சனி, 21 ஏப்ரல், 2007

இறைவணக்கம் - வெண்பாக்கள்

இறைவணக்கம்: குறள் வெண்பாக்கள்
*- அஹமது சுபைர் & ஹ.ஃபக்ருத்தீன்*

1). கண்ணின் கருவிழி காண்பவை தன்னிலாம்
எந்தன் நினைவில் இறை!

2). மண்ணில் பலருண்டு, மாண்போர் சிலர்தானாம்
எண்ணம் சிறந்திட ஏற்றம்.

3). தன்னின் நலத்தினை தானாக எண்ணாரும்
விண்ணில் உறைவோன் வழி!

4). எண்ணம் சிறக்கவும் ஏற்றம் கிடைக்கவும்
தன்னை அறிந்தே தொழு!

5). எண்ணம் நிறைவேற ஏகன் வரங்கிட்ட
கண்ணிலே நீர்வரக் கேள்.

6). இறையின் நினைவில் எதையும் செய்ய
குறையேதும் வந்திடா கேள்

7).இல்லையென்று கேட்பார்க்கு ஈயும் மனிதருக்கு
வல்லோன் அளித்திடும் வாழ்வு!

8). எல்லா நிலையிலும் எப்போதும் கொண்டிரு
வல்லோன் நவின்ற வழி.

9). மண்ணி லுறையும் மனிதர்க் கிரங்கிட
விண்ணின் உதவி வரும்!

10). கடலில் அலைகள் கணக்கிலும் போதா
அடங்கா நினைவில் அவன்.

எழுத்துக்கூடத்தின் 25 ம் கூட்டம் - வெள்ளிவிழா கூட்டம் - ஒரு பார்வை

அது ஒரு பொன் மாலைப் பொழுது... ஆம் எழுத்துக்கூடத்தின் 25 ம் அமர்வு தான்.

சிந்தை முழுதும் நம்மை ஆட்டிப்படைக்கும் வேலைப்பளு இல்லாதிருக்கும் வாரத்தின் ஒரே நாள் வெள்ளிக்கிழமை. மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிகளில் கூடுகிற எழுத்துக்கூடத்தின் இன்றையச் சிறப்பு இது வெள்ளிக்கிழமை மட்டுமில்லாமல் வெள்ளிவாரமும் என்பதாகும் (மலையாளத்தில் 'கிழம' என்பதே வாரம் என்ற பொருளில் தானாம்). இக்கூட்டம் பற்றி ஒன்று விடாமல் எழுதச் செய்யும் முயற்சியாக இப்பதிவு. ஓராண்டுக்கும் மேலான இந்த நிகழ்வு ரியாத் தமிழ்சங்க வலைப்பதிவில் பொன்னிறங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு www.riyadhtamilsangam.com

இலக்கியத்தின் மீதான நம் அனைவரின் ஆர்வம் தான் இந்த எழுத்துக்கூடம் இத்தனை வெற்றிகரமாக நடப்பதின் மூல காரணம்.

இந்த முறை எழுத்துக்கூடத்தின் வருகைப்பதிவு அதிகமாக இருந்தது.

ஆம், வழமையாக 4 முதல் 8 பேர்வரை கலந்துகொள்ளும் எழுத்துக்கூடம் இந்த முறை 18 பேர் கொண்ட மாபெரும் சபையாக மாறியது.

கலந்துகொண்டவர்கள்:
ஐயா அப்பாஸ் ஷாஜஹான் மற்றும் குடும்பத்தினர் (3)
'வாத்தியார்' கே.வி.ராஜா மற்றும் குடும்பத்தினர் (2)
ஐயா மாசிலாமணி அவர்கள் (1)
ஐயா வெற்றிவேல் அவர்கள் (1)*
ஐயா விஜய சுந்தரம் அவர்கள் (1)*
ஐயா இளங்கோவன் அவர்கள் (1)
ஐயா சோமு அவர்கள் (1)
ஐயா இம்தியாஸ் அவர்கள் (1)
ஐயா பாலமுகுந்தன் அவர்கள் (1)
ஐயா அறவாழி அவர்கள் (1)
கவிஞர் ஹ.பஃக்ருத்தீன் அவர்கள் (1)
திருமதி. மலர் சபாபதி அவர்கள் (1)
திரு தஞ்சை மீரான் அவர்கள் (1)
இவர்களுடன் நான் (அகமதுசுபைர்).

மற்றும் வெகு தொலைவிலிருந்து, தகவல் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் சாத்தியத்தால், நம்முடன் கலந்து கொண்ட ஐயா ஆசாத் அவர்கள். (1) (கடைசியா பெயர் போடுறது ஏன்னா..சினிமா படத்தில டைரக்டர் பேர் கடைசியாத்தான் வரும் :-))

வழமையாக கூட்டத்தில் கலந்துக்கொள்வதைத் தவறவிடாத 'இலக்கிய' ஷாஜஹான் தாயகம்சென்றிருப்பதால் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள இயலாமற் போனது நமக்கெல்லாம் வருத்தம் தான்.

மேற்குறிப்பிட்டவர்கள் தவிர நமக்கு தொலைபேசி மூலம் வாழ்த்தினைத் தெரிவித்த திருமதி கீதா சங்கர் அவர்கள். இத்தனை பேரும் கலந்து கொண்டபோதே அதன் சிறப்பு தெளிவாகத்தெரிந்திருக்க வேண்டும்.

இந்த கூட்டத்தின் தலைமைப்பொறுப்பை ஐயா அப்பாஸ் ஷாஜஹானிடம் ஒப்படைத்தார் எழுத்துக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. கே.வி.ராஜா அவர்கள். நிகழ்ச்சியின் முன்னிலை "வாழும் தமிழ்" ஐயா இளங்கோவன் அவர்கள்.

முதலாவதாக கவியரங்கம்,

தமிழ்க் கவிதைகள் மலினப்படுத்தப்பட்டதால், அவற்றின் எதிர்காலம் என்னவாகுமோ என இருந்த பயம் மெல்ல அகன்றது இந்த கவியரங்கத்தின் போது.

கவிஞர்கள் முறையே திரு.ராஜா, திரு.பஃக்ருத்தீன், திருமதி. மலர், மற்றும் திரு. சுபைர் (இவனுக்கெல்லாம் எதுக்கு "திரு"ன்னு முணங்குறது எனக்கு கேட்குது) மற்றும் திரு. இளங்கோவன் தங்களின் மின்னஞ்சலில் ஏற்கனவே பதிவான கவிதைகளை அரங்கேற்றினர்.

இதில் திருமதி மலர் அவர்கள் புதுக்கவிதையும், சுபைர் புதுக்கவிதைபோல ஒன்றும் அரங்கேற்றினர். ஏனையோர் மரபுக்கவிதைகளை கத்தியின் கூர்மையான வீச்சினை ஞாபகப் படுத்தும் கவிதைகளை அரங்கேற்றினர். இதில் ஐயா இளங்கோவன் அவர்கள் ஒருபடி மேலேபோய் தனது கட்டளைக்கலித்துறை+அந்தாதியினை அழகாக பாடிக்காட்டினார். (அதில் 5 குறை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசும் உண்டாம்..எனக்கு இதுவரை ஒன்னுகூட கிடைக்கல).

தமிழிசையில் கவியரங்கத் தலைவர் தனது அழுத்தமான ஆழமான கவிநயத்தில் நம்மை கட்டிப்போட்டார் என்றால் மிகையில்லை. திரு ஆசாத் அவர்கள் கானாப் பாடலும் பாடினார், எழுசீர் விருத்தமும் பாடினார். இதெல்லாம் போதாதென்று எனக்கு 10 ரியால் பரிசுக்கேள்வியும் கேட்டார். நம்ம தான் எதிலயும் அரைகுறை ஆச்சே. என்ன செய்றது. 10 ரியால் போச்சு. (கேள்வி என்ன என்று கேட்பவர்களுக்கு தொ.பே தொடர்பில் வாருங்கள்)

கவியரங்கக் கவிதைகள் மிக விரைவில் மேலே குறிப்பிட்ட வலைப்பதிவில் "எழுத்துக்கூடம்" பிரிவில் பதியப்படும். சிலரைப்பற்றி எழுதுவதற்கும் ஞானம் வேண்டும். எனக்கு அது இல்ல. அதனால இத்தோட நிறுத்துறது உத்தமம்.

அடுத்து ஐயா பாலமுகுந்தன் அவர்களின் "மீள் அடமானம்" (Reverse Mortgage) பற்றிய கட்டுரை. இது ஏற்கனவே எழுத்துகூடத்தில் வந்திருந்தாலும், இன்று மற்றொரு பரிணாமத்தை எடுத்துக்காட்டியது.

இலக்கியம் என்பது கதை, கவிதை மட்டுமில்லை, ஆக்கப்பூர்வமாக துறை சார்ந்தோர் தத்தம் துறை பற்றிய அறிவாக்கங்கள் எழுதியும் இலக்கியத்துக்கு பங்காற்ற வேண்டும் என்ற இளங்கோவன் ஐயா அவர்களின் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது!

தங்களின் துறைச் சார்ந்த இதுபோன்ற பதிவுகளால் தமிழ் மேலும் வளரும் என அனைவரும் கருத்து தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற கட்டுரைகளை எழுதித்தந்தால் புத்தக வடிவில் வெளியிட வழிகாட்டுவதாக ஐயா மாசிலாமணி கூறினார். மிக விரைவில் நாம் எதிர்பார்ப்போம்...

அடுத்ததாக நண்பர் ஃபக்ருத்தீன் "வாழ்க்கை நலம்" என்ற பெயரில் வெண்பா வாசித்தளித்தார். சுபைரும் ஃபக்ருத்தீனும் இணைந்து எழுதிய 10 குறள் வெண்பாக்களை "கடவுள் வாழ்த்து" எனும் பெயரில் வாசித்தளித்தனர்.

பின்னர் ஐயா மாசிலாமணி, தமது பங்களிப்பாக "தாக்கம் தந்த தமிழர்கள்" தொடரை ஆரம்பித்தார். இந்த முறை அவர் எடுத்துக்கொண்டது "ராஜராஜ சோழன்". நில அளவை எடுத்தது, அதற்குத் தகுந்த முறையில் வரி வசூலித்தது, வாணிகம் செய்ய பல நாடுகளுக்கும் செல்ல உற்சாகப் படுத்தியது (இன்றும் "தாய்லாந்து" மன்னர் பதவி ஏற்கும்போது திருப்பாவை ஓதித்தான் பதவி ஏற்கவேண்டுமாம்), நம்பியாண்டார் நம்பி மூலம் தமிழ் நூல்களை முறைப்படுத்தியது, பிரமாண்டமான கற்கோவில்களை எழுப்பியது, குடவோலை முறையை நடைமுறைப்படுத்தியது (இதே நேரத்தில் கிரேக்க நாகரிகத்தில் பிளேட்டோ கூட, குடியாட்சியில் பணபலம், ஆள்பலம் உள்ளவர் மட்டுமே பதவிக்கு வரமுடியும் என தனது "Republic" என்ற புத்தகத்தில் கூறியுள்ளாராம்.) என பல சாதனைகள் புரிந்ததால் இந்த அரசர் தன் பட்டியலில் இடம் பிடித்ததாக ஐயா மாசிலாமணி கூறினார். இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் ஐயா மாசிலாமணி அவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அனைவரும் புலவர்கள், ராஜராஜசோழன் தவிர.

சில நேரங்கள் மறக்க முடியாததாக ஆகிவிடுவதுண்டு. சில நேரங்கள் மறக்கக் கூடாததாக ஆகிவிடுவதுண்டு. சில நேரங்கள் இரண்டுமாய் அமைவதுண்டு. அந்த கணங்கள் அமைந்தது 25ம் எழுத்துக்கூடத்தில்..
25ம் வாரம் நடக்கும் இவ்வெழுத்துக்கூடம், வருடங்களையும் யுகங்களையும் கடந்து, இடம் நாடு என்கிற பரிமாணங்களையும் தாண்டி, தமிழுக்கும் தமிழ்கூறு நல்லுலகுக்கும் பலப்பல தொண்டாற்றி நிற்க வேண்டும் என்று வாழ்த்துவமாக!

இத்தனையும் பார்க்க நண்பன் கல்யாண் நம்முடன் இல்லை எனும்போது மனம் கனக்கத்தான் செய்தது.

கவியரங்கம் - ரியால் மட்டுமா??

கவியரங்கத்தில் பல பெரியவர்கள் களமிறங்கி இருக்கையில், நான் களத்தில் இறங்க யோசித்துக்கொண்டிருந்தேன்.

அலைக்கு பயந்தவன் கடலில் குளிக்க முடியாது.
வலைக்கு வந்துவிட்டு மெளனம் பேசக்கூடாது.

*கடவுள் வாழ்த்து:*

உலகைப் படைத்து
உயிரும் அளித்து
நினைவும் உணர்வும்
நிரம்பச் செய்து
எண்ணம் பலவும்
ஏற்றித் தந்த
இறைவா வணக்கம்.

*தமிழ் வாழ்த்து:*

முத்தமிழே செந்தமிழே
வித்தையாய் வாயிங்கு!
நித்தமொரு கவிதைக்கு
நீயிருக்க பயமெதற்கு!

*சபையோர்க்கு:*
கவிதை பாட வந்துவிட்டேன்
கவனமாய் கேளுங்கள் அவையோரே
புவியில் பொருந்தாப் பாட்டானால்
புலம்பலை நிறுத்தச் சொல்லுங்கள்
கவியில் சுவையே கூடி வந்தால்
கோடி வாழ்த்து கூறுங்கள்.

*ரியால் மட்டுமா???*

பாலைவனமெனப் படித்த
பாடம் மறக்கும் முன்னே
சிறகுகள் முளைத்ததே
சவுதியும் வந்ததே.

இந்தியாவில் இடமென்றால்
இங்கோ அது வலமாகும்
வாகனத்தில் மட்டுமில்லை
வாழ்விலும் அதே நிலை.

பணத்தின் கனத்தை பார்த்துவிட்டால்
பொதுவாய் செலவும் குறைந்து விடும்.

கனமாய் பொழுது அமைந்துவிட்டால்
பணமும் பொருளை இழந்துவிடும்.

"வைத்தியனுக்கு கொடுக்கும் காசை
வாணிகனிடம் கொடு"
பழமொழிகள் பொய்யாகுமென
கற்றதும் இங்கு..

ரியால் மட்டுமா பெற்றேன்
ரியாதில் பெற்றேன் இன்னுமதிகம்.

இரவின் தனிமை
மனதின் வெறுமை
பணத்தினும் அதிக கனவுகள்
கால்வலிக்காக போனால்
காதுவலிக்கு மருந்து
இழக்கும் அறிவு
வளரும் வயிறு
கொட்டும் மயிர்
பவுடர் பால்
கட்டில் கனவு
தொட்டில் நினைவு

ஊருக்கு போகையில் மட்டும்
முகம் காட்டும் உறவு

சினை பிடிக்க ஓட்டிச்சென்று
மாடு குதித்தோட
பாய்ந்தோடி பிடித்த
இளமையின் இழப்பு...

எதிர்மறை மட்டுமா?
இல்லை நேர்மறையுமுண்டு

இல்லையெனும் போது
சாய்ந்து அழ ஒரு தோள்

சவூதி வரும் முன்னே
எப்போது பார்த்தாலும்
பார்க்காது போகும்
என்னவளின் நொடிப்பார்வை

திட்டுதலே தொழிலான
தந்தையின் பரிவு

இழந்தவை அதிகமா??
பெற்றவை அதிகமா??
அவனவனுக்குத் தெரியும்
வலியும் வேதனையும்

"காசு பெரிசில்லடா"
சொல்லும்போதே
"இந்தமாசம் கொஞ்சம் கூட அனுப்பு"
அப்பாவின் குரல்

தொலைபேசியில் மட்டுமே நெருங்கும்
பத்து வயது தங்கை
நகை கேட்கச் சொல்லும் அம்மா
நகைத்துக்கொள்வேன் உள்ளுக்குள்

பன்னிரண்டாம் வகுப்பில்
படிக்கும் தம்பிக்கு
போதாதாம் கண்ணிரண்டு
"கேமரா மொபைல் வாங்கி வா"

பேசப் பேச கேட்டுக்கொண்டும்
செவிடாகத்தான் இருக்கிறேன்.

