சனி, 21 ஏப்ரல், 2007

எழுத்துக்கூடத்தின் 25 ம் கூட்டம் - வெள்ளிவிழா கூட்டம் - ஒரு பார்வை

அது ஒரு பொன் மாலைப் பொழுது... ஆம் எழுத்துக்கூடத்தின் 25 ம் அமர்வு தான்.

சிந்தை முழுதும் நம்மை ஆட்டிப்படைக்கும் வேலைப்பளு இல்லாதிருக்கும் வாரத்தின் ஒரே நாள் வெள்ளிக்கிழமை. மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிகளில் கூடுகிற எழுத்துக்கூடத்தின் இன்றையச் சிறப்பு இது வெள்ளிக்கிழமை மட்டுமில்லாமல் வெள்ளிவாரமும் என்பதாகும் (மலையாளத்தில் 'கிழம' என்பதே வாரம் என்ற பொருளில் தானாம்). இக்கூட்டம் பற்றி ஒன்று விடாமல் எழுதச் செய்யும் முயற்சியாக இப்பதிவு. ஓராண்டுக்கும் மேலான இந்த நிகழ்வு ரியாத் தமிழ்சங்க வலைப்பதிவில் பொன்னிறங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு www.riyadhtamilsangam.com

இலக்கியத்தின் மீதான நம் அனைவரின் ஆர்வம் தான் இந்த எழுத்துக்கூடம் இத்தனை வெற்றிகரமாக நடப்பதின் மூல காரணம்.

இந்த முறை எழுத்துக்கூடத்தின் வருகைப்பதிவு அதிகமாக இருந்தது.

ஆம், வழமையாக 4 முதல் 8 பேர்வரை கலந்துகொள்ளும் எழுத்துக்கூடம் இந்த முறை 18 பேர் கொண்ட மாபெரும் சபையாக மாறியது.

கலந்துகொண்டவர்கள்:
ஐயா அப்பாஸ் ஷாஜஹான் மற்றும் குடும்பத்தினர் (3)
'வாத்தியார்' கே.வி.ராஜா மற்றும் குடும்பத்தினர் (2)
ஐயா மாசிலாமணி அவர்கள் (1)
ஐயா வெற்றிவேல் அவர்கள் (1)*
ஐயா விஜய சுந்தரம் அவர்கள் (1)*
ஐயா இளங்கோவன் அவர்கள் (1)
ஐயா சோமு அவர்கள் (1)
ஐயா இம்தியாஸ் அவர்கள் (1)
ஐயா பாலமுகுந்தன் அவர்கள் (1)
ஐயா அறவாழி அவர்கள் (1)
கவிஞர் ஹ.பஃக்ருத்தீன் அவர்கள் (1)
திருமதி. மலர் சபாபதி அவர்கள் (1)
திரு தஞ்சை மீரான் அவர்கள் (1)
இவர்களுடன் நான் (அகமதுசுபைர்).

மற்றும் வெகு தொலைவிலிருந்து, தகவல் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் சாத்தியத்தால், நம்முடன் கலந்து கொண்ட ஐயா ஆசாத் அவர்கள். (1) (கடைசியா பெயர் போடுறது ஏன்னா..சினிமா படத்தில டைரக்டர் பேர் கடைசியாத்தான் வரும் :-))

வழமையாக கூட்டத்தில் கலந்துக்கொள்வதைத் தவறவிடாத 'இலக்கிய' ஷாஜஹான் தாயகம்சென்றிருப்பதால் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள இயலாமற் போனது நமக்கெல்லாம் வருத்தம் தான்.

மேற்குறிப்பிட்டவர்கள் தவிர நமக்கு தொலைபேசி மூலம் வாழ்த்தினைத் தெரிவித்த திருமதி கீதா சங்கர் அவர்கள். இத்தனை பேரும் கலந்து கொண்டபோதே அதன் சிறப்பு தெளிவாகத்தெரிந்திருக்க வேண்டும்.

இந்த கூட்டத்தின் தலைமைப்பொறுப்பை ஐயா அப்பாஸ் ஷாஜஹானிடம் ஒப்படைத்தார் எழுத்துக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. கே.வி.ராஜா அவர்கள். நிகழ்ச்சியின் முன்னிலை "வாழும் தமிழ்" ஐயா இளங்கோவன் அவர்கள்.

முதலாவதாக கவியரங்கம்,

தமிழ்க் கவிதைகள் மலினப்படுத்தப்பட்டதால், அவற்றின் எதிர்காலம் என்னவாகுமோ என இருந்த பயம் மெல்ல அகன்றது இந்த கவியரங்கத்தின் போது.

கவிஞர்கள் முறையே திரு.ராஜா, திரு.பஃக்ருத்தீன், திருமதி. மலர், மற்றும் திரு. சுபைர் (இவனுக்கெல்லாம் எதுக்கு "திரு"ன்னு முணங்குறது எனக்கு கேட்குது) மற்றும் திரு. இளங்கோவன் தங்களின் மின்னஞ்சலில் ஏற்கனவே பதிவான கவிதைகளை அரங்கேற்றினர்.

இதில் திருமதி மலர் அவர்கள் புதுக்கவிதையும், சுபைர் புதுக்கவிதைபோல ஒன்றும் அரங்கேற்றினர். ஏனையோர் மரபுக்கவிதைகளை கத்தியின் கூர்மையான வீச்சினை ஞாபகப் படுத்தும் கவிதைகளை அரங்கேற்றினர். இதில் ஐயா இளங்கோவன் அவர்கள் ஒருபடி மேலேபோய் தனது கட்டளைக்கலித்துறை+அந்தாதியினை அழகாக பாடிக்காட்டினார். (அதில் 5 குறை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசும் உண்டாம்..எனக்கு இதுவரை ஒன்னுகூட கிடைக்கல).

தமிழிசையில் கவியரங்கத் தலைவர் தனது அழுத்தமான ஆழமான கவிநயத்தில் நம்மை கட்டிப்போட்டார் என்றால் மிகையில்லை. திரு ஆசாத் அவர்கள் கானாப் பாடலும் பாடினார், எழுசீர் விருத்தமும் பாடினார். இதெல்லாம் போதாதென்று எனக்கு 10 ரியால் பரிசுக்கேள்வியும் கேட்டார். நம்ம தான் எதிலயும் அரைகுறை ஆச்சே. என்ன செய்றது. 10 ரியால் போச்சு. (கேள்வி என்ன என்று கேட்பவர்களுக்கு தொ.பே தொடர்பில் வாருங்கள்)

கவியரங்கக் கவிதைகள் மிக விரைவில் மேலே குறிப்பிட்ட வலைப்பதிவில் "எழுத்துக்கூடம்" பிரிவில் பதியப்படும். சிலரைப்பற்றி எழுதுவதற்கும் ஞானம் வேண்டும். எனக்கு அது இல்ல. அதனால இத்தோட நிறுத்துறது உத்தமம்.

அடுத்து ஐயா பாலமுகுந்தன் அவர்களின் "மீள் அடமானம்" (Reverse Mortgage) பற்றிய கட்டுரை. இது ஏற்கனவே எழுத்துகூடத்தில் வந்திருந்தாலும், இன்று மற்றொரு பரிணாமத்தை எடுத்துக்காட்டியது.

இலக்கியம் என்பது கதை, கவிதை மட்டுமில்லை, ஆக்கப்பூர்வமாக துறை சார்ந்தோர் தத்தம் துறை பற்றிய அறிவாக்கங்கள் எழுதியும் இலக்கியத்துக்கு பங்காற்ற வேண்டும் என்ற இளங்கோவன் ஐயா அவர்களின் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது!

தங்களின் துறைச் சார்ந்த இதுபோன்ற பதிவுகளால் தமிழ் மேலும் வளரும் என அனைவரும் கருத்து தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற கட்டுரைகளை எழுதித்தந்தால் புத்தக வடிவில் வெளியிட வழிகாட்டுவதாக ஐயா மாசிலாமணி கூறினார். மிக விரைவில் நாம் எதிர்பார்ப்போம்...

அடுத்ததாக நண்பர் ஃபக்ருத்தீன் "வாழ்க்கை நலம்" என்ற பெயரில் வெண்பா வாசித்தளித்தார். சுபைரும் ஃபக்ருத்தீனும் இணைந்து எழுதிய 10 குறள் வெண்பாக்களை "கடவுள் வாழ்த்து" எனும் பெயரில் வாசித்தளித்தனர்.

பின்னர் ஐயா மாசிலாமணி, தமது பங்களிப்பாக "தாக்கம் தந்த தமிழர்கள்" தொடரை ஆரம்பித்தார். இந்த முறை அவர் எடுத்துக்கொண்டது "ராஜராஜ சோழன்". நில அளவை எடுத்தது, அதற்குத் தகுந்த முறையில் வரி வசூலித்தது, வாணிகம் செய்ய பல நாடுகளுக்கும் செல்ல உற்சாகப் படுத்தியது (இன்றும் "தாய்லாந்து" மன்னர் பதவி ஏற்கும்போது திருப்பாவை ஓதித்தான் பதவி ஏற்கவேண்டுமாம்), நம்பியாண்டார் நம்பி மூலம் தமிழ் நூல்களை முறைப்படுத்தியது, பிரமாண்டமான கற்கோவில்களை எழுப்பியது, குடவோலை முறையை நடைமுறைப்படுத்தியது (இதே நேரத்தில் கிரேக்க நாகரிகத்தில் பிளேட்டோ கூட, குடியாட்சியில் பணபலம், ஆள்பலம் உள்ளவர் மட்டுமே பதவிக்கு வரமுடியும் என தனது "Republic" என்ற புத்தகத்தில் கூறியுள்ளாராம்.) என பல சாதனைகள் புரிந்ததால் இந்த அரசர் தன் பட்டியலில் இடம் பிடித்ததாக ஐயா மாசிலாமணி கூறினார். இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் ஐயா மாசிலாமணி அவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அனைவரும் புலவர்கள், ராஜராஜசோழன் தவிர.

சில நேரங்கள் மறக்க முடியாததாக ஆகிவிடுவதுண்டு. சில நேரங்கள் மறக்கக் கூடாததாக ஆகிவிடுவதுண்டு. சில நேரங்கள் இரண்டுமாய் அமைவதுண்டு. அந்த கணங்கள் அமைந்தது 25ம் எழுத்துக்கூடத்தில்..
25ம் வாரம் நடக்கும் இவ்வெழுத்துக்கூடம், வருடங்களையும் யுகங்களையும் கடந்து, இடம் நாடு என்கிற பரிமாணங்களையும் தாண்டி, தமிழுக்கும் தமிழ்கூறு நல்லுலகுக்கும் பலப்பல தொண்டாற்றி நிற்க வேண்டும் என்று வாழ்த்துவமாக!

இத்தனையும் பார்க்க நண்பன் கல்யாண் நம்முடன் இல்லை எனும்போது மனம் கனக்கத்தான் செய்தது.

கருத்துகள் இல்லை: