எத்தனை வேகமாக நகர்கின்றன நாட்கள். கண்மூடி திறக்கும் முன் 24ம் கூட்டமும் முடிவடைந்துவிட்டது. இதுவரை நடந்த கூட்டங்களுக்கு திரு. இலக்கிய ஷாஜஹான் பதிவு எழுதுவார். (இவர் மக்கள் மத்தியில் லக்கி ஷாஜஹான் என அறியப்படுபவர்.) இவர் தற்போது விடுப்பில் இருப்பதால் நான் எழுத வேண்டியதாகி விட்டது. என் செய்வது தொல்லை கொடுப்பதே எம் தொழில்.
24ம் கூட்ட அமர்விலே கலந்து கொண்டவர்கள் ஐயா திரு. மாசிலாமணி அவர்கள், திரு. ஜெயசீலன் அவர்கள், திரு. மற்றும் திருமதி. பாலமுகுந்தன் அவர்கள், திரு. ராஜா, திரு. ஃபக்ருத்தீன் மற்றும் அடியேன்.
வழக்கமாக நடைபெறும் கூட்டம் போல் தொடங்கியது. ஆனால் நேரம் செல்லச்செல்ல வேகம் பிடித்தது. "கதாவிலாசம்" பகுதியை நண்பர் ஃபக்ருத்தீன் வாசிக்க ஆரம்பித்தார். சுபைர் வாசிக்கும்போது வேகமாக வாசித்துவிடுவார். அதனால் கலந்தாலோசிக்க நேரம் கிடைக்காது. ஆனால் நண்பர் ஃபக்ருத்தீன் நிறுத்தி நிதானமாக வாசித்ததால் கலந்தாலோசித்தல் சாத்தியப்பட்டது.
"சரித்திரத்தின் சாலை" எனத் தலைப்பிட்ட அத்தியாயம் திப்பு சுல்தான் மாளிகையில் எழுத்தாளர் நிற்பதில் துவங்குகிறது. திப்பு சுல்தான் இயந்திரப் புலியை வளர்த்து வந்ததாகவும் அதைக் கொண்டு வெள்ளையர்களை பயமுறுத்தியதாகவும் எழுதியிருக்கிறார். திப்புவிடமிருந்து வெள்ளையர்கள் கற்ற பல விஷயங்களில் நில அளவை (சர்வே) எடுப்பதும் ஒன்று என்கிறார்.
"வாளின் தன்மை" என்ற பெயரிலான திரு ச. தமிழ்செல்வனின் சிறுகதை விவரிக்கப் பட்டிருக்கிறது.
சுப்பையா என்ற குமாஸ்தா தலைமுறை தலைமுறையாக சாகசம் செய்து வந்த வீரவாளை பைக்குள்ளே வைத்துக்கொண்டு பயணம் செய்வதில் தொடங்கி, வாளின் பெருமையை மீட்டெடுக்க சபதம் கொண்டு, வாளைத் தோளிலேயே தொங்கவிட்டு அலைந்து, அவன் வாளைச் சுழற்றிக்கொண்டு அலைகிறான்.
இந்த சிறுகதை குடும்ப வரலாற்றின் மீதான மீள் பார்வையை முன்வைப்பதோடு, இன்றைய மனிதனின் பலவீனத்தையும் வெளிப்படுத்துகிறது.
திப்பு சுல்தான் மாளிகையைப் பற்றி பேசும்போது ஐயா ஜெயசீலன் அவர்கள் ரியாத் மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளை சுற்றிப் பார்த்த நாட்களையும் அதன் அனுபவங்களையும் கூறினார்.
ஜெயசீலன் அவர்களின் பேச்சில் தான் அவரின் அனுபவம் தெரிகிறதேயொழிய அவர் இளைஞனாகவே இருக்கிறார். சுற்றுலா பற்றி அவர் பேசும்போது கண்களில் தெரியும் உற்சாகம் இன்னும் இரண்டு வருடம் குறைத்துத்தான் காட்டுகிறது.
கதாவிலாசத்திற்குப் பிறகு, ஐயா மாசிலாமணி அவர்கள் "தாக்கம் தந்த தமிழர்கள்" பகுதியை தொடர்ந்தார். அவர் இந்த கூட்டத்தில் எடுத்துக்கொண்ட ஆளுமை "ஆண்டாள்".
கடவுளைக் கண்டு பயந்துகொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், தன் நாயகனாக நினைந்துருகிய ஒரு ஈடுபாடு பிடித்திருக்கிறது. அவர் காலத்திற்கு பிறகு தான் வட நாட்டில் மீரா போன்ற கடவுளைக் காதலிக்கும் மனோபாவம் தோன்றியதாக சொல்கிறார்.
சங்கிடம் தன் நாயகனின் வாய்ச் சுவை எப்படி இருக்கிறது என ஆண்டாள் கேட்கும் போதே அவரின் ஈடுபாடு நமக்கு வியப்பைத் தருகிறது.
இன்ஷா அல்லாஹ், எழுத்துக்கூடத்தின் 25ம் கூட்டத்தில் "தாக்கம் தந்த தமிழர்கள்" புத்தக வடிவில் வெளியிட ஏற்பாடாகியுள்ளது.
ஐயா மாசிலாமணி அவர்கள் எப்படி இத்தனை மாறுபட்ட மனிதராக இருக்கிறார் எனப் புரியவில்லை. லேசர் பற்றி பாடம் நடத்துகிறார், தமிழர் வரலாற்றை புட்டு புட்டு வைக்கிறார், "பாவனா" பற்றியும் கேள்விகள் எழுப்புகிறார்.
அவரின் MCD (Masila's Cancer Diagnosis) - புற்று நோய் நேடலுக்கான கண்டுபிடிப்பு நிச்சயம் நோபல் பரிசைப் பெற்றுத்தரும். இன்னுமொரு நல்ல செய்தி அவரின் கண்டுபிடிப்பு, இந்திய அரசாலும், அமெரிக்க அரசாலும் (Patent) ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
என் மனதில் அவரைப் பற்றிய மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடைசியாக வந்தது "வெண்பா - பயிற்சி வகுப்பு"
வாத்தியார் ராஜா, குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம் என கலந்து கட்டினார். அவர் வெண்பா நடத்த கரும்பலகையில் (இங்கே வெள்ளைப் பலகை) எழுதும் போது ஒரு நிமிடம், நம்மை வெயிலில் முட்டிபோட சொல்லிவிடுவாரோ என தோன்றியது. நமக்குத்தெரிந்த தமிழாசிரியரெல்லாம் "கோனார் தமிழுரை" படிப்பதோடு நிறுத்திவிடுவர். ஆனால் ராஜாவின், நடிகைகளை உதாரணம் காட்டி அசை பிரித்த ஆரம்பம் முதலே, வெண்பா எழுதவேண்டும் என உத்வேகம் உந்தப்பெற்றோம்.
நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா போன்றவற்றை ராஜா சொல்லிக்கொடுத்தார்.
நிச்சயம் சொல்கிறேன், ராஜாவின் வெண்பா பாடம் படித்தால், தமிழ் மீது ஒரு ஈர்ப்பு வருகிறது. எத்தனை அழகான இலக்கணமுறை, அசை கூட எப்படி முடிய வேண்டும் என ஒரு இலக்கணம்..அடடா, நாம் இத்தனை காலம் வெண்பாவின் சுவையை இழந்துவிட்டோமென்றுதான் சொல்ல வேண்டும்.
வரும் எழுத்துக்கூட நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக "தாக்கம் தந்த தமிழர்கள்" புத்தக வெளியீடும், மற்றும் சில முக்கியமான நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன.
எதிர்பார்ப்போம்...இன்ஷா அல்லாஹ்.
தமிழுக்காக நாம் காவியம் படைக்காவிட்டாலும், தமிழின் பெருமையை அறிந்துகொள்வோம்.
சனி, 21 ஏப்ரல், 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக