செவ்வாய், 20 மார்ச், 2007

பாப் உல்மர் மரணம் - கொலையா?

சில நேரங்களில் தோல்விகள் மனதை துவளச் செய்துவிடும். சில நேரங்களில், தோல்விகள் மறந்து போனாலும் அதன் ரணங்கள் மாறாதிருக்கும்.

எனினும் இந்தியா வங்காளதேசத்திடம் தோற்றது சாதாரணமான செய்தி. (நாம தான் ஏற்கனவே அவிங்க கிட்ட தோத்துப்போயிருக்கோம்ல..)

ஆனால், பாகிஸ்தான் அயர்லாந்திடம் தோற்றது மறக்கக்கூடியது அல்ல.

கத்துக்குட்டிகள் சில நேரங்களில் மாயாஜாலங்களை நிகழ்த்தும்போது நாம் கைதட்டி வரவேற்பது தான் நியாயம்.

நேற்று NDTV-ல் பேசும் ஒரு பாகிஸ்தானி - "பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மண்ணில் மிதிக்க விட மாட்டோம்" என்று கூறுகிறார்.

விளையாட்டு தானே! வெற்றி தோல்வியெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வாய்த்திருக்க வேண்டும்.

பாப் உல்மரின் மரணம் சில சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.

"இந்த நாள் என் பயிற்சியாளர் வாழ்வில் மிக மோசமான நாள்" - என்று வங்காளதேசத்திடம் பாகிஸ்தான் தோற்றபோது உல்மர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒரு விளையாட்டு வீரராக, வார்க்விக் ஷையர் அணியின் பயிற்சியாளராக, 1999ம் ஆண்டு அரை இறுதி வரை சென்ற தென்னாப்ரிக்க அணியின் பயிற்சியாளராக, ஐ.சி.சி. செயல்பாட்டு துறையின் மேலாளராக, பிறகு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக என பல பொறுப்புகளை சுமந்தவருக்கு தோல்வி புதிதா என்ன?

அவரின் மரணம் இப்போது என்னுள் எழுப்பியுள்ள கேள்வியெல்லாம்

1. பாகிஸ்தான் அயர்லாந்திடம் ஏன் தோற்றது?

2. பாப் உல்மர் போன்ற விளையாட்டுடனே வாழ்க்கையை வாழப் பழகியவர்கள், மன அழுத்தத்திற்கு (Mental Stress) ஆளாக முடியுமா?

3. அவர் அதிகமான மருந்தினால் (மதுவும் தான்) மரணம் அடைந்திருக்கக் கூடும் எனில் விளையாட்டினை விளையாட்டாக எடுக்கவில்லையோ?

4. அனைத்தையும் தாண்டி அயர்லாந்திடம் தோற்றது மட்டும் தான் காரணம் என்றால், இவரே தென்னாப்ரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த போது (1996 ம் ஆண்டு) அந்த அணி இரண்டாம் சுற்று போகவில்லையே! இதே நிலை தானே? அப்போது என்ன நினைத்திருப்பார்?

5. அவர் இறந்த உடனே ஓய்வை இன்ஜமாம் அறிவிக்க காரணம் என்னவாக இருக்கும்?

இவையெல்லாம் ஒரு சாதாரண மனிதனின் எண்ணங்கள்.
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

http://news.bbc.co.uk/sport2/hi/cricket/6464983.stm

http://news.bbc.co.uk/sport2/hi/cricket/other_international/pakistan/6465063.stm

http://news.bbc.co.uk/sport2/hi/cricket/other_international/pakistan/6464831.stm

http://www.dailyindia.com/show/126649.php/Did-Woolmer-die-of-drugs-and-booze-overdose

செவ்வாய், 6 மார்ச், 2007

பருத்திவீரன் - திரைப்பார்வை

ஆரோக்கியமான வளர்ச்சி தமிழ்த் திரைத்துறையில்..
இளைய இயக்குனர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, கருவேலங்காடுகளுடன் உழலும் எம் மக்களின் வாழ்க்கையை அருகிருந்து படம் பிடிக்கின்றனர்.
சில நேரங்களில் பொருளாதார ரீதியாக வெற்றியும் பெற்றுவிடுகின்றனர்.

அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருள் புதிதாக இடம் பிடிக்கிறார் அமீர்.

சண்டித்தனம் பண்ணுகிற காளை "கார்த்தி" பருத்திவீரனாக.
அம்மா கழுத்திலேயே அரிவாள் வைக்கும் மறத்தமிழச்சியாக (அடிக்க வராதீங்க...) "ப்ரியாமணி"
சித்தப்புவாக "பொண்டாட்டி ராஜ்யம்" புகழ் "சரவணன்" (அதாம்பு..விஜயகாந்த் மாதிரி ஆக்ட் விட்டுக்கிணு சுத்தினாருல்ல..அவுர் தான்.)
பொண்ணுக்கு அப்பனாக, "பொன்வண்ணன்"
மற்றும் சில கதைக்கான பாத்திரங்கள்.

கதை ரொம்ப சின்னது.. சண்டியர் காதலிக்கப் படுகிறார். காதலில் விழுகிறார். இருவரும் ஒன்று சேருகிறார்களா? இல்லையா?

சில பேர் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் வழி ரொம்பவும் வித்தியாசமானது. நல்லா படிச்சு டாக்டராகணும், இன்ஜினியர் ஆகணும் என்று சிலரும், "ஏலே! லாலுஜி கூட பால் வித்தவர் தாம்ல..நானும் மாடு மேய்க்கப் போறேன்ல" என்று சிலரும் வித விதமான வழியை தேர்ந்தெடுக்கின்றனர்.

இக்கதையின் நாயகன் தேர்ந்தெடுக்கும் வழி "அடிதடி".

சில நேரங்களில், சில நினைவுகள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச்செல்லும். அப்படி சில நினைவுகள் கலந்து கட்டி அடிக்கும் போது கண்ணில் நீர்த்துளி வரலாம். வயிறு குலுங்க சிரிக்கலாம்..

இந்த திரைப்படத்தினை பார்க்கும்போது "ஏம்பல்" என்ற சிறு கிராமத்திலே என் பள்ளிப்பருவத்திலே நான் வளர்ந்த காலத்தின் நினைவு வந்தது.

மஞ்சள் வெயில் தெறிக்கும் பூமியை அப்படியே அள்ளி வந்திருக்கிறது ராம்ஜியின் ஒளிப்பதிவு. கானல் நீர் ஓடும் காட்சிகளும், வெக்கை பரவும் நேரங்களும் ஏ.சி. அறையின் குளுமையைக் காட்டிலும் உள்ளுக்குள் பரவுகிறது.

இசை யுவன் சங்கர் ராஜா. சில படைப்பாளிகள் தங்களுக்குள் இருக்கும் திறமையை வார்த்தெடுக்கும் வல்லுனர்கள் இல்லாததால் திறமையை விட சற்றே குறைவான பெயரையும் புகழையும் பெறுகின்றனர். இங்கே தனித்தன்மையுடன் செயல்படும் பலருக்கு உரிய மரியாதை கிடைக்கப் பெறுவதில்லை.

யுவனின் பாடல்களை விட பின்னணி இசை பிரமாதம். மௌனம் காக்கிறது சில இடங்களில். பிரவாகமெடுக்கிறது பல சமயங்களில்.

"அறியாத வயசு" பாடலில் இளையராஜாவின் குரல் நம்மை கட்டிவிடுகிறது என்பது உண்மை.

இயக்குனர் அமீர், முந்தைய படங்களில் தமிழ் திரைத்துறையில் இருக்கை பிடித்திருந்தார். இப்போது பெர்த் சீட்டே கிடைத்திருக்கிறது.

"சென்னை மத்திய சிறையை பார்த்துவிட வேண்டும்" என்ற குறிக்கோளுடைய கதாநாயகன், அவன் செய்யும் அத்தனை தவறுகளும் அறிந்திருந்தும் அவனுக்காக உயிர் வாழும் நாயகி.

படம் ஆரம்பித்து 2 மணிநேரம் வரை கிராமிய மணம் கமழும் ஒரு வாழ்க்கையின் திரைச்சான்று என்று நினைத்திருந்தேன்.

கடைசி அரைமணி நேரம் எதுவும் பேசாது, அழுது கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன்.

வசனங்களில் அரிவாளின் வீச்சு.. இறுதி நேரத்தில் கதாநாயகி கதறும் காட்சிகளில் நெஞ்சு விம்மித்துடித்தது. அந்த காட்சிகளில் வரும் வசனம் அத்தனையும் மறக்க முடியாதவை.

நாம செய்யுற பாவத்துக்கு தண்டனை எப்படி கிடைக்குமோன்னு நினைச்சு ராத்திரி முழுக்க தூங்க முடியலயா...!