நீண்ட நெடிய பாதை அது.. இருமருங்கிலும் பச்சைவர்ணம் போர்வை போர்த்தியிருந்தது. கருமையான தார்ச்சாலையின் நடைமேடைகளில் கண்கவர் பூக்கள் நம்மிடம் ஏதோ சொல்லத்துடிப்பதாய்த் தோன்றும். பக்கத்தில் அவள் சொல்ல முடியா துயரத்தின் விளிம்பில் நிற்கிறாள்.
அவளுடனான பயணம்
தகிக்கும் கோடையின்
தகிக்கும் கோடையின்
நினைவுகளைக் கிளறிவிடுகிறது
வெற்றுக்கால்களுடனான
பயணங்கள் சுகமானது..
சாலையின் வெப்பம் பரவா
பொழுதுகளில் மட்டும்..
இன்று அவள் தோள்
சாய்ந்து கதறி அழும்போது
ஆதரவாய் சாய்த்துக்கொள்வது தவிர
வேறெதையும் சிந்தித்தவனாயில்லை நான்.
இல்லாத பொருளொன்றை இழந்த துக்கத்தை அவள் என்னிடம் உண்டாக்கி இருந்தாள் ஒரு மாலைப் பொழுதில் நான் இனி உன்னிடம் பேச மாட்டேன் என்ற பொழுதில். ஆனால் இன்று என் தோளில் அவள் தேம்பி அழும்போது விரல்கள் அவள் கண்களைத் துடைக்கவில்லை. அவளை அழ விட்டு வேடிக்கை பார்க்கிறது.
மனித மனம் குரூர எண்ணங்களை வெளிப்படுத்த துடித்துக்கொண்டே இருக்கிறது. அவள் என்னை வேண்டாமெனச் சொன்ன போது துடித்த மனம் அவள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டுமென உதடு சொல்லும்போதெல்லாம் உள்ளுக்குள் சிரித்துக்கொள்கிறது.
துன்பமான கோடையில் வெயில் வெற்றுக்கால்களை தீண்டும் போதெல்லாம் இதே ஒரு பொழுதில் அவள் விட்டுச்சென்ற வார்த்தைகள் ரணப்படுத்துகின்றன.
இப்போதும் அந்த வார்த்தையை அவள் ஏன் சொன்னாள் என்பதை விட அவளுக்கு இப்போது என்ன பிரச்சினை என்பதையே ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காணும் மனம் எனக்கும் வாய்த்து விட்டதோ என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.
அவளுடன் நான் நடந்து கொண்டிருக்கும் போதே வேகமாய் வந்த லாரி என் மீது ஏறி போய்க்கொண்டிருக்கிறது.
அவள் இன்னும் அழுதுகொண்டிருக்கிறாள்.
6 கருத்துகள்:
ரைட்டு..
அநியாயத்துக்கு சோகம் சுபைர்...
சும்மா ஒரு புனைவு :)
சோகமென்றபோதும் அருமை வாழ்த்துக்கள். சுபைர்...
கடைசி வரி ம்ம் சோகத்தை இப்படியும் சொல்லலாம்..
நன்றி இர்ஷாத்...
கருத்துரையிடுக