திங்கள், 25 ஆகஸ்ட், 2008

நடிக சூறாவளி ரித்தீஷ் - நாயகன் பட பாடல்

இப்பவாவது எங்க தலைவர் யாருன்னு தெரியுதா???? இன்னாமா ஆடியிருக்கார்...இன்னாமா பாட்டு...

தலைவா..இதுபோன்று இன்னும் பல படங்களைத் தா...தமிழ் சினிமா 75 ஆண்டு இருந்ததே போதும்..

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2008

காதல் - தொடர்கிறது

பேருந்தின் இரைச்சலில்
தனியாய் கேட்டேன்
அவளின் கொலுசொலி.


நீ நனைவாய்
எனத்தான்
வருகிறது மழை

ஜன்னலோர இருக்கையில்
நீ பயணிக்கும் போதெல்லாம்
கூடவே பயணிக்கிறது மனம்

நீ வரும்போது
எதிரே வருகிறேன்
இன்றும் சிரிக்கிறாய்
அர்த்தம் தான்
புரிவதில்லை.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2008

குசேலன் = குப்பை

நண்பன் ஒருவன் படத்திற்கான டிக்கெட் வாங்கிவைத்துக்கொண்டு "வாடா மச்சான்"னான். நானும் நம்பிப்போனேன். அதுக்கப்புறம் தான் அந்த பயங்கர நிகழ்வுகள் கோர்வையாய் வந்தது..

குசேலன் படம் வருவதற்கு முன்னாகவே தலைவர் மன்னிப்பு எல்லாம் கேட்டு சமாதானப்படுத்தி வச்சிருந்தார். அவர் படத்த பாக்குறவங்களுக்கிட்டயும் மன்னிப்பு கேட்டா ரொம்ப நல்லது.
படத்த பத்தி பேசுவோம்..
பேர் போட ஆரம்பிச்சதிலிருந்து, கைதட்டி விசில் பறந்தது. ஷார்ஜால தான் படம் பார்க்கிறோம்னு கொஞ்சம் நம்பிக்கை இல்லாம இருந்தேன். அவ்வளவு விசில்.
அழகான பாடலில் ஆரம்பிக்கும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை, தான் ஒரு பெரிய நபரின் நண்பன் என்று சொன்னதும் எப்படி தலைகீழாகிறது என்பதுதான் படம். ஆனால் நட்பினை தெளிவாக எடுத்துக்காட்டும் எந்த காரணியும் இல்லை.
பசுபதிங்கிற ஒரு நடிகனுக்கு நடிக்க இடம் கொடுக்கவேயில்ல.. மீனா போன்ற பழம்பெரும்:-) நடிகை நடிப்பதற்கான வாய்ப்புகளும் ரொம்ப குறைவு..

ஆனால் பசுபதியின் மூத்த பெண்ணாக வரும் பெண் மட்டும் அழகாக இருக்கிறார். :-)


படத்தின் முக்கியமான வருந்தத்தக்க அம்சம், காமெடி. வடிவேலு என்ற கலைஞன் இறந்துபோய்விடலாம். இந்த மாதிரி இயக்குனரின் படங்களில் நடிப்பதற்கு பதிலாக மதுரையில் லோடுமேன் வேலையே பார்க்கப்போய்விடலாம்.

நயன்தாரா அறைக்குள் புகுந்துவிட்டு வடிவேலு அவரின் அங்க அவயங்களை கண்டுரசிப்பதாகட்டும், அதனால் அவர் மீசை வளர்வதாகட்டும், வடிவேலு கண்கள் பார்க்கும் இடங்களில் செல்லும் கேமிராவாகட்டும்.. எல்லாம் ஒரு கீழ்த்தரமான ரசனையின் வெளிப்பாடே ஆகும்.

லிவிங்க்ஸ்டன் சுழலும் நாற்காலியை பசுபதிக்கு பரிசளிக்க, இது ஏழாவது அதிசயம் என்று ஒருவர் சொல்ல, பாரடா எட்டாவது அதிசயத்தை என லிவிங்ஸ்டன் வேட்டியை தூக்கும் இடமாகட்டும் எல்லாவற்றிலும் ஒரு ஜீரணிக்க முடியாத அதீத அவஸ்தை நம்மை இருக்கையில் புரளச்செய்கிறது.

படத்தின் பெரிய ப்ளஸ். ரஜினி. அவர் மட்டும் இல்லாமல், வேறு யாராவது நடித்திருந்தால் இந்த படத்தை முதல் நாளே குப்பைத்தொட்டியில் எறிந்திருப்பார்கள் தமிழ்ரசிகர்கள்.

P.வாசுவைப்பற்றி தெரிந்திருந்தும், "கதபறயும்போள்" - மலையாளப்படத்தின் தழுவல் இந்தப்படத்தை பார்க்கத்துணிந்த எனக்கு செருப்பால் அடித்தது இயக்குனரின் சாமர்த்தியம். இந்தப்படத்தையும் தன்னால் கெடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.

அத்தனை பாடல்களும் வலிய திணிக்கப்பட்டதாகத்தான் இருக்கிறது. "சினிமா சினிமா" என்ற பாடலின் ஆரம்பத்தில் "75 ஆண்டுகால தமிழ் சினிமாவுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்" என்ற வரிகள் மிகவும் பாதித்தாலும், பாடல் அத்தனை சிறப்பாக இல்லை. ஒரு சினிமா என்ற பெரிய ப்ராஜக்ட் எடுக்க எத்தனை வேர்வை, எத்தனை சிக்கல், எத்தனை கஷ்டம். இதெல்லாவற்றையும் காட்டாமல், சும்மா காச்சுக்கும் பிலிம் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஆனால், சில ப்ளஸ்கள் இல்லாமல் இல்லை.. ஒன்று நயன்தாரா கவர்ச்சி..பில்லாவின் பாதிப்பு இன்னும் அகலவில்லை நயனிடமிருந்து.

இரண்டு பசுபதியின் மூத்தபெண் (அவ்வளவு அழகு..)

மூன்று இயக்குனர் சுந்தர்ராஜன் பாத்திரம். நாம் ரஜினியிடம் என்ன கேட்க நினைக்கிறோமோ அப்படியே கேட்கிறது.

ரஜினி என்ற மனிதனை எல்லோருக்கும் பிடித்திருந்தாலும், ஒரு திரைப்படமாக இதை ஜீரணிக்க முடியவில்லை. அந்த கடைசி 15 நிமிட காட்சி மட்டும் இல்லாவிட்டால், ஒரு திரைப்படம் என்ற கட்டுக்களில் இல்லாமல் போயிருக்கும்.

எது எப்படியோ, லிவிங்க்ஸ்டன் பெயரை சந்தானபாரதி சொல்வதுபோல் குசேலன் ஒரு "குப்பைசாமி"..

அன்புடன்,
சுபைர்

புதன், 23 ஜூலை, 2008

திரை இசைப் பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல்

பாடல் : காதல் வைத்து காதல் வைத்து
படம் : தீபாவளி
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : விஜய் யேசுதாஸ்
வரிகள் : நா.முத்துக்குமார்

*காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்* //

காதல் என்பதை எப்படி வைத்திருக்க இயலும்??? அது பரிமாறப்பட வேண்டும்.. ஆனால் பரிமாறுதல் என்பதும் வாங்குபவர் இருந்தால் தானே சாத்தியம்..அதற்காக காத்திருக்கிறான் காதலன். காற்று, அனைத்து ஒலியையும் கடத்தும் ஊடகம். அதில் அவள் குரல் மட்டும் எப்படிக் கேட்கிறது.. வேறு எந்த சத்தமும் கேட்காமல்//

*சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்*

//காதலி சிரிக்கும் ஓசை காதலனுக்கு இசையை கற்றுக்கொடுக்கிறதோ?? அவள் நடக்கும் பாதை பார்ப்பதே அவனுக்கு திசையாகிறது. பள்ளியில் கிழியக்கூடாத இடத்தில் கிழிந்திருக்கும் டவுசரை ஊக்கு போட்டு மாட்டிவிட்டு, திசை பற்றி கையைக்கட்டிக்கொண்டு படித்த பாடம் மனநிழலில்.
"கதிர் முளைப்பது கிழக்கு
அதன் எதிர் இருப்பது மேற்கு" என்று..

இங்கே திசை காட்டும் காரணி சூரியன்.. அதுபோல் இந்த பாடலில் காதலனுக்கு காதலி...//

*காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்* *( காதல் வைத்து )*

*தேவதை கதை கேட்ட போதெல்லாம்,
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு தான்,
நம்பி விட்டேன் மறுக்கவில்லை* //

இந்த பாடலில் இந்த சந்தம் வரும் போது பாவனாவை அத்தனை அழகாக காட்டுவார்கள். இள மஞ்சள் நிற தாவணியில், தலைசூடிய மல்லிகையில் தேவதைதான்..

** *அதிகாலை விடிவதெல்லாம்
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னைப் பார்த்த கிறக்கத்தில்தான்* *( காதல் வைத்து )*

*உன்னை கண்ட நாள்
ஒளி வட்டம் போல்,
உள்ளுக்குள்ளே சுழலுதடி*
*உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்,
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்* *( காதல் வைத்து )* *

//இந்த பாடலை கேட்கும் பொதெல்லாம் உள்ளுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறப்பதை உணர்கிறேன்.//

கண்ணதாசன் வாரம் (ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை)

சிலருக்கு கண்ணதாசன் என்பவரை கவிஞனாய் பார்க்கும் எண்ணம் இல்லை.

கண்ணதாசன் என்பவரை எனக்கு பிடிக்கும் மூல காரணம், அவரின் சந்தம் தான்.

பிடிக்கும், பிடிக்காது என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடியது. எனக்கு பிடிக்கும் எல்லாமுமே அனைவருக்கும் பிடிக்கும் என அனைவரின் சார்பாக என்னால் சொல்ல இயலாது. கண்ணதாசன் பாடல்களில் பயின்று வரும் சந்தம் மற்றும் மரபு இன்றும் எனக்கு ஆச்சர்யம் தரும் ஒன்று.

எனக்குப் பிடித்த கண்ணதாசனின் பாடல்....

*//ஆறு மனமே ஆறு -
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு... // *

எந்தவொரு மனம் கனத்துப்போகும் கணத்திலும் ஆறுதல் தரும் பாடல்கள் கண்ணதாசனின் பாடல்கள். இங்கே

//ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில்
இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை
அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும் //

சொல்வதை செய்பவர்கள் மட்டுமே அமைதியான மனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் மனம் அமைதியில் திளைக்கும் என்பதெல்லாம் சுத்தமாய் ஏற்றுக்கொள்ள இயலாதது. துன்பம் வரும்போது கலங்கி நிற்காதே, அந்த துன்பத்திலும் இன்பம் இருக்கிறது என்பது தான் இறைவனின் நியதி என்று கண்ணதாசன் எவ்வளவு நயமாய் கூறுகிறார்.

*ஒரு முறை ஒரு பெரும் பணக்காரன் ஒரு முனிவரிடம் வந்து எனக்கு ஏகப்பட்ட பணம் இருக்கிறது. ஆனால் சந்தோசம் என்பது இல்லை என்று சொன்னான். இதை கேட்டுக்கொண்டிருந்த முனிவர், அவனின் கைப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடினார். யாரும் பிடிக்க முடியாத மின்னல் வேகத்தில் அவர் ஓட, பணக்காரனின் மனம் படபடக்கத்துவங்கியது. சும்மாவா பின்ன, உள்ளே 1 லட்ச ரூபாய் பணமல்லவோ இருக்கிறது. போயும் போயும் ஒரு போலிச்சாமியாரிடம் ஏமாந்து போனதாக அந்த பணக்காரன் வருந்தினான். *

*சிறிது நேரத்தில் அந்த சாமியார் திரும்பி வந்து அந்த பணக்காரனிடம் பையை திருப்பிக்கொடுத்தார். வேக வேகமாக பையை பிரித்துப்பார்த்த அந்த பணக்காரன், பணம் முழுவதும் இருப்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியுற்றான்.

அப்போதுதான் அந்த முனிவர் சொன்னார், இதே பை உன்னிடம் முன்னம் இருந்தபோது இல்லாத மகிழ்ச்சி, இப்போது எப்படி வந்தது?? எனவே மகிழ்ச்சி மனதில் தான் இருக்கிறது என்றார். அதையே தான் கண்ணதாசன் மேலே சொல்கிறார்.

ஒவ்வொரு துன்பமும் ஆண்டவன் கொடுக்கும் போது அதைத்தாங்கிக்கொள்ளும் பக்குவமும் ஆண்டவன் நமக்குக்கொடுக்கிறான்.

//உண்மையைச் சொல்லி
நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது
பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் -
பெரும் பணிவு என்பது பண்பாகும் -
இந்த நான்கு கட்டளை
அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும் //

உண்மையை சொல்லவும், நன்மையைச் செய்யவும் வேண்டுமாம். நிலை உயரும்போது யாரிடத்தில் பணிவு இருக்கிறது??.

உண்மை என்பது அன்பு.. என்ன அற்புதமான வார்த்தை. அன்பு என்பதை எப்படி விளக்கலாம்??? நம்மிடம் மற்றவர்கள் எப்படி இருக்கவேண்டுமென நினைக்கிறோமோ அப்படியே நாம் அவர்களிடம் இருக்கவேண்டும். ஆனால் மற்றவர்களிடம் உண்மையாய் இருத்தல் என்பதே அன்பு.. என்ன அழகான ஒரு சித்தாந்தம்..

பணிவு என்பது பண்பு.. வாழ்வியல் அகராதியில் முன்னேற வேண்டும் என்ற உந்துசக்தி உள்ளதால் தான் மனிதன் என்ற சமுதாயம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் முன்னேற்றம் என்பது கிடைக்கும் போது மனிதன் மனிதனாக இருப்பதில்லை. இயற்கையை தன் கையில் எடுத்துக்கொண்டு அதனை அழித்து மிருகமாய் வாழ்கிறான். அந்த இடத்தில்தான் பணிவு என்பது வேண்டியதாய் இருக்கிறது. பணிவு என்பது பண்பு என்று கவிஞர் சொல்வதன் உள்ளர்த்தம் இதுவாக இருக்கலாம். முன்னேறிச்செல்லும்போது பணிவுகொள் மானிடா, அதன்மூலம் தான் பண்பு நிலைத்திருக்கும். உலகம் உன்னைப்போற்றும் என்கிறார்.

* நிலை உயரும் போது
பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும் *

//ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது
கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது
பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை
அறிந்த மனது
ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம்//

ஆசை என்பது இல்லாத மனிதன் இருக்க முடியுமா? எனக்குத்தெரிந்து இல்லை. வயதான பாட்டிக்கு கூட, பேரன் கையால் பால் அருந்தி சாக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது.

கோபம் என்பது கூடாது என்று எத்தனையோ இடத்தில் படித்திருந்தாலும், நாம் கோபப்படத்தான் செய்கிறோம். கோபத்தை நாம் வெளிக்காட்டும் இடம் தான் நம்மை வேறுபடுத்திக்காட்டுகிறது. நாம் நம் கோபத்தை அடக்கவேண்டும்.

களவு என்பது எத்தனை வகை??. மற்றவனிடம் ஒரு பொருள் இருக்கும்போது நமக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. அதை அபகரிக்க மனம் படாதபாடு படுகிறது.
இந்த மூன்றும் இல்லாது இருக்கும் நேரம் என்பது குழந்தை நிலைதான்.

அன்பு என்பதும் கருணை என்பதும் முக்கிய காரணியாக இருக்கிறது இந்த உலகம் நிலை பெறுவதற்கு. எங்கோ ஒரு மூலையில் எம் தமிழன் குண்டடி படும்போது துடிக்கிறோமே, எங்கோ ஒரு மூலையில் சூறாவளியோ, நிலநடுக்கமோ நம்மை துடிக்கச்செய்கிறதே அது தான் அன்பின் வெளிப்பாடு. அவர்களுக்கு ஏதாவது செய்யமுடியுமா என்று நம் இதயம் துடிக்கிறதே அது தான் கருணையின் வெளிப்பாடு. நன்றி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்தியாவசிய தேவையாய் இருக்கிறது. இவை அனைத்தையும் ஒவ்வொரு மனிதனும் நிலைபெற்று செயல்படுத்த வேண்டுமாய் விளம்பும் கவிஞன் கருத்துக்களுக்கு எதிர்கருத்து இருக்கிறதா என்ன???

செவ்வாய், 22 ஜூலை, 2008

பலே பாலாஜி

காத்திருப்புகள் தான் ஒரு மனிதனை ஸ்திரமாக்குகிறது..உறுதியாக்குகிறது.

ஐ.பி.எல் போட்டியை காணும்போது சென்னை அணியினர் தோற்றுப்போய் விடுவோம் என்றே பயந்திருந்தேன். இதே போன்றொதொரு போட்டியில், ஷேன் வார்னின் அற்புதமான பேட்டிங் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தது நினனவிருக்கலாம். அதே போன்ற நிலை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினேன்.

வந்தார் பாலாஜி.. அழகான விவேகமான பந்துவீச்சில் எதிரணியை மிரட்டினாலும், ஆட்டத்தின் முக்கியமான கடைசி ஓவரில் முதல் பந்திலேயே சிக்சர் கொடுத்ததும் இதயத்துடிப்புகள் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் வேகத்தில் தடதடக்க ஆரம்பித்தது.

பாகிஸ்தான் அணிக்கெதிராக பேட்டிங் பிடித்து, சோய்ப் அக்தர் பந்தில் சிக்ஸர் அடித்ததும் தெறித்த பாலாஜியின் மின்னல் சிரிப்பு இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை.

அவர் குறிப்பிட்ட இடத்தை தக்கவைக்க நெஹ்ரா, பதான், முனாஃப், R P சிங், போன்றோருடன் போராட வேண்டியிருந்தது.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். பாலாஜி விஷயத்திலும் அது நடந்தது. அவரின் முதுகுப்பகுதியின் பாதிப்பு காரணமாக அவர் கட்டாய ஓய்வெடுக்க பணிக்கப்பட்டார்.

2 ஆண்டுகள் ஓய்வுக்குப்பிறகு, மீண்டும் வந்தார்..மீண்டு வந்தார்.

சீயான் விக்ரம், சவ்ரவ் கங்குலி, பதான், சேவக் போன்றோர்கள் வரிசையில் பாலாஜியும் சேர்ந்திருக்கிறார். ஆம், காத்திருப்புகள் தான் ஒரு மனிதனை ஸ்திரமாக்குகிறது..உறுதியாக்குகிறது.

வெல்கம் பாலாஜி...

சுட்டிக் குழந்தை

மத்த குழந்தைங்களோட ஒப்பிடும்போது, பெண் குழந்தைகள் கொஞ்சம் சுட்டியாகவும், படு புத்திசாலியாகசவும் இருக்கும்.

எங்கள் வீட்டில் நகராட்சி தண்ணீர் குழாயில் தண்ணீருக்கு பதில் காற்று தான் வரும். அதனால் ஒரு பெரிய தொட்டி (4 அடி ஆழத்தில்) கட்டி, நகராட்சி குழாயை அடியில் பதித்து விட்டோம். எப்போதும் குழாய் திறந்தே இருக்கும். தொட்டி நிறைய தண்ணீர் இருக்கும்.

ஒரு நாள் என் த‌ம்பி (8 வயது) முடி வெட்டி விட்டு குளிக்க வந்திருக்கிறான். அந்த இடத்திற்கு அருகில் என் அம்மா துணி துவைத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

என் தம்பி குளிக்கும் போது தொட்டிக்கு பக்கத்தில் இருந்த வாளியை தண்ணீருக்குள் தள்ளிவிட்டுவிட்டான். த‌ண்ணீர் முழுக்க‌ அம்மா மீது தெறித்து அம்மா தெப்பலாக‌ ந‌னைந்து விட்டார்க‌ள்.

அம்மா அவனை திட்டும் நோக்கில், "ஏண்டா, உனக்கு மூளை இருக்கா??" என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு என் தங்கை (4 வயது), "அம்மா, அவனுக்கு முடிய வெட்டும்போது மூளையும் வெட்டி விட்டார்கள்" ‍என்றிருக்கிறார். அந்த‌ டைமிங் தான் இங்கு முக்கிய‌ம்.

வீடு - சில சிதறல் எண்ணங்கள்

வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணம் பண்ணிப் பார் என்றொரு பழமொழி புழக்கத்தில் இருக்கிறது. ஆம்..இந்த இரண்டும் நினைத்த மாத்திரத்தில் நடக்ககூடிய காரியமல்ல. எனக்கு இரண்டும் நடக்கவில்லை.

வீடு என்ற ஒன்று தேவைப்படுவதால் தான், நாம் இன்றும் சமுதாயத்தில் அங்கமாக கவனிக்கப்படுகிறோம். வீடு என்பது நம் அனைவருக்கும் அடையாளமாக மாறி நீண்ட காலம் ஆகிவிட்டது.

"காரை வீட்டுக்காரர்" என்று அழைக்கப்படும் ஒரு முதியவர் எனக்குப் பழக்கம். அவரின் காலத்தில் அவர் பெரும் பாடுபட்டு "காரை வீடு" கட்டியதாக என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்.

வீடு என்பது செங்கலும் சிமிண்ட்டும் கலந்தததல்ல. அது ரத்தமும் சதையும் கலந்ததது.

முதலில் அடித்தளம்(Basement) இட வேண்டும். அதற்காக குழிபறிக்கும் போது சிலருக்கு புதையலும் சிலருக்கு மண்டையோடும் கிடைக்கலாம். :‍-)

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை -‍ என்ற திருக்குறள் இங்கே குறிக்கப்பட வேண்டியது. இகழ்வாரை பொறுத்தல் என்பதெல்லாம் கனவிலும் நம்மால் முடியுமா?? என்னால் முடியாது மனதளவிலும்..

ஒவ்வொரு செங்கல்லையும் அடுக்கும்போது அங்கே சாந்தை* குழைத்து அடுக்குவார்கள். அதுதான் குடும்பத்தின் சிரிப்பு என்பது. ஒவ்வொரு சிரிப்பும் நமது குடும்பத்தினை இணைக்கும். செங்கற்களை இணைப்பதற்குக் கூட சில வரைமுறைகள் இருக்கின்றன. அதுப்போலத்தான் சிரிப்பும். சிரிப்பினை உருவாக்குவதற்கும் சில வரைமுறைகள் இருக்கின்றன. இது தெரியாத‌ போதுதான் "சுபைர்" போன்ற‌ இள‌சுக‌ள் அவைய‌ட‌க்க‌ம் இல்லாம‌ல் பேசுவ‌‌தை நிறுத்திக்கொள்வ‌த‌ற்காக பெரிய‌வ‌ர்க‌ள் ஆணையிட‌ வேண்டியிருக்கும்.

செங்கற்களை அடுக்கும்போது கவனித்திருக்கிறீர்களா?? ஒன்று மாற்றி மற்றொன்று அடுக்க வேண்டும். ஏனென்றால், அப்போது தான் பிடிமானம் நன்றாக இருக்கும். அதுபோலத்தான் குடும்பமும். கணவன் மனைவி இருவரும் ஒரே போன்று இருந்தால் வாழ்க்கை போரடித்துவிடும். எடக்கு மடக்கான கேள்விகள் தான் சுவாரஸ்யம் தருகிறது வாழ்விலும், அலுவலிலும்.
ஒவ்வொரு கற்களாக நமது வீட்டிற்கு எடுத்துக்கொடுத்து, நெற்றிப்பொட்டில் வழியும் வியர்வைத்துளிகளை துடைத்தெறிந்துவிட்டு, கட்டாந்தரையில் "உருமாடு"ஐ விரித்து, பழையசாதத்துடன் ‍சின்ன வெங்காயம் சாப்பிடும் பாக்கியம் கிடைத்திருக்கிறதா??

கடையில் பொருட்கள் வாங்குவது போல் போய், "ஒரு வீட்டிற்கு 14 லட்சமா, கொஞ்சம் குறைத்து போடப்படாதா??" என்று பேரம் பேசி வாங்கி குடியமரும், வாழ்க்கையை வாழத்தெரியாத வக்கற்றவர்களாக ஆக்கிவைத்திருக்கிறது இன்றைய வாழ்க்கை சூழ‌ல்.

க‌டைக்குப்போய், த‌ள‌வாட‌ சாமான்க‌ள் முத‌ல் த‌ட்டுமுட்டு சாமான்க‌ள் வ‌ரை பார்த்துப்பார்த்து வாங்கி வ‌ந்து, ஒவ்வொன்றாய் அடுக்கி அழ‌கு பார்த்து, விரும்பிய‌ வ‌கையில் அத‌னை உபயோக‌ப்ப‌டுத்தும் வாய்ப்பு கிடைக்க‌ப்பெற்றிருக்கிறீர்க‌ளா??

சில‌ வ‌கைக‌ளில் ந‌ம‌க்கு பேராசை ம‌ட்டுமே எஞ்சி நிற்கிற‌து.

விளையாட்டாக சொல்வார்கள், வாழ்க்கைத்துணையும் செல்லிடைபேசியும் ஒன்று என்று.. கொஞ்சம் காத்திருந்தால் புதுவகை கிடைக்கும். அந்த வகையில் வீட்டினையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது வீடு கட்ட பணம் ஏற்பாடு செய்வது. 24 வயதில் சொந்த வீடு வாங்கி அப்பா அம்மாவை சந்தோசமாக வைக்கும் ஆற்றல் கிடைத்திருக்கிறதோ இல்லையோ..ஆனால் அதைப்பற்றி யோசிக்கவாவது ஆற்றல் கொடுத்திருப்பதற்காக இறைவனிடம் நன்றி கூறிக்கொள்கிறேன். பல இடங்களில் முயற்சித்தும் பணம் கிடைக்கும் வழிமுறைகள் ஒவ்வொரு எல்லையிலும் இறுதிவரை சென்று முட்டிக்கொண்டு நிற்கிறது. என்னால் முடியும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. நம்பிக்கை தானுங்க வாழ்க்கை.

என‌க்காக‌ மட்டுமே வீடு க‌ட்ட‌வேண்டிய‌ ஆசையுமில்லை. ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ச‌ந்தோஷ‌ப்ப‌டுத்தி பார்ப்ப‌து தான் ந‌ம‌க்கும் ச‌ந்தோசம், இல்லையா??

---------------------------------------------

சாந்து -‍ சிமிண்ட்டும் மண்ணும் 1க்கு 4 அல்லது 1க்கு 6 என்ற விகிதத்தில் கலந்து தண்ணீர் விட்டு கலக்கப்படும் கலவை. (Bonding Agent)

உருமாடு - தலையில் வைத்திருக்கும் துணிச்சுற்று. பாரம் தலையில் ஏற்றப்படும் போது அழுத்தாமல் இருக்க துணியை சுற்றி வைப்பார்கள்.

திங்கள், 14 ஏப்ரல், 2008

ஆணிவேர் என்றொரு திரைப்படம்...

நேரம் போகாது ஒவ்வொரு வலைமனையையும் தேடிக்கொண்டிருந்தேன். கண்ணில் எதேச்சையாய் பட்டது இந்த திரைப்படத்தின் பெயர். என்ன தான் இருக்கிறது பார்ப்போமே என்ற எதிர்பார்ப்புடன், ஒரு ஐந்து நிமிடம் பார்க்கத்துவங்கியதுடன், படம் முடியும் வரை என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. அப்படி கட்டிப்போட்டது இந்த படம்.

சலனப்படம் என்ற கூற்றை திரைப்படத்திற்கு நாம் உபயோகப்படுத்தினாலும், அது இந்த படத்திற்கு தான் மிகவும் பொருந்தும்.

நாயகியாய் மதுமிதா, கதையின் நாயகனாய் நந்தா (புன்னகைப்பூவே திரைப்பட நாயகன்) மற்றும் தமிழ் மக்களின் வாழ்க்கை.

இவை மட்டும் தான் படத்தின் ஓட்டத்திற்கு காரணம்.

நாயகி இந்தியாவிலிருந்து இலங்கை சென்று செய்தி சேகரிக்கிறார். அவர் இலங்கை வீதிகளில் வாகனத்தில் செல்லும்போது காட்டப்படும் சிதிலமடைந்த வீடுகளும், சாலைகளும் சொல்லக்கூடும் ஆயிரம் கதைகளை. அங்கே மருத்துவத்தொழில் புரியும் நாயகனிடம் போய், ஒரு நல்ல புகைப்படம் வேண்டும், முன் அட்டையில் போடுவதற்கு என்று நாயகி சொல்லும் வேளையில் அவளை அப்படியே கொன்று விடலாமா என்று தோன்றுகிறது. எல்லாமே வியாபாரமாய்ப்போன நாட்டில் யாரிடம் போய் கோபித்துக்கொள்வது..

நாயகன் பேசும்போது சொல்லும் வசனம் ஒன்று "அன்னையிடம் பால்குடித்துக்கொண்டிருக்கும் போது அன்னை இறந்தது கூட தெரியாத குழந்தையை இந்த கைகளால் தான் பிரித்தேன்" என்று சொல்லுவார். மனதின் ரணங்களை ஆற்ற காலம் தான் மருந்திட வேண்டும்.

அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, பக்கத்தில் குண்டு வெடிக்கும்போது மனம் ஒரு நிமிடம் விட்டுத்துடிக்கிறது. ஊர் மொத்தமாக மற்றொரு இடத்திற்கு குடிபெயர்வதற்கு அறிவுறுத்தப்படும்போது, "என்னுடன் வந்துவிடு என்று என் பாட்டியை நான் அழைக்க, வாழ்ந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்றபோது பாட்டியின் கண்ணில் வழிந்த கண்ணீர் சொன்ன பதில் ஏனோ என் எண்ண நிழலாடலில்..". வாழ்ந்த இடத்தை விட்டுபோன பிறகு மீண்டும் வருவோமோ மாட்டோமோ எனும்போது மனம் வலிக்கும் வலி அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்.

பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தை கற்பழித்து கொல்லப்படுவதிலாகட்டும், டாங்கிகள் மேலேற்றி மக்கள் நசுக்கப்படுவதிலாகட்டும், அத்தனையிலும் ஊறித்திளைக்கிறது மற்றைய மொழியினரின் வெறிச்செயல்.

நண்பர் ரிஷான் எழுதிய கவிதை வரி தான் ஞாபகத்துக்கு வந்தது..

//எங்களது உயிர்கள் எடுக்கப்படும் கணப்பொழுதுகளில் என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..? ஓர் அழகிய பாடலின் ஆரம்ப வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ...? //

அப்படித்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்???

ஞாயிறு, 30 மார்ச், 2008

மற்றுமொரு பாவனா பதிவு






திங்கள், 10 மார்ச், 2008

ஜல்லியடித்தல் - பாவனா புராணம்


தெ.தே.மு.க.( தெற்றுப்பல் தேவதை முன்னேற்ற கழகம்)

நம்ம நண்பர்களுக்கு ரொம்பத்தான் குசும்பு.. பாவனா படம் வந்தா உடனே டீடெயிலா மெயில் போட்டுடுவானுக..எனக்கு :-))


படம் மற்றும் அதற்கான குறள் வெண்பாக்கள்..


கல்லூரி செல்லும் சிவப்புச் சுடிதார்நின்
கைதவழும் பந்தாக நான்.



மிளகாய் உரைக்குமாம் காருதல் இல்லையா
பெண்ணிவள் கண்நோக்கி காண்.


கத்தியா நின்கையில் விட்டெறி - போதுமே
சத்தமின்றி கொன்றிட "பார்".



ஊஞ்சல் விளையாடும் உன்அழகைக் காணவே
ஆலம் கிடக்கும் தவம்



நீஅமரும் காரணமே ஊஞ்சலும் உன்னதம்
அஃதன்றோ நீவாழும் நெஞ்சு.



கோபமும் பெண்டிர் அணிகலனாம் - ஆமாம்
அவையுனக்கு உண்மையிலே சரி.


பார்வையால் பேசினால் போதுமா - ஆகாது
கோர்வையாய் கொஞ்சமே பேசு.



காதலால் காண்பது அழகன்றோ ஆதலால்
என்னையுமே காதலினி றுத்து.