டிப்போடுகின்றன. பாடல் வரிகள் எல்லாமே தமிழ்ப் படங்களில் வந்து நமக்கு புரியாத வரிகள் தான். ஆனால் பாடல் இனிமை..

இசைக்கு மொழி தேவை இல்லை என்கிறார்களோ??

ஹம்சத்வானி ராகம் மெல்லியதாய் இழையோடுவதாகப் பட்டது. இசை தெரிந்தவர்கள் சொல்லலாம்.

இரண்டாம் பாடல் குத்து விளக்கு

சும்மா குத்து குத்துன்னு குத்துறாங்க உஜ்ஜயினி.. என்னமா பாட்டுங்குறீங்க,.... மெல்லிய வீணையோட ஆரம்பிக்கும் போது நல்ல க்ளாசிக்கல் சாங்க்னு நினைச்சா சரியான குத்துப்பாட்டு. அந்த வீணை கூட தர்பாரி கனடாவா இருக்கலாம்.

மூனாம் பாட்டு பச்ச மஞ்ச செவப்பு தமிழன்

சும்மா விஜய் படத்து ஓபனிங்க் சாங்க் மாதிரி சல்லுனு ஏறுது... முகேஷ் பாடி இருக்காரு... பயபுள்ள கலக்கி இருக்காரு...எல்லா கலரும் சொல்லி நம்மளை சிரிக்க வச்சிடுறாங்க.. இதுக்கு நம்ம ஷிவா எப்படி ஆடப்போறாரோன்னு நினைச்சா காமெடியா இருக்கு..

சுனாமியோட பினாமி, ஏழைகளை ஏத்திவிடும் லிஃப்ட், மெதுவடை, தயிர்வடை தத்துவம்.. கலக்கி இருக்காரு பாடலாசிரியர்.. ;)

நாலாம் பாட்டு ஒரு சூறாவளி

எலெக்ட்ரிக் பேஸும் கித்தாரும் விளையாடி இருக்கு... இந்த சீன்ல காரை விட்டு கண்ணாடியோட ஷிவா இறங்கினார்னா எல்லாரும் கொல்லுனு சிரிச்சிடுவோம். சங்கர் மகா தேவன் கலக்கி இருக்காரு...

ஐந்தாம் பாட்டு தீம் மியூசிக்

என்ன காமெடின்னா ரொம்ப சீரியஸா இருக்கு இந்த தீம் மியூசிக். கலக்கலா இருக்கும் படத்தில..

மொத்தமா சொல்லணும்னா ஸ்பூஃப் வகை சினிமா தமிழ்ல அவ்வளவா இல்லை... சத்யராஜ் பண்ணி இருக்கார் ”மகா நடிகன்”ல.. ஆனா இந்த படம் முழு நீள நகைச்சுவையா இருக்கும்னு தோணுது..

கலக்குங்க மக்கா... இனிமே முட்டாள் தனமா படமெடுக்கிறவங்கல்லாம் பயப்படணும்.. முக்கியமா விஜய் அஜித் திருந்தணும்... ;)

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

வாழ்த்துகள் பீகார்

இந்திய மாநிலங்களிலேயே பின் தங்கிய மாநிலம் என்றால் அது பீகார் என்று எடுத்தவுடன் சொல்லிவிடுவார்கள். அதாவது லாலு பிரசாத் யாதவ் ஆண்டு வந்த காலங்களில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாது, வக்கில்லாத வகையாக, வாழ்ந்து வந்த மக்களுக்கு நிதிஷ் குமார் மூலம் விடிவு பிறந்திருக்கிறது.


ஆம்... பீகார் மாநிலத்தின் ஒட்டுமொத்தமாக 2004-05 ஆண்டு முதல் 2008-09 ஆண்டு வரையான ஐந்தாண்டு கணக்கில் 11.03% வளர்ந்திருக்கிறது.

அதாவது இந்தியாவின் தொழிற்துறையில் முன்ணணியில் இருக்கும் குஜராத் மாநிலத்தை விட 0.02% குறைவு. (11.05% குஜராத்).(இதே சமயத்தில் இந்தியாவின் வளர்ச்சி வீதம் 8.49%)


இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம், 2003-04 ஆண்டில் பிகாரின் வளர்ச்சி விகிதம் (-) 5.15%.

இதிலேர்ந்து நல்ல நிர்வாகம் இருந்தால் சிறப்பான வளர்ச்சியை எட்டலாம் என்பது புலனாகிறது.

வாழ்த்துகள் பீகார்.