திங்கள், 14 ஏப்ரல், 2008

ஆணிவேர் என்றொரு திரைப்படம்...

நேரம் போகாது ஒவ்வொரு வலைமனையையும் தேடிக்கொண்டிருந்தேன். கண்ணில் எதேச்சையாய் பட்டது இந்த திரைப்படத்தின் பெயர். என்ன தான் இருக்கிறது பார்ப்போமே என்ற எதிர்பார்ப்புடன், ஒரு ஐந்து நிமிடம் பார்க்கத்துவங்கியதுடன், படம் முடியும் வரை என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. அப்படி கட்டிப்போட்டது இந்த படம்.

சலனப்படம் என்ற கூற்றை திரைப்படத்திற்கு நாம் உபயோகப்படுத்தினாலும், அது இந்த படத்திற்கு தான் மிகவும் பொருந்தும்.

நாயகியாய் மதுமிதா, கதையின் நாயகனாய் நந்தா (புன்னகைப்பூவே திரைப்பட நாயகன்) மற்றும் தமிழ் மக்களின் வாழ்க்கை.

இவை மட்டும் தான் படத்தின் ஓட்டத்திற்கு காரணம்.

நாயகி இந்தியாவிலிருந்து இலங்கை சென்று செய்தி சேகரிக்கிறார். அவர் இலங்கை வீதிகளில் வாகனத்தில் செல்லும்போது காட்டப்படும் சிதிலமடைந்த வீடுகளும், சாலைகளும் சொல்லக்கூடும் ஆயிரம் கதைகளை. அங்கே மருத்துவத்தொழில் புரியும் நாயகனிடம் போய், ஒரு நல்ல புகைப்படம் வேண்டும், முன் அட்டையில் போடுவதற்கு என்று நாயகி சொல்லும் வேளையில் அவளை அப்படியே கொன்று விடலாமா என்று தோன்றுகிறது. எல்லாமே வியாபாரமாய்ப்போன நாட்டில் யாரிடம் போய் கோபித்துக்கொள்வது..

நாயகன் பேசும்போது சொல்லும் வசனம் ஒன்று "அன்னையிடம் பால்குடித்துக்கொண்டிருக்கும் போது அன்னை இறந்தது கூட தெரியாத குழந்தையை இந்த கைகளால் தான் பிரித்தேன்" என்று சொல்லுவார். மனதின் ரணங்களை ஆற்ற காலம் தான் மருந்திட வேண்டும்.

அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, பக்கத்தில் குண்டு வெடிக்கும்போது மனம் ஒரு நிமிடம் விட்டுத்துடிக்கிறது. ஊர் மொத்தமாக மற்றொரு இடத்திற்கு குடிபெயர்வதற்கு அறிவுறுத்தப்படும்போது, "என்னுடன் வந்துவிடு என்று என் பாட்டியை நான் அழைக்க, வாழ்ந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்றபோது பாட்டியின் கண்ணில் வழிந்த கண்ணீர் சொன்ன பதில் ஏனோ என் எண்ண நிழலாடலில்..". வாழ்ந்த இடத்தை விட்டுபோன பிறகு மீண்டும் வருவோமோ மாட்டோமோ எனும்போது மனம் வலிக்கும் வலி அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்.

பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தை கற்பழித்து கொல்லப்படுவதிலாகட்டும், டாங்கிகள் மேலேற்றி மக்கள் நசுக்கப்படுவதிலாகட்டும், அத்தனையிலும் ஊறித்திளைக்கிறது மற்றைய மொழியினரின் வெறிச்செயல்.

நண்பர் ரிஷான் எழுதிய கவிதை வரி தான் ஞாபகத்துக்கு வந்தது..

//எங்களது உயிர்கள் எடுக்கப்படும் கணப்பொழுதுகளில் என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..? ஓர் அழகிய பாடலின் ஆரம்ப வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ...? //

அப்படித்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்???

3 கருத்துகள்:

Kalaiyagam சொன்னது…

உங்களைப் போல மனித நேயம் உள்ள சிலருக்கு மட்டுமே பிறர் வேதனையை புரிந்து கொள்ள முடிகின்றது.

Kalaiyagam
http://kalaiy.blogspot.com

அகமது சுபைர் சொன்னது…

அப்படி இல்லைங்க..மக்கள் மாக்களாய் இருக்கிறார்களே என்ற ஆதங்கமும் காரணம்.

raman - Name சொன்னது…

//எல்லாமே வியாபாரமாய்ப்போன நாட்டில் யாரிடம் போய் கோபித்துக்கொள்வது..//

எவ்வ‌ள‌வு ய‌தார்த்த‌மான உண்மை... எத்த‌னைப் பேருக்கு புரிய‌ப்பபோகிற‌து..