சனி, 21 ஏப்ரல், 2007

கவியரங்கம் - ரியால் மட்டுமா??

கவியரங்கத்தில் பல பெரியவர்கள் களமிறங்கி இருக்கையில், நான் களத்தில் இறங்க யோசித்துக்கொண்டிருந்தேன்.

அலைக்கு பயந்தவன் கடலில் குளிக்க முடியாது.
வலைக்கு வந்துவிட்டு மெளனம் பேசக்கூடாது.

*கடவுள் வாழ்த்து:*

உலகைப் படைத்து
உயிரும் அளித்து
நினைவும் உணர்வும்
நிரம்பச் செய்து
எண்ணம் பலவும்
ஏற்றித் தந்த
இறைவா வணக்கம்.

*தமிழ் வாழ்த்து:*

முத்தமிழே செந்தமிழே
வித்தையாய் வாயிங்கு!
நித்தமொரு கவிதைக்கு
நீயிருக்க பயமெதற்கு!

*சபையோர்க்கு:*
கவிதை பாட வந்துவிட்டேன்
கவனமாய் கேளுங்கள் அவையோரே
புவியில் பொருந்தாப் பாட்டானால்
புலம்பலை நிறுத்தச் சொல்லுங்கள்
கவியில் சுவையே கூடி வந்தால்
கோடி வாழ்த்து கூறுங்கள்.

*ரியால் மட்டுமா???*

பாலைவனமெனப் படித்த
பாடம் மறக்கும் முன்னே
சிறகுகள் முளைத்ததே
சவுதியும் வந்ததே.

இந்தியாவில் இடமென்றால்
இங்கோ அது வலமாகும்
வாகனத்தில் மட்டுமில்லை
வாழ்விலும் அதே நிலை.

பணத்தின் கனத்தை பார்த்துவிட்டால்
பொதுவாய் செலவும் குறைந்து விடும்.

கனமாய் பொழுது அமைந்துவிட்டால்
பணமும் பொருளை இழந்துவிடும்.

"வைத்தியனுக்கு கொடுக்கும் காசை
வாணிகனிடம் கொடு"
பழமொழிகள் பொய்யாகுமென
கற்றதும் இங்கு..

ரியால் மட்டுமா பெற்றேன்
ரியாதில் பெற்றேன் இன்னுமதிகம்.

இரவின் தனிமை
மனதின் வெறுமை
பணத்தினும் அதிக கனவுகள்
கால்வலிக்காக போனால்
காதுவலிக்கு மருந்து
இழக்கும் அறிவு
வளரும் வயிறு
கொட்டும் மயிர்
பவுடர் பால்
கட்டில் கனவு
தொட்டில் நினைவு

ஊருக்கு போகையில் மட்டும்
முகம் காட்டும் உறவு

சினை பிடிக்க ஓட்டிச்சென்று
மாடு குதித்தோட
பாய்ந்தோடி பிடித்த
இளமையின் இழப்பு...

எதிர்மறை மட்டுமா?
இல்லை நேர்மறையுமுண்டு

இல்லையெனும் போது
சாய்ந்து அழ ஒரு தோள்

சவூதி வரும் முன்னே
எப்போது பார்த்தாலும்
பார்க்காது போகும்
என்னவளின் நொடிப்பார்வை

திட்டுதலே தொழிலான
தந்தையின் பரிவு

இழந்தவை அதிகமா??
பெற்றவை அதிகமா??
அவனவனுக்குத் தெரியும்
வலியும் வேதனையும்

"காசு பெரிசில்லடா"
சொல்லும்போதே
"இந்தமாசம் கொஞ்சம் கூட அனுப்பு"
அப்பாவின் குரல்

தொலைபேசியில் மட்டுமே நெருங்கும்
பத்து வயது தங்கை
நகை கேட்கச் சொல்லும் அம்மா
நகைத்துக்கொள்வேன் உள்ளுக்குள்

பன்னிரண்டாம் வகுப்பில்
படிக்கும் தம்பிக்கு
போதாதாம் கண்ணிரண்டு
"கேமரா மொபைல் வாங்கி வா"

பேசப் பேச கேட்டுக்கொண்டும்
செவிடாகத்தான் இருக்கிறேன்.

நான் பேச நினைப்பதல்லாம்
பணம் பேசப் பார்க்கிறேன்.

பணம் பேசும் உலகத்தில்
மனம் மெளனம் காக்கிறது.

ஆம், ரியால் மட்டுமல்ல..
பெற்றிருக்கிறேன் பலவும்..

வெளிச்சம் நோக்கிய பயணம்
விடியல் தான் கொஞ்சம் தூரமாய்த் தெரிகிறது!!

கருத்துகள் இல்லை: