திங்கள், 10 ஜனவரி, 2011

நட்பின் வலியும் புத்தாண்டு இழப்பும்

2003ம் ஆண்டு டிசம்பர் இறுதி நாள்.. 2004ம் வருடம் ஆரம்பம்..

இந்தப் புத்தாண்டு இரவு என் வாழ்வின் முக்கியமான நட்பைத் தரும் இரவாக மாறப்போவதை அறியாமலே நின்று கொண்டிருக்கிறேன்.

கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் காலம். மெல்லிய குளிர் பரவும் இரவு நேரம். தாம்பரம் கிழக்கு பகுதியில் கேம்ப் ரோடுக்கு அருகில் ஒரு சர்ச்சுக்குப் பக்கத்தில் அவளை முதன் முதலாகப் பார்த்தேன்.

கையில் குழந்தையுடன் தடுமாறிக் கொண்டு, கொண்டுவந்த பொருள்களை பேக் செய்ய முடியாமல் கொரியர் அலுவலகத்துக்கு வந்திருந்தாள். அழகென்றெல்லாம் சொல்ல முடியாது. கருப்பு தான். ஆனால் களையான முகம். குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும். டெல்லிக்கு ஏதோ அனுப்ப கொரியர் அலுவலகம் வந்திருந்தாள்.

நண்பனின் மோதிரத்தை அடகு வைத்து விட்டு, அவன் நண்பனுக்கு பழைய புத்தகங்கள் வாங்கி அனுப்ப கொரியர் அலுவலகம் போயிருந்தேன். உடன் என் நண்பன், மற்றுமொரு ஜூனியர் பையன்.

அவர்களெல்லாம் தன் கடமையை செய்து கொண்டிருக்க மனதில் உறங்கிக்கொண்டிருந்த ஹீரோ விழிக்க, வலிய சென்று அவளுக்கு உதவினேன். பெண் என்பதால் உதவினேனா என்று இப்போதும் சந்தேகமாக இருக்கிறது.

அவளுடனான பேச்சு படிப்பைச் சுற்றியும், அவளின் வசிப்பிடம் பற்றியும் வளர்ந்துகொண்டே போனது. சொந்த ஊர் கன்னியாகுமரி பக்கம் என்றாள். நிறைய பேசினோம். அந்தக் குழந்தை அவள் சித்தி குழந்தை என்றாள். ப்ராஜக்ட் விசயமாக சென்னைக்கு வந்தேன் என்றாள். இதெல்லாம் ஏன் சொல்கிறாள் என்று தோன்றினாலும், அவளைப் பேச விட்டுக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

சில நாட்கள் கழித்து, பொங்கல் வாழ்த்து அனுப்பினாள். அதற்குள் என்னை குண்டன் என்று அழைக்க ஆரம்பித்திருந்தாள். கல்லூரிக்குள் ஒரு தேவ தூதனைப் போல் வலம் வந்து கொண்டிருந்தேன். உடன் படிக்கும் பெண்களெல்லாம் இவன் இப்போதெல்லாம் மிக வித்தியாசமாக இருக்கிறானே என்று எண்ணம் வந்திருக்க வேண்டும். ஆனால் அது நட்பு என்றே சொல்லி வந்திருக்கிறேன்.

காதல் என்பதற்கும், நட்பு என்பதற்கும் வித்தியாசம் புரிவதில்லை. அவளுடன் பேச வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் பேசி இருக்கிறேன். அனேகமாக 7 ஆண்டுகளாக, வகுப்புத் தோழி இல்லாத ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

சவூதியிலும், துபாய் வந்த பிறகும், அவளுடைய பிறந்தநாளுக்குத் தவறாமல் வாழ்த்து சொல்லப் பழகி இருக்கிறேன். அவளை என் வாழ்வில் ஒருத்தியாகவே எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது நட்பு என்பதாகத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

என் நண்பர்கள் கேலி செய்வார்கள்... என்னடா லவ்வர் மாதிரி எப்பவும் பேசிட்டு இருக்க அவ கிட்ட என்று... ஆனால் அவளுடன் பேச வேண்டும் என்று தோணும்போது பேசுவேன்.

அவள் மேற்படிப்பு படித்தாலும், பிறகு சென்னையிலேயே வேலை செய்தாலும், அவளுடனான தொலைபேசி அழைப்புகள் குறைவதாயில்லை. ஒரு முறை சென்னை சென்ற போது அவளைப் பார்த்தேன்.

"ஃபாரின்ல இருந்து வந்திருக்க, எனக்கென்ன கிஃப்ட் வாங்கிட்டு வந்த?" என்றாள்.
"உனக்கென்ன வேணும்?" என்றேன்.
"நீ நல்லா இருந்தா போதும்" என்றாள்.
"உன் மொக்கையெல்லாம் ஊர்ல வச்சுக்க... என்ன வேணும் உனக்கு?" என்றேன்.
(அப்போதெல்லாம் பதிவெழுத ஆரம்பித்திருந்தேன் என்று சொல்லித் தெரிய வேண்டாம் :-))
"எனக்கு ஏதாவது ட்ரெஸ் எடுத்துக் கொடு" என்றாள்.

அப்போதே அவளை அழைத்துக் கொண்டு சென்னை சில்க்ஸ் போய், சுடிதார் துணி எடுத்துக் கொடுத்தேன். விலையைப் பற்றிய கவலை ஏதும் இல்லை அப்போது. ஆனால் அவள் கேட்டு நான் இல்லை என்று சொல்லாத அளவில் என் நட்பு இருக்கிறது என்ற கர்வம் கொண்டேன்.

என்னுடைய திருமணத்திற்கான அழைப்பிதழை அவளுக்கு ஈ -மெயிலில் அனுப்பி இருந்தேன். அவளால் வர இயலவில்லை. அதற்கான காரணமும் சொல்லி இருந்தாள். ஆனாலும் மனம் கேட்கவில்லை. அவளுடன் பேசவில்லை.

சில நாட்களில் அவள் எனக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பினாள். ஆனால், அவள் திருமணத்துக்கு என்னால் போக இயலவில்லை. அப்போது தான் என் திருமணத்துக்கு வராமல் அவள் சொன்ன காரணம் போன்று எனக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்பது புத்தியில் உறைத்தது.

அவள் திருமணம் நல்லபடியாக நடந்ததாகவும், மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொன்ன போது மிகவும் மகிழ்ந்தேன். எல்லாமும் சரியாய் போய்க்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். இடையில் வேலை மாற்றம், இந்தியா விஜயம் என நானும் பிஸியாகப் போனதால் அவளைப் பற்றிய நினைவே இல்லை.

பின்னொருநாள் நள்ளிரவில் எனக்கு போன் அழைத்து அவள் விக்கி விக்கி அழுதாள். மனம் பதறியது. என்ன ஆச்சு என நான் கேட்கக் கேட்க அவள் அழுது கொண்டே இருந்தாள். அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தேன். பிறகு எல்லாமும் சொன்னாள். கணவன் சந்தேகப் பிராணியாம்.

எது செய்தாலும் சந்தேகமாம். அவள் மொபைலை எடுத்து பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறான். குண்டன் என்ற பெயர் பார்த்து அவளிடம் விசாரித்திருக்கிறான். அவளும் வெள்ளந்தியாக எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறாள். முன்ன பின்ன பழகாம, எந்தவித கொடுக்கல் வாங்கலும் இல்லாம எப்படி நட்பு என்கிறாய் என சரமாரியாக கேள்விகளால் துளைத்திருக்கிறான். நான் ட்ரெஸ் வாங்கித் தந்ததை அவள் சொல்லி இருக்கிறாள். அந்த ட்ரெஸ் விலை அறிந்ததும் என் மீதான சந்தேகம் வலுத்திருக்க வேண்டும்.

அவன் வீட்டில் இல்லாத பொழுது அவள் எனக்கு போன் செய்திருக்கிறாள். "என்ன செய்யணும்னு புரியல" என்றாள்.

அவளுக்கு நான் சொன்ன பதில்,
"என் நம்பரை அழித்துவிடு. முடிந்தால் என் நினைவுகளையும்"

5 கருத்துகள்:

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

:((

பிரசாத் சொன்னது…

சகோதரியின் வாழ்வில் மகிழ்ச்சி மலர இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை...

ம்ம்ம்... இதற்காகவே சில நட்புகளை நான் வேண்டுமென்றே முறித்திருக்கிறேன்... :(

அகமது சுபைர் சொன்னது…

நன்றிகள் அப்துல்லா ஐயர் & ப்ரசாத்..

Unknown சொன்னது…

ஆண்கள் எல்லோருமே தனக்கு வருபவள் தன்னைத்தவிர வேறு யாரிடமும் பழகியிருக்கக் கூடாதென்றே எதிர்பார்க்கின்றான். ஆனால், தான்மட்டும் பார்க்கும்பெண்களிடம் எல்லாம் பேசிப் பழகுவதையே விரும்புகின்றான். அது சரி, 7 ஆண்டுகளுக்கு முந்திய கதையை இப்பொழுது எழுதப்போய், இது உமது மனைவிக்கும் தெரிந்து, உங்களுக்கும் அவளுக்கும் ஏதோ தொடர்பு இல்லை என்றால், ஏன் இந்த நிலைமை? என்று உம்மீது சந்தேகம் வராது என்பது என்ன நிச்சயம்? வம்பை விலைக்கு வாங்கும் வீண் வேலை எதற்கு?

அகமது சுபைர் சொன்னது…

உங்கள் ஆதரவுக்கு நன்றிங்க சேதுபாலா...