நான் பேச நினைப்பதல்லாம்
பணம் பேசப் பார்க்கிறேன்.

பணம் பேசும் உலகத்தில்
மனம் மெளனம் காக்கிறது.

ஆம், ரியால் மட்டுமல்ல..
பெற்றிருக்கிறேன் பலவும்..

வெளிச்சம் நோக்கிய பயணம்
விடியல் தான் கொஞ்சம் தூரமாய்த் தெரிகிறது!!

எழுத்துக்கூடத்தின் 24ம் கூட்டம் ஒரு பார்வை

எத்தனை வேகமாக நகர்கின்றன நாட்கள். கண்மூடி திறக்கும் முன் 24ம் கூட்டமும் முடிவடைந்துவிட்டது. இதுவரை நடந்த கூட்டங்களுக்கு திரு. இலக்கிய ஷாஜஹான் பதிவு எழுதுவார். (இவர் மக்கள் மத்தியில் லக்கி ஷாஜஹான் என அறியப்படுபவர்.) இவர் தற்போது விடுப்பில் இருப்பதால் நான் எழுத வேண்டியதாகி விட்டது. என் செய்வது தொல்லை கொடுப்பதே எம் தொழில்.

24ம் கூட்ட அமர்விலே கலந்து கொண்டவர்கள் ஐயா திரு. மாசிலாமணி அவர்கள், திரு. ஜெயசீலன் அவர்கள், திரு. மற்றும் திருமதி. பாலமுகுந்தன் அவர்கள், திரு. ராஜா, திரு. ஃபக்ருத்தீன் மற்றும் அடியேன்.

வழக்கமாக நடைபெறும் கூட்டம் போல் தொடங்கியது. ஆனால் நேரம் செல்லச்செல்ல வேகம் பிடித்தது. "கதாவிலாசம்" பகுதியை நண்பர் ஃபக்ருத்தீன் வாசிக்க ஆரம்பித்தார். சுபைர் வாசிக்கும்போது வேகமாக வாசித்துவிடுவார். அதனால் கலந்தாலோசிக்க நேரம் கிடைக்காது. ஆனால் நண்பர் ஃபக்ருத்தீன் நிறுத்தி நிதானமாக வாசித்ததால் கலந்தாலோசித்தல் சாத்தியப்பட்டது.

"சரித்திரத்தின் சாலை" எனத் தலைப்பிட்ட அத்தியாயம் திப்பு சுல்தான் மாளிகையில் எழுத்தாளர் நிற்பதில் துவங்குகிறது. திப்பு சுல்தான் இயந்திரப் புலியை வளர்த்து வந்ததாகவும் அதைக் கொண்டு வெள்ளையர்களை பயமுறுத்தியதாகவும் எழுதியிருக்கிறார். திப்புவிடமிருந்து வெள்ளையர்கள் கற்ற பல விஷயங்களில் நில அளவை (சர்வே) எடுப்பதும் ஒன்று என்கிறார்.
"வாளின் தன்மை" என்ற பெயரிலான திரு ச. தமிழ்செல்வனின் சிறுகதை விவரிக்கப் பட்டிருக்கிறது.

சுப்பையா என்ற குமாஸ்தா தலைமுறை தலைமுறையாக சாகசம் செய்து வந்த வீரவாளை பைக்குள்ளே வைத்துக்கொண்டு பயணம் செய்வதில் தொடங்கி, வாளின் பெருமையை மீட்டெடுக்க சபதம் கொண்டு, வாளைத் தோளிலேயே தொங்கவிட்டு அலைந்து, அவன் வாளைச் சுழற்றிக்கொண்டு அலைகிறான்.

இந்த சிறுகதை குடும்ப வரலாற்றின் மீதான மீள் பார்வையை முன்வைப்பதோடு, இன்றைய மனிதனின் பலவீனத்தையும் வெளிப்படுத்துகிறது.

திப்பு சுல்தான் மாளிகையைப் பற்றி பேசும்போது ஐயா ஜெயசீலன் அவர்கள் ரியாத் மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளை சுற்றிப் பார்த்த நாட்களையும் அதன் அனுபவங்களையும் கூறினார்.

ஜெயசீலன் அவர்களின் பேச்சில் தான் அவரின் அனுபவம் தெரிகிறதேயொழிய அவர் இளைஞனாகவே இருக்கிறார். சுற்றுலா பற்றி அவர் பேசும்போது கண்களில் தெரியும் உற்சாகம் இன்னும் இரண்டு வருடம் குறைத்துத்தான் காட்டுகிறது.

கதாவிலாசத்திற்குப் பிறகு, ஐயா மாசிலாமணி அவர்கள் "தாக்கம் தந்த தமிழர்கள்" பகுதியை தொடர்ந்தார். அவர் இந்த கூட்டத்தில் எடுத்துக்கொண்ட ஆளுமை "ஆண்டாள்".

கடவுளைக் கண்டு பயந்துகொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், தன் நாயகனாக நினைந்துருகிய ஒரு ஈடுபாடு பிடித்திருக்கிறது. அவர் காலத்திற்கு பிறகு தான் வட நாட்டில் மீரா போன்ற கடவுளைக் காதலிக்கும் மனோபாவம் தோன்றியதாக சொல்கிறார்.

சங்கிடம் தன் நாயகனின் வாய்ச் சுவை எப்படி இருக்கிறது என ஆண்டாள் கேட்கும் போதே அவரின் ஈடுபாடு நமக்கு வியப்பைத் தருகிறது.

இன்ஷா அல்லாஹ், எழுத்துக்கூடத்தின் 25ம் கூட்டத்தில் "தாக்கம் தந்த தமிழர்கள்" புத்தக வடிவில் வெளியிட ஏற்பாடாகியுள்ளது.

ஐயா மாசிலாமணி அவர்கள் எப்படி இத்தனை மாறுபட்ட மனிதராக இருக்கிறார் எனப் புரியவில்லை. லேசர் பற்றி பாடம் நடத்துகிறார், தமிழர் வரலாற்றை புட்டு புட்டு வைக்கிறார், "பாவனா" பற்றியும் கேள்விகள் எழுப்புகிறார்.

அவரின் MCD (Masila's Cancer Diagnosis) - புற்று நோய் நேடலுக்கான கண்டுபிடிப்பு நிச்சயம் நோபல் பரிசைப் பெற்றுத்தரும். இன்னுமொரு நல்ல செய்தி அவரின் கண்டுபிடிப்பு, இந்திய அரசாலும், அமெரிக்க அரசாலும் (Patent) ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

என் மனதில் அவரைப் பற்றிய மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடைசியாக வந்தது "வெண்பா - பயிற்சி வகுப்பு"
வாத்தியார் ராஜா, குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம் என கலந்து கட்டினார். அவர் வெண்பா நடத்த கரும்பலகையில் (இங்கே வெள்ளைப் பலகை) எழுதும் போது ஒரு நிமிடம், நம்மை வெயிலில் முட்டிபோட சொல்லிவிடுவாரோ என தோன்றியது. நமக்குத்தெரிந்த தமிழாசிரியரெல்லாம் "கோனார் தமிழுரை" படிப்பதோடு நிறுத்திவிடுவர். ஆனால் ராஜாவின், நடிகைகளை உதாரணம் காட்டி அசை பிரித்த ஆரம்பம் முதலே, வெண்பா எழுதவேண்டும் என உத்வேகம் உந்தப்பெற்றோம்.

நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா போன்றவற்றை ராஜா சொல்லிக்கொடுத்தார்.

நிச்சயம் சொல்கிறேன், ராஜாவின் வெண்பா பாடம் படித்தால், தமிழ் மீது ஒரு ஈர்ப்பு வருகிறது. எத்தனை அழகான இலக்கணமுறை, அசை கூட எப்படி முடிய வேண்டும் என ஒரு இலக்கணம்..அடடா, நாம் இத்தனை காலம் வெண்பாவின் சுவையை இழந்துவிட்டோமென்றுதான் சொல்ல வேண்டும்.
வரும் எழுத்துக்கூட நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக "தாக்கம் தந்த தமிழர்கள்" புத்தக வெளியீடும், மற்றும் சில முக்கியமான நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன.

எதிர்பார்ப்போம்...இன்ஷா அல்லாஹ்.

தமிழுக்காக நாம் காவியம் படைக்காவிட்டாலும், தமிழின் பெருமையை அறிந்துகொள்வோம்.

சனி, 7 ஏப்ரல், 2007

தமிழ் புத்தாண்டு விழா - 2007

தமிழ் கலாச்சார கழகமும் (TCS), இந்திய தமிழ் கலைக் குழு (ITFAA) இணைந்து 05-ஏப்ரல் - 2007 அன்று நடத்திய "தமிழ் புத்தாண்டு விழா" நம்மை வியப்பில் ஆழ்த்தியது என்றால் மிகையில்லை.

என்னடா..சுபைர் யாரையும் பாராட்டி பேச மாட்டானே? என்ன இவனுக்கு வந்தது? எதுவும் கமிஷன் வாங்கிட்டானா?ன்னு முணுமுணுக்கிறது கேக்குது..
என்ன செய்யிறது... நல்லத பாராட்டித்தானே ஆகணும்.

எப்பப் பார்த்தாலும் மத்தவங்க லேட்டா வர்றாங்கன்னு குத்தம் சொல்லியே பழக்கப்பட்ட நான், இந்த விழாவுக்கு லேட்டா தான் போனேன். எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான் லேட்டா போனேன். ஆனா அது தப்புன்னு சீக்கிரமே புரிஞ்சுக்கிட்டேன்.

லைட் மியூசிக்காம்..ஆனா அது ரொம்ப சூப்பரா இருந்திச்சு. ஜனனி அக்கா ஃபேன் ஆயிட்டேன். இன்னாமா பாடுதுன்றீங்க?. ஜனனிக்கா மட்டும் இந்தியால இருந்திருந்தா இந்நேரம் பெரியாளா வந்திருக்கும். இப்ப ஒன்னும் கெட்டுப்போயிடல. +2 முடிச்சுட்டு இந்தியா போறாங்கலாம். இது ரியாத் மக்களுக்கு இழப்பா இருந்தாலும், அவங்க நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். ஜனனி அக்காக்கு "ஹை-பிட்ச்" வரலன்னு நினைக்கிறேன். பட்,
ரொம்ப நல்லா இருந்திச்சு.

கீ-போர்ட் வாசிச்ச "விக்னேஷ்" - நிச்சயம் 10 வருஷமாவது கத்துண்டிருக்கணும். அந்த "வசீகரா - மின்னலே" பாட்டுக்கு அவர் அடிச்ச பிட்...அப்பப்பா!..அவரும் பெரிய ஆளா வருவார். இந்த நேரத்தில இன்னும் ஒன்னு சொல்லணும், அந்த போக்கிரி பட பாட்டுல மைக் ரிப்பேர் ஆகிட "விக்னேஷ்"க்கு வந்ததே கோபம். அதெல்லாம் கலைஞனுக்கே உரித்தான கோபம்.

இதுக்கெல்லாம் திருஷ்டிப் பொட்டு தான் மத்தவங்க பாடினது. அதப் பத்தி நான் சொல்ல ஒன்னுமில்ல. அவங்க மாறினா நல்லது. அப்புறம் "அஸ்வினி"ன்னு யாரோ நல்லா பாடுவாங்களாமே? அவங்கள காணல..

இதுக்கப்புறம் வந்திச்சுப்பா.. டான்ஸ்.. இன்னாமா என்ஜாய் பண்ணுனேன் தெரியுமா?

முதல்ல பரதநாட்டியம், திருமதி. நிஷாமேனன் சொல்லிக்கொடுத்திருக்காங்க. ஆர்த்தியும், ஷில்பாவும் நல்லா ஆடினாங்க. இதுல ஷில்பா கொஞ்சம் மறந்திட்டாங்க. ஆனா ஆர்த்தி நல்லா ஆடினாங்க. இத சிறப்பான நாட்டியம் சொல்ல முடியாட்டியும், ரியாத் சூழலைப் பொறுத்த மட்டும் இந்த முயற்சி மிக சிறப்பானது.

அப்புறம் "யம்மாடி ஆத்தாடி (வல்லவன்)" பாட்டுக்கு ஆடினாங்க பாருங்க...காண கண்கோடி வேண்டும்.. அதே மாதிரி "முந்தி முந்தி வினாயகரே" பாட்டுல "பொய்க்கால் குதிரை" எப்படி அழகா வடிவமைச்சிருந்தாங்க தெரியுமா!..அந்த கலை இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

அதே மாதிரி, சென்னை செந்தமிழ் பாட்டுல "மறந்தேனே"ன்னு வர்ற இடத்துல என்ன அபிநயம். நெற்றிப் பொட்டிற்கருகில் விரல் காண்பித்து சுழட்டும் போது மிகச் சரியாக பொருந்தியது.

"குரு" படத்து பாட்டில் "ஐஸ்வர்யா" ஆடினது மாதிரியே "ஷிம்மி" ஆடினாங்க. அந்த பாட்ட வடிவமைச்சவங்க, படத்தில இருக்கிறது மாதிரி ஆடினா போதும்னு நினச்சிட்டாங்க போலிருக்கு. ஒரு கற்பனை வறட்சி அந்த பாட்டில இருந்தது.

அப்புறம் "ஸ்ரேயா" ஆடின மழை பட பாடல். அந்த குட்டிப் பொண்ணு என்னாமா ஆடினுச்சு. ஒரு சபாஷ்.

இத்தனை இருந்தும் பாராட்டிட்டு போனா மட்டும் போதுமா? குறை இருந்துச்சா?ன்னு கேட்டா, ஹ்ம் இருந்துச்சு. ஆட்டங்களுக்கு இடையில் மிகுந்த இடைவெளி. இதுக்கு குழந்தைங்க உடை மாத்திட்டு வரணும்னு சொன்னாலும், அங்கே ஒரு திட்டமிடலில் இருந்த குறைபாடு தான் பெரிசா தெரிஞ்சது. ஆனாலும் மூன்றே நாட்களில் இதை நடத்திக்காட்டிய "TCS & ITFAA" குழுவினர எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இன்னொரு குறை என்னான்னா மேடையில "TCS" போஸ்டர் மட்டும் தான் இருந்திச்சு. "ITFAA" போஸ்டர காணல.

இந்த விழா "சங்கமம்" தொலைக்காட்சியில "ஏப்ரல் 14" முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. "சங்கமம்" தொலைக்காட்சியை சவூதியில் "தமிழன்" தொலைக்காட்சியில் காணலாம்.

எது எப்படியோ, பாலைவனத்தில ஒரு பரவசம் இந்த விழா.

செவ்வாய், 20 மார்ச், 2007

பாப் உல்மர் மரணம் - கொலையா?

சில நேரங்களில் தோல்விகள் மனதை துவளச் செய்துவிடும். சில நேரங்களில், தோல்விகள் மறந்து போனாலும் அதன் ரணங்கள் மாறாதிருக்கும்.

எனினும் இந்தியா வங்காளதேசத்திடம் தோற்றது சாதாரணமான செய்தி. (நாம தான் ஏற்கனவே அவிங்க கிட்ட தோத்துப்போயிருக்கோம்ல..)

ஆனால், பாகிஸ்தான் அயர்லாந்திடம் தோற்றது மறக்கக்கூடியது அல்ல.

கத்துக்குட்டிகள் சில நேரங்களில் மாயாஜாலங்களை நிகழ்த்தும்போது நாம் கைதட்டி வரவேற்பது தான் நியாயம்.

நேற்று NDTV-ல் பேசும் ஒரு பாகிஸ்தானி - "பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மண்ணில் மிதிக்க விட மாட்டோம்" என்று கூறுகிறார்.

விளையாட்டு தானே! வெற்றி தோல்வியெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வாய்த்திருக்க வேண்டும்.

பாப் உல்மரின் மரணம் சில சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.

