வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணம் பண்ணிப் பார் என்றொரு பழமொழி புழக்கத்தில் இருக்கிறது. ஆம்..இந்த இரண்டும் நினைத்த மாத்திரத்தில் நடக்ககூடிய காரியமல்ல. எனக்கு இரண்டும் நடக்கவில்லை.
வீடு என்ற ஒன்று தேவைப்படுவதால் தான், நாம் இன்றும் சமுதாயத்தில் அங்கமாக கவனிக்கப்படுகிறோம். வீடு என்பது நம் அனைவருக்கும் அடையாளமாக மாறி நீண்ட காலம் ஆகிவிட்டது.
"காரை வீட்டுக்காரர்" என்று அழைக்கப்படும் ஒரு முதியவர் எனக்குப் பழக்கம். அவரின் காலத்தில் அவர் பெரும் பாடுபட்டு "காரை வீடு" கட்டியதாக என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்.
வீடு என்பது செங்கலும் சிமிண்ட்டும் கலந்தததல்ல. அது ரத்தமும் சதையும் கலந்ததது.
முதலில் அடித்தளம்(Basement) இட வேண்டும். அதற்காக குழிபறிக்கும் போது சிலருக்கு புதையலும் சிலருக்கு மண்டையோடும் கிடைக்கலாம். :-)
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை - என்ற திருக்குறள் இங்கே குறிக்கப்பட வேண்டியது. இகழ்வாரை பொறுத்தல் என்பதெல்லாம் கனவிலும் நம்மால் முடியுமா?? என்னால் முடியாது மனதளவிலும்..
ஒவ்வொரு செங்கல்லையும் அடுக்கும்போது அங்கே சாந்தை* குழைத்து அடுக்குவார்கள். அதுதான் குடும்பத்தின் சிரிப்பு என்பது. ஒவ்வொரு சிரிப்பும் நமது குடும்பத்தினை இணைக்கும். செங்கற்களை இணைப்பதற்குக் கூட சில வரைமுறைகள் இருக்கின்றன. அதுப்போலத்தான் சிரிப்பும். சிரிப்பினை உருவாக்குவதற்கும் சில வரைமுறைகள் இருக்கின்றன. இது தெரியாத போதுதான் "சுபைர்" போன்ற இளசுகள் அவையடக்கம் இல்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்வதற்காக பெரியவர்கள் ஆணையிட வேண்டியிருக்கும்.
செங்கற்களை அடுக்கும்போது கவனித்திருக்கிறீர்களா?? ஒன்று மாற்றி மற்றொன்று அடுக்க வேண்டும். ஏனென்றால், அப்போது தான் பிடிமானம் நன்றாக இருக்கும். அதுபோலத்தான் குடும்பமும். கணவன் மனைவி இருவரும் ஒரே போன்று இருந்தால் வாழ்க்கை போரடித்துவிடும். எடக்கு மடக்கான கேள்விகள் தான் சுவாரஸ்யம் தருகிறது வாழ்விலும், அலுவலிலும்.
ஒவ்வொரு கற்களாக நமது வீட்டிற்கு எடுத்துக்கொடுத்து, நெற்றிப்பொட்டில் வழியும் வியர்வைத்துளிகளை துடைத்தெறிந்துவிட்டு, கட்டாந்தரையில் "உருமாடு"ஐ விரித்து, பழையசாதத்துடன் சின்ன வெங்காயம் சாப்பிடும் பாக்கியம் கிடைத்திருக்கிறதா??
கடையில் பொருட்கள் வாங்குவது போல் போய், "ஒரு வீட்டிற்கு 14 லட்சமா, கொஞ்சம் குறைத்து போடப்படாதா??" என்று பேரம் பேசி வாங்கி குடியமரும், வாழ்க்கையை வாழத்தெரியாத வக்கற்றவர்களாக ஆக்கிவைத்திருக்கிறது இன்றைய வாழ்க்கை சூழல்.
கடைக்குப்போய், தளவாட சாமான்கள் முதல் தட்டுமுட்டு சாமான்கள் வரை பார்த்துப்பார்த்து வாங்கி வந்து, ஒவ்வொன்றாய் அடுக்கி அழகு பார்த்து, விரும்பிய வகையில் அதனை உபயோகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றிருக்கிறீர்களா??
சில வகைகளில் நமக்கு பேராசை மட்டுமே எஞ்சி நிற்கிறது.
விளையாட்டாக சொல்வார்கள், வாழ்க்கைத்துணையும் செல்லிடைபேசியும் ஒன்று என்று.. கொஞ்சம் காத்திருந்தால் புதுவகை கிடைக்கும். அந்த வகையில் வீட்டினையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது வீடு கட்ட பணம் ஏற்பாடு செய்வது. 24 வயதில் சொந்த வீடு வாங்கி அப்பா அம்மாவை சந்தோசமாக வைக்கும் ஆற்றல் கிடைத்திருக்கிறதோ இல்லையோ..ஆனால் அதைப்பற்றி யோசிக்கவாவது ஆற்றல் கொடுத்திருப்பதற்காக இறைவனிடம் நன்றி கூறிக்கொள்கிறேன். பல இடங்களில் முயற்சித்தும் பணம் கிடைக்கும் வழிமுறைகள் ஒவ்வொரு எல்லையிலும் இறுதிவரை சென்று முட்டிக்கொண்டு நிற்கிறது. என்னால் முடியும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. நம்பிக்கை தானுங்க வாழ்க்கை.
எனக்காக மட்டுமே வீடு கட்டவேண்டிய ஆசையுமில்லை. மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான் நமக்கும் சந்தோசம், இல்லையா??
---------------------------------------------
சாந்து - சிமிண்ட்டும் மண்ணும் 1க்கு 4 அல்லது 1க்கு 6 என்ற விகிதத்தில் கலந்து தண்ணீர் விட்டு கலக்கப்படும் கலவை. (Bonding Agent)
உருமாடு - தலையில் வைத்திருக்கும் துணிச்சுற்று. பாரம் தலையில் ஏற்றப்படும் போது அழுத்தாமல் இருக்க துணியை சுற்றி வைப்பார்கள்.
செவ்வாய், 22 ஜூலை, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக