செவ்வாய், 26 செப்டம்பர், 2006

அப்பா

நம்ம "அப்பா"வ பத்தி எழுதலாம்ல..."தவமாய் தவமிருந்து" படத்தில காட்டுற "ராஜ்கிரண் சார்" ஒரு மடங்குன்னா, எங்க அப்பா நூறு மடங்கு கஷ்டப்பட்டவர்.
அப்பா, இந்த மூன்றெழுத்து வார்த்தையின் அர்த்தம் என்ன?
கனவுகளுடன் கைகோர்த்து நடக்க கற்றுக் கொடுத்தவர். கண்ணீரின் வலிமையை அம்மாவின் கண்ணீரில் புரிய வைத்தவர்.
காதலின் மற்றொரு பரிமாணம் பாசம் என்றுணர்த்தியவர்.
காற்றாய், புயலாய் பூமி இருக்கையில் கால் வயிறு கஞ்சிக்காக என்னையும் வைத்து 15 கி.மீ. சைக்கிள் மிதித்தவர்.
என்னுடன் சேர்த்து நாங்கள் 6 குழந்தைகள், அதில் முதலாமவன் நான். மற்ற அனைவரும் சிறுவர்கள். கடைசியாக ஒரே ஒரு தங்கச்சி.
எங்கள் அனைவருக்கும், உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ செலவு, இத்யாதி, இத்யாதி....சற்று நினைத்துப் பாருங்கள்... எப்படி சாத்தியம்..மாதம் 1500 ரூபாய் சம்பளத்தில்?
குடும்பத்தை வழிநடத்துவது கவிதை எழுதுவதைப் போன்ற சுலபமான வேலையில்லை, எந்த IIMம் பாடமாக வைக்கவும் இல்லை.

நம் வாழ்வின் அசாத்திய நேரங்களில் நம்மை வழிநடத்துவது தந்தையின் அனுபவங்களே.

வாழ்வியல் ரீதியாக, நான் மற்றவர்களிடம் பழகும் போக்கில் என் தந்தையின் சாயலை அறியலாம்.

அனைவருக்கும் "ரோல் மாடல்" யார் என்றால், சச்சின் என்றோ, டாக்டர் அப்துல் கலாம் என்றோ, மற்றவர்களையோ சுட்டிக்காட்டுவார்கள்.
நான் என் தந்தையை சுட்டிக்காட்டுவேன். நான் சொல்வதில் எதுவும் மிகையில்லை.

இன்று ஏதோ ஒரு பாலைவன மதிய வேளை வெயிலில் ஷூவுடன் நடக்கும்போது, "வெறும் காலுடன் நடந்து கொண்டிருக்கையில் என் தந்தை என் வயதில் என்ன செய்து இருப்பார்?" என யோசிப்பேன்.

அவர் எங்களுக்காக கழனியில்* உழவு மாடுகளுடன் உழன்று கொண்டிருப்பார் என என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், ஒரு முறை கூட என் தந்தை அவர் பட்ட கஷ்டத்தை எங்களிடம் காட்டிக் கொண்டதில்லை.
நான் பத்தாம் வகுப்பில் 500க்கு 429 மார்க் மட்டுமே எடுத்தேன். ஆனால் நான் ஏதோ பெரிதாக சாதித்ததாக, என் ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் விருந்து வைத்தார். (முதல் வகுப்பு தொடங்கி அனைத்து ஆசிரியர்களையும்)

என் தந்தையை நான் ஆச்சர்யமாக பார்த்த நாட்கள் அவை. அந்த ஆச்சர்யம் இன்றும் தொடர்கின்றது.

நான் பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு சேருகையில், ஊரில் உள்ளவர்கள் என் தந்தையிடம்," உங்க பிள்ளையை சிங்கப்பூர், மலேசியா அனுப்பி வையுங்கள், உங்களின் குடும்ப பாரம் குறைந்த மாதிரி இருக்கும்" என்று சொல்லிப் பார்த்தனர். ஆனால் என் தந்தையோ, "அவன் படிக்க ஆசைப்படுகிறான், படிக்கட்டுமே!" என்றார். (என்னைக் கேட்காமலே...)
நான் பன்னிரண்டாம் வகுப்பில் 1200க்கு 911 மார்க் எடுத்தேன்.
அப்போதும் என் மீதான நம்பிக்கையை தந்தை இழந்து விடவில்லை.
யார் யாரையோ பார்த்து, எப்படியோ பொறியியல் கல்லூரி ஒன்றில் அப்ளிகேஷன் போட்டாயிற்று.

அந்த கல்லூரியில் தனியாக என்ட்ரென்ஸ் வைப்பார்கள். தமிழ் மீடியத்தில் படித்து ஆங்கிலத்தில் வைத்த பரீட்சையில் என்னையும் அறியாமலேயே முதலாவதாக வந்தேன். (நம்ம ஆங்கிலப் புலமை ரொம்ப அதிகம், காந்திஜி இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாம், கொஞ்சம் காத்திருந்தால், என்னுடைய ஆங்கில பேச்சிலேயே, ஆங்கிலேயர்கள் தலைதெறிக்க ஓடியிருப்பார்கள்.)

அதனால், கடவுள் கிருபையால், எனக்கு கல்விச் செலவு முழுமையும் கல்லூரியே ஏற்றுக் கொண்டது. ஆனாலும் எனது பயணச்செலவு, புத்தகம், நோட், இத்யாதிகளுக்கு நான் ஊருக்கு வரும்போது ரூ 500/- தருவார். அந்த காசை எப்படி புரட்டினார் என்பது இன்றும் எனக்கு புரியாத புதிர்.
எத்தனை கஷ்டங்கள் பட்டாலும், எங்களை கஷ்டப்படாமல் வளர்த்தார்.
ரம்ஜான் மாதத்தில் முதல் 2 அல்லது 3 நாட்கள் நோன்பு வைத்தபின், என் முகத்தைப் பார்த்து நோன்பு வைக்காதே என்று சொல்வார்.

பசி, அழுகை, சோகம் போன்று எதையும் எங்களுக்கு காட்டாதவர். ஆனால், தண்டனை கொடுப்பதில் தமிழ்நாடு போலீசைவிட கடுமையானவர்.
உதாரணத்திற்கு என் தம்பிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஒன்று.,
கையிரண்டையும் கட்டி, கால் இரண்டையும் கடுவார். பிறகு, கால்களை மடக்கி, கைகளுக்குள் நுழைத்து, கால் முட்டி, கை முட்டிகளை ஒரே நேர்கோட்டில் வைத்து ஒரு கம்பை நுழைத்து விடுவார்.
இப்போது, கையையும் பிரிக்க முடியாது, காலையும் பிரிக்க முடியாது, குனிந்த நிலையிலேயே, வெயிலில் சாக்கை விரித்து கிடத்தி விடுவார். இது குறைந்தபட்ச தண்டனை என்று கூட சொல்வார்.

ஆனால், அந்த தண்டனைக் காலம் முடிந்த பின் தனியாக அழைத்து கடையில் தின்பண்டம் வாங்கிக் கொடுத்து அறிவுரை சொல்வார், ஏன் அப்படி செய்தார்? நாங்கள் செய்த தவறு என்ன? என்பதாக.

இத்தனை கடுமையாக இன்று வரை இருந்தாலும் மனதிம் ஓரத்தில் எங்களுக்காக ஒரு அன்பான அப்பாவை மறைத்து வைத்திருக்கிறார் இப்போதும்.
---------------------------------------------------------------------------­---------
*கழனி - வயல்

கருத்துகள் இல்லை: