வியாழன், 25 நவம்பர், 2010

மாமன் தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
தென்னகத்து தேவதையே
தெள்ளமுது புன்னகையே
மண்ணகத்தில் வந்துதித்த
பெண்ணழகே கண்ணுறங்கு..

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
சின்னஞ்சிறு பூவெனவே
செல்லம்நீ வந்தனையோ
கன்னத்தி லெப்பவுமே
கண்ணீரும் வேண்டாமே..

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
அப்பா ரடிச்சாலும்
அம்மாவேதும் சொன்னாலும்
மாமந்தான் நானிருக்கேன்
மருமகளே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
வெற்றிகள் எல்லாமே
வெள்ளமாய் வந்திடுமே
சுத்துப்பட்டு எல்லாமே

சத்தமாய் போற்றிடுமே

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
கட்டளைநீ கொடுத்தால்
காற்றுமுந்தன் காலடியில்
தலைமகளே கண்ணுறங்கு
தங்கமேநீ கண்ணுறங்கு...

ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ


(தென்றல் குழுமத்தின் நண்பர் கந்தசாமி நாகராஜனின் மகளுக்கு நான் எழுதிய மாமனின் தாலாட்டு...)

செவ்வாய், 23 நவம்பர், 2010

இலக்கியவியாதி (அ) மொக்கை இலக்கியம்

ஏதாவது எழுதியாக வேண்டுமென்ற உத்வேகத்தில் அமரும்போது இரவு 11 மணி. நள்ளிரவு தான் பெரிய பெரிய வெற்றியாளர்கள் பணி செய்ய சிறந்ததாம். ஏ.ஆர்.ரஹ்மான் முதல் பெரிய அளவில் பெயர் பெற்றவர்கள் இரவில் தான் தமது பணியை செவ்வனே செய்யமுடியும் என்ற கருத்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இப்போது படித்துக்கொண்டிருக்கும் வருங்கால சாகித்ய அகாதெமி எழுத்தாளனும்..மரியாதை... மரியாதை.. எழுத்தாளரும் அதே எண்ணம் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை.

என்ன எழுத வேண்டும் என்ற எண்ணம் இல்லாத போதும் ஏதாவது எழுத வேண்டும் என்ற உத்வேகம் இருக்கிறது. எழுத்து என்பது பிரசவம் போன்றதாம். எங்கேயோ படித்திருக்கிறேன். எழுத ஆரம்பிக்கும் போது அடிவயிற்றில் ஒரு இறுக்கம் உருவாகி ஓய்வு அறை (பாத்ரூம்னு சொல்லலாம் தான்.. ஆனால் சாகித்ய அகாதமி அளவுக்கு நீங்கள் இன்னும் பழகவில்லை என நினைக்கிறேன்) செல்ல எண்ணம் உருவாகும். ஒரு பதிவு எழுதும் முன் ஓய்வு அறை போய் வந்தாலும் இப்போதெல்லாம் அடிக்கடி இந்த வயிறு இறுக்கம் தீர்ந்து போவதில்லை. கலைத்தாகம் இருப்பதால் மலச்சிக்கல் போல் எழுத்துச்சிக்கல் உருவாகி இருக்கலாம் என்ற எண்ணம்.

என்ன எழுத ஆரம்பித்தேன் என்றே மறந்துவிட்டேன். உங்களிடம் பேசிக்கொண்டிருத்தலில் இருத்தலின் இல்லாமை காலவெளியின் நீட்சியாக போய்க்கொண்டே இருக்கிறது. உலகமும் ஒரு நாள் அழியுமாமே?? காலம் என்பதே காலை, மாலை என சூரியனைக்கொண்டு கணக்கிடப்படுவதால் இன்னும் சுமார் 10000 ஆண்டுகளில் சூரியன் இல்லாது போகும் நாட்களில் காலமும் இல்லாது போகுமல்லவா?? இந்த சிந்தனையை காபிரைட் வாங்கி வைக்க வேண்டும். யார் யாரோ கதைகளை சுட்டு படம் எடுக்கிறார்களாம். எனக்கு இந்த திரைப்படங்கள் என்றாலே ஒவ்வாமை இருக்கிறது. அறுபது வயது ஆண் இருபது வயது பெண்ணுடன் கொஞ்சிக் குலவுகிறார். ஏன் இருபது வயதில் ஆண்களே இல்லையா?? அல்லது இருபது வயது பெண்களுக்கு இருபது வயது ஆண்களைப் பிடிப்பதில்லையா? உளவியல் ரீதியாக தன்னை விட வயது அதிகமானவர்கள் மீதே ஈர்ப்பு இருக்கும் என்று ஏதோ ஒரு கட்டுரையில் படித்தேன். அது ஆங்கிலத்தில் இருந்ததால் நான் தவறாகக் கூட புரிந்திருக்கலாம். நமது இலக்கு சாகித்ய அகாதமி. ஆங்கிலம் அல்ல.

என்ன எழுத வருகிறேன் என்றே தெரியவில்லை. நேற்று அம்மா என்னை கருப்பசாமி கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். அந்த பூசாரி கடந்தகால எச்சங்களின் மிச்சங்களாக கடாமீசை வைத்திருந்தார். தற்போதைய பரிணாம வளர்ச்சியினால் இனி வரும் தலைமுறைக்கு தேவையில்லா இடங்களில் மயிர் முளைக்கப் போவதில்லை. ஆனால் நான் ஏதும் சொன்னால் அவர் ஏதாவது சொல்வார். ஆனால் அந்த மீசை அழகு. அவர் ஏதோ ஜெபித்த படி..ஜெபித்த என்றால் கிறிஸ்துவ பிரார்த்தனையோ? இதையும் ஆராய்ந்து எழுத வேண்டும்.. நமக்கெதுக்கு வம்பு..சபித்த படி வேப்பிலையால் என்னை அடித்தார். அம்மா என்னவோ சொன்னார்... கவிதை எழுதியே செத்துப்போன கவிஞன் ஒருவனின் ஆவி பிடித்திருப்பதாக. கவிதை எழுதுகிறேன் என்பவனை எல்லாம் சாருவிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். அட்லீஸ்ட் ஆசிப் மீரானிடமாவது.

என்ன பேசிக் கொண்டிருந்தோம்? ஆ... ம்ம்ம்.. என்னை பூசாரி நாலு சாத்தி சாத்தி திருநீறு இட்டார். அம்மா அவருக்கு நூறு ரூபாய் கொடுத்தார். உண்மையில் பணம் தான் பேயாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரையும் எப்படி மாற்றிவிடுகிறது?. மூன்றாம் தெரு மல்லிகா இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து வரும்போது தான் வீட்டை விட்டு வெளியே வருகிறாள். எதற்கு என்று எனக்கென்ன தெரியும்?? நான் பேசிக்கொண்டிருந்தது பணம் பற்றி. அனேகமாக அந்தப் பணம் தான் எனக்கு பேய் என்று இந்த பூசாரியை சொல்ல வைத்திருக்கிறது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. குவாட்டரும், தண்ணி பாக்கெட்டுமே ஐம்பது ரூபாய் ஆகிவிடுகிறது. மிச்ச பாக்கியையும் தருவதில்லை டாஸ்மாக் ஆட்கள். படித்த ஆட்களை அரசு வேலையில் இருத்தியதால், இப்போதெல்லாம் சரக்கு கலப்படம் மிக லாவகமாக நடக்கிறது. நாம் சொன்னால் நீயும் குடிப்பியா? என்கிறார்கள். ஒரு குவாட்டர் அடித்தாலே வாந்தி எடுக்கும் எதிர்வீட்டு சண்முகம் இப்போதெல்லாம் இரண்டு குவாட்டருக்கும் போதை இல்லை என்கிறான். அனேகமாக அவனுக்குப் பழகி இருக்கலாம். அல்லது நான் சொன்னதுபோல் கலப்படமாக இருக்கலாம். யாருக்குத் தெரியும்?

ஆங்.. எங்க விட்டேன்?? அப்படி பூசாரி என்னைச் சாத்து சாத்தென்று சாத்தியதால் இப்போது நன்றாக உறங்குவதாக அம்மா சொல்லிக்கொண்டிருந்தால் வெளியே ஒரு ஆயாவிடம். அனேகமாக பால்கார ஆயாவாக இருக்கும். இரவு 11 மணிக்கு எந்த ஆயா வருவாள்?? அனேகமாக அம்மாவும் என்னைப்போல் கதைசொல்லியாகிவிட்டாளா?? வெளியே போய் பார்க்கலாம் தான்.. ஆனால் நான் உங்களுடன் பேசுவது நின்றுவிடுமே? ம்.. அம்மா சத்தம் நின்றுவிட்டது.

நாளைக்கு அழுவாள் அம்மா... என்ன செய்ய? எனக்குத்தான் இலக்கியத்தில் பெரிய ஆளாக வர வேண்டுமென்ற ஆசை உண்டே..

திங்கள், 22 நவம்பர், 2010

பெருநாள் நினைவுகள்

பெருநாள் என்றால் என்ன என்பது தெளிவாக எப்போது புரிய ஆரம்பித்தது என்ற எண்ணத்தில் பின்னோக்கி பயணிக்கிறேன். பெருநாள் என்பதை மற்றும் ஒரு நாளாக எப்போதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

கொல்லைப்புறத்து வீட்டிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு முன்னதாக கொண்டு வரும் வட்டிலப்பம் என்ற இனிப்புடன் அந்த நாள் ஆரம்பமாகும். முட்டை அதிகம் இருக்கும் பதார்த்தம் அது. எல்லா நாட்களிலும் பல் விளக்கினால் தான் தேனீர் என்னும் எழுதப்படாத சட்டம் அன்று மட்டும் தளர்த்தப்படும்.

வீட்டில் நானும் தம்பிகளும் அதிகாலை எழுந்து, வட்டிலப்பத்தை கொஞ்சம் தின்று விட்டு, டாய்லெட் பக்கத்தில் க்யூவில் நிற்க வேண்டும். வீட்டிலிருந்த ஒற்றை டாய்லெட்டிற்கு வாளி நிறைய தண்ணீர் கொண்டு போக வேண்டும். இருந்த ஒற்றை வாளியை முன்னமே டாய்லெட் போயிருப்பவர் வைத்திருப்பதால் அவர் டாய்லெட்டிலிருந்து வந்தவுடன் வாளியை பிடுங்கிக்கொண்டு, ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வருவதற்குள் யாராவது உள்ளே போயிருப்பார்கள். வாளியை வெளியில் வைத்து விட்டு தேமே என்று நிற்க வேண்டும். உள்ளே இருப்பவர் தான் தண்ணீர் கொண்டு போகவில்லையே... கொஞ்ச நேரத்தில் உள்ளிருந்து சத்தம் வரும்... யாராவது தண்ணி கொடுங்களேன்னு... வேண்டா வெறுப்பாக கதவுக்கு பக்கத்தில் தண்ணீரை தள்ளி வைத்து விட்டு நாம் விலகிச் சென்றுவிடுவோம். அவன் வெளியே வந்ததும் தண்ணீர் கொண்டு வாடா என்றால் உனக்குத் தானே வேண்டும்.. நீ எடுத்துக்கோ என்று சொல்லி விட்டு ஓடி விடுவான். இதற்காகவே இப்போது கட்டிய புது வீட்டில் ஆறு அறைகளுக்கும் அட்டாச்டு பாத்ரூம் வைத்து கட்டினேன். :)

அந்த களேபரத்திற்கு பிறகு, பைப் தொட்டியில் ஏற்கனவே பைப்பை திறந்து வைத்திருந்ததால் நிரம்பிய தண்ணீரை ஒருவர் அள்ளித் தர ப்ளாஸ்டிக் தொட்டியில் ஊற்றவேண்டும். இரு ப்ளாஸ்டிக் தொட்டி நிரம்பினால் அதற்குள் அந்த நபர் குளித்திருக்க வேண்டும். ஒரு ப்ளாஸ்டிக் தொட்டி இரண்டு குடம் கொள்ளும். சுமார் 20 லிட்டர். அந்த வகையில் மூத்தவன் கடைசியாக குளிக்க வேண்டும். எல்லாரும் குளிக்கும் வரை காத்திருந்து தண்ணீர் அள்ளிக் கொடுத்து..

இப்படிக் குளித்துவிட்டு வந்து, பாயில் அவரவர்க்கான உடைகள் ஜட்டி முதல் எல்லாமும் புதியதாய் இருக்கும். அதை அணிந்து கொண்டு தொழுகைக்கு ஓட வேண்டும். இல்லையென்றால் அத்தா திரும்பி வரும்போது அடி விழும்.

தொழுகை முடித்தவுடன் அத்தாவுடன் சேர்ந்து பேசிக்கொண்டே நடந்து வருவோம். தன்னுடைய எதிர்பார்ப்புகள், கனவுகள் எல்லாமும் அத்தா நம்மிடம் பகிரும் நேரம் அது தான். எப்போதுமே ஒரு கடுப்புடன், கண்டிப்புடன் இருக்கும் அத்தா, காலைத் தொழுகை முடிந்து கொஞ்சம் சகஜமாக பேசும் அந்த நேரங்கள் தான் நாங்கள் பள்ளிக்கு நோட்டு, புத்தகம், பரீட்சை காசு கேட்கும் நேரம். :) எங்களுடைய தேவைகளும் அதற்கு மேல் இருந்ததில்லை.

விபரம் தெரியாத காலத்தில் அத்தா மீது ஏறி அமர்ந்து சவாரி செய்வேனாம். அப்போது அத்தா சொல்வாராம்.. இப்படி நெஞ்சுல நீ குதிச்சு வெளையாண்டா அத்தா அப்புன்னு செத்துடுவேன்டா என்பாராம். எனக்கு கோட் சூட் வாங்கிட்டு செத்துப்போத்தா என்பேனாம். இப்போதும் சொல்லிச் சிரிப்பார்.. என் திருமணத்துக்கு கோட் சூட் எடுத்துத் தரேன் என்ற அவர் போனில் சொன்னபோது இதெல்லாம் ஞாபகம் வந்து அழுதேன். அப்படி எதும் நடக்கக் கூடாது என்பதற்காக அவரை வாங்க வேண்டாம் என்று சொல்லி விட்டு நானே வாங்கினேன்.

வீட்டிற்கு வந்து அன்றைய வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கும் போது கமகமக்கும் புதினா சட்னியுடன் ஆவிபரக்க இட்லி ரெடியாக இருக்கும். அதில் ஒரு ஏழு எட்டு தின்றால் கொஞ்சம் இனிப்பு அம்மா செய்து வைத்திருப்பார்கள். அதையும் கலந்து அடித்துவிட்டு ரெடியாகும்போது, அத்தா பெருநாள் காசு கொடுப்பார்கள். கைக்கு 10 ரூபாய் தருவார்கள். எந்தச் செலவும் இல்லை என்றாலும் அதை வாங்கிக்கொள்வோம். அப்படியே பெருநாள் சிறப்புத் தொழுகைக்கு ஓட வேண்டும்.

