வியாழன், 24 பிப்ரவரி, 2011

துரோகம் - புனைவு

காலையிலிருந்து இடது இமை துடித்துக் கொண்டிருந்தது. இன்று ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று உள்மனம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் அது இப்படி நண்பகலில் நடக்குமென்று எண்ணவில்லை. யாரை இத்தனை நாளாக காணக் கூடாது என்று எண்ணிக்கொண்டிருந்தேனோ, யாரை நான் இத்தனை நாளாக நட்பு பாராட்டக் கூடாது என்று எண்ணிக்கொண்டிருந்தேனோ அவனை, என்னுடைய வண்டி சிக்னலுக்காக காத்திருக்கும் பொழுதில் லாண்ட் க்ரூசர் வண்டியில் பார்த்தேன். உடன் அவளையும்.

முன்பை விட சதைப்பற்றோடு புஷ்டியாகத் தெரிந்தான். அந்த நாட்களின் நினைப்பு மீண்டும் வட்டமிடத் தொடங்கியது. அவன் அவளைக் காதலிக்காது இருந்திருந்தால் இன்று அவனை வன்மத்துடன் நான் பார்க்கும் இந்த நிலை வந்திருக்காது.

தேவதை என்றெல்லாம் கவிதை எழுதத்தூண்டும் அழகு அவள். புர்கா அணிந்து கல்லூரி வருபவள் வகுப்பிற்குள் நுழைந்ததும், தலைக்கு ஒரு துணியை கட்டிக் கொண்டு புர்காவைக் கழட்டி விடுவாள். தொளதொள ஆடையில் அங்க அவயங்கள் துள்ளியமாய்த் தெரியாது. எனக்கு முன்னாலான இருக்கையில் அவள் இருப்பாள்.

தமிழ் மாத்திரம் தெரிந்த, ஆங்கிலம் என்றால் 26 x 2 = 52 எழுத்து தான் என்றிருந்த நான், எல்லாமும் ஆங்கிலமான அந்தக் கல்லூரியில் சேர்ந்ததும் திக்கும் தெரியாது திசையும் தெரியாது தடுமாறி நின்ற பொழுதுகளில் தன் நோட்ஸ் தந்து உதவுவாள்.

வாட்டர் ட்ரீட்மெண்ட் என்றால் தண்ணிக்கு என்ன வியாதி வந்தது? என்று கேட்கும் ரகம் நான். வகுப்பில் பாடங்கள் புரியாத போது அவளை எங்கள் கல்லூரி ஆலமரத்தடிக்கு வரச் சொல்லி சந்தேகங்கள் கேட்டுக்கொள்வேன். மிகக் கேவலமான சந்தேகங்கள் இருந்தது. சிமெண்ட் தயாரித்தலின் மூலப் பொருட்கள் யாவை?, அட்டவணையில் இந்த சமன்பாடு எப்படி உதவும் என்றெல்லாம் கேட்பேன். சன்னமாய்ச் சிரித்து விட்டு, தலையில் கொட்டுவாள். அட்டவணை இல்லடா.. டேப்ளர் காலம் என்பாள்...சமன்பாடு இல்லடா ஈக்குவேசன் என்பாள். எங்களை ஒரு ஜோடி கண்கள் எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பதை அப்போது அறிந்திருக்கவில்லை.

கல்லூரியில் சுற்றுலா அழைத்துப் போன போது, காசில்லை நான் வரவில்லை என்றேன். அப்போது என் வகுப்பில் இருந்தவர்கள் (கவனிக்க தோழர்கள் அல்ல) காசு போட்டு கூட்டிப் போனார்கள். அங்கே தான் அந்த ஒரு ஜோடிக் கண்களின் சொந்தக்காரன்.. சோ கால்டு.. லாண்ட் க்ரூசர் காரன் என்னிடம் வந்து, என்னை எப்படியாவது அவளிடம் பேச வை என்றான். என்னை டூருக்கு கூட்டிப் போனதில் பெரும் பங்கு அவனுக்கு உண்டு. அவளிடம் கேட்டதற்கு யாரிடமும் பேச மாட்டேன் என்றாள். அதை அவனிடம் சொன்னேன். அப்போது அவன் கேட்ட கேள்வி... "யாரு காசுலடா டூருக்கு வந்த... ங்கோத்தா... ஒத்தை ரூவா செலவு பண்ண துப்பில்ல... உன்னையெல்லாம் எங்க கூட சேத்து சுத்துறதே தப்பு.. இதில எம்பேச்சை கேக்க மாட்டானாமா... அடிங்கடா இவனை" என்றான். அங்கிருந்து வந்தார்களோ அந்த ஐந்து தடிமாடுகளும்.

மல்லாக்க விழுந்து காற்று குடிக்கப் போட்டுவிட்டு போய்விட்டார்கள். அப்போதிலிருந்து குற்ற உணர்ச்சியால் கூனிக்குறுகி கல்லூரியை முடித்தேன். அவனையும் அவளையும் எப்போதும் பார்க்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். இன்று அவனைப் பார்த்ததில் மனம் மிகவும் வேதனையுறுகிறது. உடன் அவளையும்.

அவளை அவனுடன் இன்னொரு நாள் கட்டாயம் பார்ப்பேன். அப்போது சுற்றுலாவிற்கான காசினை 15% வட்டியோடு அவன் முகத்தில் வீசி எறிய வேண்டும். அப்போது அவளும் உடனிருக்க வேண்டும். உனக்காத்தானடி அடி வாங்கினேன் என்று கத்திவிட்டு, வன்மம் தலைக்கேறும் போதெல்லாம் உதிர்க்கும் கெட்ட வார்த்தையை அவர்களை நோக்கி ஒருமுறை உதிர்க்க வேண்டும்...

காத்துக்கொண்டிருக்கிறேன்.

4 கருத்துகள்:

சிட்டுக்குருவி சொன்னது…

கதை அருமை :))

அகமது சுபைர் சொன்னது…

நன்றிங்க சிட்டு..

கலையரசன் சொன்னது…

அதையெல்லாம் காசு திருப்பி கொடுக்குறவன் யோசிக்கவேண்டியது மச்சி!!

தளர்த்திவிடு...

அகமது சுபைர் சொன்னது…

நன்றி கலை... ஆனாலும் திட்டுறதுக்காவது காசு கொடுத்திட்டு திட்டணும் :)))