சனி, 26 நவம்பர், 2011

மயக்கம் என்ன - செல்வராகவன்

அயலக வாழ்வுக்கு வாழ்க்கைப்பட்ட பிறகு எப்போதும் திரைப்படங்களை திரையரங்குகளில் காண விருப்பம் இருந்ததில்லை. முதன் முறையாக இந்தத் திரைப்படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.

திரைப்படங்களை ஒரு நேரங்கடத்தியாக மட்டுமே கொண்டதாக நமது சமூகம் இருந்ததில்லை. திரைப்படங்களை வாழ்வின் அங்கமாக எடுத்துக்கொண்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டோம். அவ்வப்போது சில திரைப்படங்கள் யதார்த்த வாழ்வியலை நமக்கு காட்டினாலும், அது நமக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. மாய யதார்த்தங்களையும், மனவெழுச்சிகளையுமே மூலதனமாகக் கொண்ட இவ்வூடகத்தில் மயக்கமென்ன போன்ற முயற்சிகளை நான் வரவேற்கிறேன். மனவெழுச்சியுடனே இப்பதிவை நான் எழுதுவதாகவே கருதுகிறேன். சோ வாட், இதில் தவறிருப்பதாக எனக்கு எதுவும் தோன்றவில்லை.... நாம் அப்படித்தான் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம் நாய்க்குட்டிகளைப் போல...

மயக்கம் என்ன திரைப்படம் வாழ்க்கையை, இளைஞர்களின் உணர்வை சொல்லி இருப்பதாகவே தோன்றுகிறது. எல்லோரும் வாழ்வில் ஒருமுறையேனும் ஏமாற்றப்பட்டிருப்போம். முக்கியமான ஒரு பொழுதில் நாம் இழந்தது நம்மை ஆழமாகப் பாதித்திருக்கும். அந்த பாதிப்பினால் வாழ்வினைத் தொலைத்தவர்களை நான் நன்கறிவேன். அந்த இழப்பினை விட்டு வெளியேறி மீண்டும் வாழ்வில் சாதித்தவர்கள் சொற்பம் இருக்கக்கூடும்.


பரபரவென திருப்பங்கள் கொண்ட திரைக்கதைகளை மட்டுமே நான் திரைக்கதைகளுக்கான அங்கீகாரமாகக் கொண்டிருக்கிறேன். இந்தத்திரைப்படத்தில் திரைக்கதை அத்தனை வேகமாக இருக்கவில்லை. அதனை திரைக்கதையின் தவறாகத்தான் நினைக்கிறேன். 

மயக்கம் என்ன திரைப்படத்தின் ஆரம்பக்காட்சிகளில் மற்றுமொரு செல்வராகவன் படத்திற்கு வந்திருக்கிறோம் என்பதைத் தவிர வேறொன்றும் வித்தியாசமாய் தோன்றவில்லை.

தமிழக இளம் இயக்குனர்களில் ராஜேஷும் செல்வராகவனும் டாஸ்மாக்கிலேயே தவம் கிடந்திருக்கக் கூடும். காட்சிகளில் அதிகம் அவை புலப்படுகின்றன.

திரைப்படத்தின் முதல் பாதியை தனுஷும், இரண்டாம் பாதியை ரிச்சாவும்  தங்கள் கைகளில் எடுத்திருக்கிறார்கள். அருமையான நடிப்பால் நம்மை கட்டிப்போட்டிருக்கிறார்கள்.

ஒரே ஒரு காட்சி மூலம் என்னை மீண்டும் இந்தப் படம் நோக்கி ஈர்த்திருக்கிறார்கள். கணவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவனுடனே வாழ்க்கை வாழும் கதாபாத்திரத்தில் நம்மை ஆட்டுவிக்கிறார் ரிச்சா. ரத்தத்தைகழுவிக் கொண்டிருக்கும் காட்சியில் ஏனோ நம்மை மிகவும் இம்சிக்கிறார் ரிச்சா.

ஆங்காங்கே முத்திரை பதிக்கிறார் செல்வராகவன். எல்லீஸ் சாலையில் பேருந்து நிறுத்தக் காதல் காட்சியில் சுற்றிலும் இருக்கும் பொருள்கள் காணாமல் போய் இருவர் மட்டுமே ஒரு ஃப்ரேமுக்குள் வந்த பிறகு இயல்பாக பொருந்திப்போகும் முத்தமும், தன்னை உணரச் செய்யும் தொலைபேசி அழைப்பும்... கவிதை..

நண்பன் அறைந்ததும் “அதான் சரி... ஓகே” என்று சொல்வதைப் போலான முகபாவம் தனுஷ் & செல்வா காம்பினேஷன்.. வாவ்...

ரிச்சாவை காதலியாக, மனைவியாக மற்றும் தாயாக மாற்றும் மேக்கப் கலைஞனுக்கும் ஆடை அலங்கார நிபுணருக்கும் வாழ்த்துகள். இறுதிக்காட்சியில் ஹலோ சொல்லும்போது முகத்தில் இருக்கும் பூரிப்பு முதற்கொண்டு கவனித்து செய்திருக்கிறார் செல்வா.கிராமத்துக் காட்சிகளின் பசுமையும், காதலின் அழகும், அள்ளிப்பருகச் செய்யும் இயற்கையின் பூரிப்பும், இளமையின் தேடல்களையும் உலாவ விட்டிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துகள்.

இசை - ஜிவி ப்ரகாஷ். எங்கிருந்து எடுத்தாண்டார் இந்த இசையை என்றே முதல் முறை நினைக்கச் செய்யும் ட்யூன்கள். ஆனால் இன்ஸ்ட்ருமெண்ட்சில் மாற்றங்களையும் ஜாலங்களையும் செய்து, ஆங்காங்கே அமைதிகாத்து கலக்கி இருக்கிறார்.

சைந்தவி & நரேஷ் ஐயர் குரலில் பாடும் பாடல் என்னை இழுத்துக்கொண்டு கடந்த காலங்களை நோக்கிப் பயணிக்கச் செய்கிறது.

மயக்கம் என்ன - செல்வராகவனின் அவசரக்கோலம். ஆனாலும் எனக்குப் பிடித்திருக்கிறது.

4 கருத்துகள்:

சாம்ராஜ்ய ப்ரியன் சொன்னது…

சூப்பர்!!

தினேஷ்குமார் சொன்னது…

உங்க விமர்சனத்தை பார்த்துதான் நேற்று படம் பார்த்தேன் நல்லாருக்கு ....

இப்னு ஹம்துன் சொன்னது…

பல நாள்களுக்குப் பிறகு வலைப்பூவில் எழுத வந்த உனக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

உனது விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது.

உனது விமர்சனத்தை விமர்சிக்கவாவது படம் பார்த்துவிட்டு வருகிறேன்.

thanigai சொன்னது…

today iam going man