"இந்த நாள் என் பயிற்சியாளர் வாழ்வில் மிக மோசமான நாள்" - என்று வங்காளதேசத்திடம் பாகிஸ்தான் தோற்றபோது உல்மர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒரு விளையாட்டு வீரராக, வார்க்விக் ஷையர் அணியின் பயிற்சியாளராக, 1999ம் ஆண்டு அரை இறுதி வரை சென்ற தென்னாப்ரிக்க அணியின் பயிற்சியாளராக, ஐ.சி.சி. செயல்பாட்டு துறையின் மேலாளராக, பிறகு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக என பல பொறுப்புகளை சுமந்தவருக்கு தோல்வி புதிதா என்ன?

அவரின் மரணம் இப்போது என்னுள் எழுப்பியுள்ள கேள்வியெல்லாம்

1. பாகிஸ்தான் அயர்லாந்திடம் ஏன் தோற்றது?

2. பாப் உல்மர் போன்ற விளையாட்டுடனே வாழ்க்கையை வாழப் பழகியவர்கள், மன அழுத்தத்திற்கு (Mental Stress) ஆளாக முடியுமா?

3. அவர் அதிகமான மருந்தினால் (மதுவும் தான்) மரணம் அடைந்திருக்கக் கூடும் எனில் விளையாட்டினை விளையாட்டாக எடுக்கவில்லையோ?

4. அனைத்தையும் தாண்டி அயர்லாந்திடம் தோற்றது மட்டும் தான் காரணம் என்றால், இவரே தென்னாப்ரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த போது (1996 ம் ஆண்டு) அந்த அணி இரண்டாம் சுற்று போகவில்லையே! இதே நிலை தானே? அப்போது என்ன நினைத்திருப்பார்?

5. அவர் இறந்த உடனே ஓய்வை இன்ஜமாம் அறிவிக்க காரணம் என்னவாக இருக்கும்?

இவையெல்லாம் ஒரு சாதாரண மனிதனின் எண்ணங்கள்.
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

http://news.bbc.co.uk/sport2/hi/cricket/6464983.stm

http://news.bbc.co.uk/sport2/hi/cricket/other_international/pakistan/6465063.stm

http://news.bbc.co.uk/sport2/hi/cricket/other_international/pakistan/6464831.stm

http://www.dailyindia.com/show/126649.php/Did-Woolmer-die-of-drugs-and-booze-overdose

செவ்வாய், 6 மார்ச், 2007

பருத்திவீரன் - திரைப்பார்வை

ஆரோக்கியமான வளர்ச்சி தமிழ்த் திரைத்துறையில்..
இளைய இயக்குனர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, கருவேலங்காடுகளுடன் உழலும் எம் மக்களின் வாழ்க்கையை அருகிருந்து படம் பிடிக்கின்றனர்.
சில நேரங்களில் பொருளாதார ரீதியாக வெற்றியும் பெற்றுவிடுகின்றனர்.

அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருள் புதிதாக இடம் பிடிக்கிறார் அமீர்.

சண்டித்தனம் பண்ணுகிற காளை "கார்த்தி" பருத்திவீரனாக.
அம்மா கழுத்திலேயே அரிவாள் வைக்கும் மறத்தமிழச்சியாக (அடிக்க வராதீங்க...) "ப்ரியாமணி"
சித்தப்புவாக "பொண்டாட்டி ராஜ்யம்" புகழ் "சரவணன்" (அதாம்பு..விஜயகாந்த் மாதிரி ஆக்ட் விட்டுக்கிணு சுத்தினாருல்ல..அவுர் தான்.)
பொண்ணுக்கு அப்பனாக, "பொன்வண்ணன்"
மற்றும் சில கதைக்கான பாத்திரங்கள்.

கதை ரொம்ப சின்னது.. சண்டியர் காதலிக்கப் படுகிறார். காதலில் விழுகிறார். இருவரும் ஒன்று சேருகிறார்களா? இல்லையா?

சில பேர் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் வழி ரொம்பவும் வித்தியாசமானது. நல்லா படிச்சு டாக்டராகணும், இன்ஜினியர் ஆகணும் என்று சிலரும், "ஏலே! லாலுஜி கூட பால் வித்தவர் தாம்ல..நானும் மாடு மேய்க்கப் போறேன்ல" என்று சிலரும் வித விதமான வழியை தேர்ந்தெடுக்கின்றனர்.

இக்கதையின் நாயகன் தேர்ந்தெடுக்கும் வழி "அடிதடி".

சில நேரங்களில், சில நினைவுகள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச்செல்லும். அப்படி சில நினைவுகள் கலந்து கட்டி அடிக்கும் போது கண்ணில் நீர்த்துளி வரலாம். வயிறு குலுங்க சிரிக்கலாம்..

இந்த திரைப்படத்தினை பார்க்கும்போது "ஏம்பல்" என்ற சிறு கிராமத்திலே என் பள்ளிப்பருவத்திலே நான் வளர்ந்த காலத்தின் நினைவு வந்தது.

மஞ்சள் வெயில் தெறிக்கும் பூமியை அப்படியே அள்ளி வந்திருக்கிறது ராம்ஜியின் ஒளிப்பதிவு. கானல் நீர் ஓடும் காட்சிகளும், வெக்கை பரவும் நேரங்களும் ஏ.சி. அறையின் குளுமையைக் காட்டிலும் உள்ளுக்குள் பரவுகிறது.

இசை யுவன் சங்கர் ராஜா. சில படைப்பாளிகள் தங்களுக்குள் இருக்கும் திறமையை வார்த்தெடுக்கும் வல்லுனர்கள் இல்லாததால் திறமையை விட சற்றே குறைவான பெயரையும் புகழையும் பெறுகின்றனர். இங்கே தனித்தன்மையுடன் செயல்படும் பலருக்கு உரிய மரியாதை கிடைக்கப் பெறுவதில்லை.

யுவனின் பாடல்களை விட பின்னணி இசை பிரமாதம். மௌனம் காக்கிறது சில இடங்களில். பிரவாகமெடுக்கிறது பல சமயங்களில்.

"அறியாத வயசு" பாடலில் இளையராஜாவின் குரல் நம்மை கட்டிவிடுகிறது என்பது உண்மை.

இயக்குனர் அமீர், முந்தைய படங்களில் தமிழ் திரைத்துறையில் இருக்கை பிடித்திருந்தார். இப்போது பெர்த் சீட்டே கிடைத்திருக்கிறது.

"சென்னை மத்திய சிறையை பார்த்துவிட வேண்டும்" என்ற குறிக்கோளுடைய கதாநாயகன், அவன் செய்யும் அத்தனை தவறுகளும் அறிந்திருந்தும் அவனுக்காக உயிர் வாழும் நாயகி.

படம் ஆரம்பித்து 2 மணிநேரம் வரை கிராமிய மணம் கமழும் ஒரு வாழ்க்கையின் திரைச்சான்று என்று நினைத்திருந்தேன்.

கடைசி அரைமணி நேரம் எதுவும் பேசாது, அழுது கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன்.

வசனங்களில் அரிவாளின் வீச்சு.. இறுதி நேரத்தில் கதாநாயகி கதறும் காட்சிகளில் நெஞ்சு விம்மித்துடித்தது. அந்த காட்சிகளில் வரும் வசனம் அத்தனையும் மறக்க முடியாதவை.

நாம செய்யுற பாவத்துக்கு தண்டனை எப்படி கிடைக்குமோன்னு நினைச்சு ராத்திரி முழுக்க தூங்க முடியலயா...!

வெள்ளி, 23 பிப்ரவரி, 2007

தீபாவளி - திரை விமர்சனம்

இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் வந்திருக்கும் "தீபாவளி" இயக்குனர்களின் தயாரிப்புகளுக்கு வலுசேர்க்கும் மற்றுமொரு படைப்பு.

ஜெயம் ரவி - தன் அண்ணன் இயக்கத்தில் மட்டுமே வெற்றியை சுவைத்தவருக்கு இந்த படம் ஒரு மைல்கல்.

அழகான இம்சையாக "பாவனா" - 1985ல் பிறக்கும்போதே தமிழ்நாட்டை ஆட்டிப்படைப்பாள் என்று ஆசி பெற்று வந்திருக்கிறார்.

கதை ஒன்றும் அத்தனை சிறப்பு இல்லை என்றாலும் திரைக்கதை, வசனங்களில் தூக்கி நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.

கதைப்படி சென்னை ராயபுரம் பகுதியில் வாழும் பெரியவர் விஜயகுமாரின் மகனான ஜெயம் ரவி எதிர் வீட்டுக்கு வரும் பாவனாவை லவ்வுகிறார். பாவனாவும் லவ்வும்போது, வில்லன் வேண்டுமே? - வருகிறார். பாவனாவின் அப்பாவாக மலையாள இயக்குனர் லால். சண்டைக்கோழி கொடுத்த தெம்பில் புகுந்து விளையாடி இருக்கிறார் லால். சில இடங்களில் ஒட்டு தாடி தெளிவாக தெரிகிறது. மேக்கப் மேன் கவனிக்க.

மருத்துவ உலகிற்கு தமிழ் திரை உலகம் தரும் மற்றுமொரு புது வியாதி. ஏதோ, "அம்னீசியா"வாம். நமக்கு அந்த கண்றாவியெல்லாம் என்ன தெரியுது?
நமக்கு தெரிந்ததெல்லாம் பாவனா, ரவி கெமிஸ்ட்ரி மட்டுமே.

சில காட்சிகளில் அட போடவைக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இசை யுவன் - சில பாடல்களில் அட...சில பாடல்களில் அச்சச்சோ! பின்னணி இசையில் அமர்க்களம்.

பாவனா நடிப்பில் மிகப்பெரிய மாற்றம், அழகாய் இருக்கிறார், அழகாய் ஆடுகிறார், அழகாய் நடிக்கவும் செய்கிறார்.

ஜெயம் ரவி நடிப்பு இன்னும் கரை சேர வேண்டும், ஆனாலும் நல்ல முன்னேற்றம் - துறு துறுவென நமக்குத்தெரிந்த எதிர்வீட்டு பையனை கண்முன் நிறுத்துகிறார்.

விஜயகுமார் அழகாக சென்னை பாஷை பேசுகிறார். மற்றோரெல்லாம் பேச வேண்டுமே என்பதற்காக முயற்சி செய்திருக்கிறார்கள் (சில சென்னை வாசிகள் தவிர).

இன்னும் எத்தனை காலம் தான் அடிபட்டு மருத்துவமனையில் கிடக்கும் கதாநாயகன் எல்லா ட்யூப்களையும் பிடுங்கிவிட்டு வந்து 50, 60 வில்லன்களை புரட்டிஎடுப்பாரோ! தெரியவில்லை.

கலை இயக்குனரின் கை வண்ணம் ரவியின் படுக்கையறையில் தெரிகிறது.

இந்த இயக்குனர்கள் மட்டும் தங்களின் படைப்புகளை இங்கேயே எடுக்கிறார்கள், மற்றோரின் தயாரிப்பு எனில் வெளிநாட்டுக்கு பறக்கிறார்கள்.

மொத்தத்தில் தீபாவளி - ரசிகர்களின் சட்டைக்கு அடித்த புது செண்ட்.