தொழுகை முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆரத்தி கரைத்து வைத்திருப்பார் அம்மா... ஆரத்தியெல்லாம் எடுக்கக் கூடாது என்று அத்தா சொன்னாலும், அம்மாவின் அரசியல் புரிய வெகு நாளானது. ஆரத்தி எடுத்தால் அதில் காசு போட வேண்டுமாம். நான் அந்த 10 ரூபாயை அப்படியே போட்டு விடுவேன். தம்பிகள் 1 ரூபாய், 2 ரூபாய் வைத்திருப்பதை போடுவார்கள். அத்தா ஆரத்திக்கு 100 ரூபாய் போடுவார். மற்ற நாட்களில் அத்தாவிடமிருந்து பைசா பெயராது என்பதால் இந்த திட்டம்.. :)

அப்படியே கறி ஏதாவது ரெடி செய்ய வேண்டுமென்றால், வீட்டில் வளர்க்கும் கோழியைப் பிடித்து, தம்பியை ஒரு பக்கம் பிடிக்கச் சொல்லி அறுத்து, அப்படியே தோலை உரித்து, சுத்தம் செய்து அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். கோழி கொஞ்சம் சீக்காக இருந்தால் தொலைந்தேன். பேன் போன்ற வெள்ளை பூச்சிகள் அந்தக் கோழியின் இறகிலிருந்து நம்மேல் விழுந்துவிடும். அப்புறம் அரிக்கும். அதனால் கவனமாக கையாள வேண்டும். அதே நேரத்தில் அத்தா ஆட்டுக்கறி வாங்கி வந்திருப்பார். அப்படியே எல்லாவற்றையும் அம்மாவிடம் கொடுத்துவிட்டு வெங்காயம், வெள்ளைப் பூண்டு உரித்துக் கொடுத்து, இஞ்சி அரைத்துக் கொடுப்பேன். இப்போது போல மிக்ஸி இல்லாமல் அம்மியில் அரைக்க வேண்டும்.

ஒரு முறை அம்மிக் குழவியை அம்மியுடன் அழுத்தித் தேய்த்து அப்படியே ரிவர்ஸில் வரும்போது குழவி தன்னால ரொட்டேட் ஆக வேண்டும். இல்லையென்றால் குழவியில் ஒரு இடத்தில் மட்டும் நன்றாக அரைந்திருக்கும். மற்ற இடம் அரைந்திருக்காது. அந்த லாவகம் தெரியாவிடில் எதையும் அரைப்பது மிகக் கடினம். அப்படியே குழவியை நிற்க வைத்து ஒரு கையால் சுற்றிக் கொண்டே, அரைத்த இஞ்சியை வழித்தெடுத்து சேர்க்க வேண்டும். பிறகு அதை ஓரம் வைத்து மிச்சம் மீதம் அம்மியில் சேர்ந்திருக்கும் இஞ்சியை வழிக்க வேண்டும்.

அதை அம்மாவிடம் கொடுக்கும்போது கண்களால் சொல்லும் தேங்க்ஸ் இப்போது 5000 ரூபாய் பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தாலும் கிடைப்பதில்லை. அந்த நாள் மதிய உணவு முடிந்ததும் அப்படியே நானும் தம்பிகளும் மண்டிக்குளத்தில் நடக்கும் சைக்கிள் ரேஸ் காண செல்வோம். மண்டிக்குளம் என்றால் ரொம்ப தூரமெல்லாம் இல்லை... ரொம்ப பக்கம் தான். அந்த ரேஸ் சமயத்தில் தம்பிகள் ஐஸ் சாப்பிடுவார்கள்.. குச்சி ஐஸ் சாப்பிட ஆசைப்பட்டாலும் பால் ஐஸ் தான் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பது அத்தா ஆணை. 25 பைசா சேமியா ஐஸை விட 50 பைசா பால் ஐஸ் எப்போதும் சுவையாய் இருந்ததில்லை என அத்தாவிடம் எப்படிச் சொல்லி புரியவைப்பது?

இப்படி ருசியான பெருநாளை அனுபவித்து வீட்டிற்கு வந்து நிம்மதியாக படுக்கும்போது ஏதோ ஒன்றை சாதித்ததாக மனம் சந்தோசப்படும். இரவு நிம்மதியான உறக்கம் வரும். அத்தோடு பெருநாள் முடிந்து போகும்.

அந்த நாள்கள் இப்போதும் மனதில் ஆழமாய் பதிந்திருக்கின்றன...

இப்போதும் பெருநாள்கள் வந்து போகின்றன மற்றுமொரு நாளாக..