ஆரோக்கியமான வளர்ச்சி தமிழ்த் திரைத்துறையில்..
இளைய இயக்குனர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, கருவேலங்காடுகளுடன் உழலும் எம் மக்களின் வாழ்க்கையை அருகிருந்து படம் பிடிக்கின்றனர்.
சில நேரங்களில் பொருளாதார ரீதியாக வெற்றியும் பெற்றுவிடுகின்றனர்.
அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருள் புதிதாக இடம் பிடிக்கிறார் அமீர்.
சண்டித்தனம் பண்ணுகிற காளை "கார்த்தி" பருத்திவீரனாக.
அம்மா கழுத்திலேயே அரிவாள் வைக்கும் மறத்தமிழச்சியாக (அடிக்க வராதீங்க...) "ப்ரியாமணி"
சித்தப்புவாக "பொண்டாட்டி ராஜ்யம்" புகழ் "சரவணன்" (அதாம்பு..விஜயகாந்த் மாதிரி ஆக்ட் விட்டுக்கிணு சுத்தினாருல்ல..அவுர் தான்.)
பொண்ணுக்கு அப்பனாக, "பொன்வண்ணன்"
மற்றும் சில கதைக்கான பாத்திரங்கள்.
கதை ரொம்ப சின்னது.. சண்டியர் காதலிக்கப் படுகிறார். காதலில் விழுகிறார். இருவரும் ஒன்று சேருகிறார்களா? இல்லையா?
சில பேர் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் வழி ரொம்பவும் வித்தியாசமானது. நல்லா படிச்சு டாக்டராகணும், இன்ஜினியர் ஆகணும் என்று சிலரும், "ஏலே! லாலுஜி கூட பால் வித்தவர் தாம்ல..நானும் மாடு மேய்க்கப் போறேன்ல" என்று சிலரும் வித விதமான வழியை தேர்ந்தெடுக்கின்றனர்.
இக்கதையின் நாயகன் தேர்ந்தெடுக்கும் வழி "அடிதடி".
சில நேரங்களில், சில நினைவுகள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச்செல்லும். அப்படி சில நினைவுகள் கலந்து கட்டி அடிக்கும் போது கண்ணில் நீர்த்துளி வரலாம். வயிறு குலுங்க சிரிக்கலாம்..
இந்த திரைப்படத்தினை பார்க்கும்போது "ஏம்பல்" என்ற சிறு கிராமத்திலே என் பள்ளிப்பருவத்திலே நான் வளர்ந்த காலத்தின் நினைவு வந்தது.
மஞ்சள் வெயில் தெறிக்கும் பூமியை அப்படியே அள்ளி வந்திருக்கிறது ராம்ஜியின் ஒளிப்பதிவு. கானல் நீர் ஓடும் காட்சிகளும், வெக்கை பரவும் நேரங்களும் ஏ.சி. அறையின் குளுமையைக் காட்டிலும் உள்ளுக்குள் பரவுகிறது.
இசை யுவன் சங்கர் ராஜா. சில படைப்பாளிகள் தங்களுக்குள் இருக்கும் திறமையை வார்த்தெடுக்கும் வல்லுனர்கள் இல்லாததால் திறமையை விட சற்றே குறைவான பெயரையும் புகழையும் பெறுகின்றனர். இங்கே தனித்தன்மையுடன் செயல்படும் பலருக்கு உரிய மரியாதை கிடைக்கப் பெறுவதில்லை.
யுவனின் பாடல்களை விட பின்னணி இசை பிரமாதம். மௌனம் காக்கிறது சில இடங்களில். பிரவாகமெடுக்கிறது பல சமயங்களில்.
"அறியாத வயசு" பாடலில் இளையராஜாவின் குரல் நம்மை கட்டிவிடுகிறது என்பது உண்மை.
இயக்குனர் அமீர், முந்தைய படங்களில் தமிழ் திரைத்துறையில் இருக்கை பிடித்திருந்தார். இப்போது பெர்த் சீட்டே கிடைத்திருக்கிறது.
"சென்னை மத்திய சிறையை பார்த்துவிட வேண்டும்" என்ற குறிக்கோளுடைய கதாநாயகன், அவன் செய்யும் அத்தனை தவறுகளும் அறிந்திருந்தும் அவனுக்காக உயிர் வாழும் நாயகி.
படம் ஆரம்பித்து 2 மணிநேரம் வரை கிராமிய மணம் கமழும் ஒரு வாழ்க்கையின் திரைச்சான்று என்று நினைத்திருந்தேன்.
கடைசி அரைமணி நேரம் எதுவும் பேசாது, அழுது கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன்.
வசனங்களில் அரிவாளின் வீச்சு.. இறுதி நேரத்தில் கதாநாயகி கதறும் காட்சிகளில் நெஞ்சு விம்மித்துடித்தது. அந்த காட்சிகளில் வரும் வசனம் அத்தனையும் மறக்க முடியாதவை.
நாம செய்யுற பாவத்துக்கு தண்டனை எப்படி கிடைக்குமோன்னு நினைச்சு ராத்திரி முழுக்க தூங்க முடியலயா...!
செவ்வாய், 6 மார்ச், 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
என்னங்க அகமது இப்ப தான் இந்த படம் பார்கிற வாய்ப்பு கிடைச்சுச்சா?? நல்ல படம் நல்ல விமர்சனம்.
கருத்துரையிடுக