சனி, 8 ஜூலை, 2006

மரணம் - கட்டுரை

என்ன அற்புதமான தலைப்பு!

இந்த தலைப்பிற்கான ஆக்கங்களை பார்த்த பிறகு என் மனதில் குடிகொண்டிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் கழன்று போனது.

இருந்தாலும் ஆசை யாரை விட்டது. இங்கே எனது கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அ. முன்னுரை:

(தமிழ் அய்யா வாழ்க!)

"மரணம்" இவ்வார்த்தையின் வீரியம் நம் மனத்தில் தரும் அதிர்வுகள் எந்தவொரு மொழியாலும் வடிக்க இயலாதது. நான் கட்டுரை வடிவத்தை தேர்ந்தெடுத்தின் முக்கிய நோக்கம், எந்த கட்டுபாடும் இன்றி எனது எண்ணங்களை எடுத்துரைக்கத்தான். (கதை, கவிதை எல்லாம் எழுதி தமிழுக்கு "already ஆகவேண்டிய Damage" பண்ணியாச்சு. இனி கட்டுரை தான் பாக்கி..)

மரணம் என்பதின் அர்த்தம் புரிந்தவரை எழுதியுள்ளேன். இனி எனது கருத்து சிதறல்களை பொறுக்கி எடுத்துக்கொள்ளுகள். (கொஞ்சம் ஓவர் தாண்டி மாப்ளே..)

ஆ. பொருளுரை:

ஆ.1. மரணம் என்பதின் விளக்கம்:

தத்துவார்த்தமாக, இவ்வுலகை விட்டு மறு உலகை நோக்கிய பயணமே மரணம்.

யதார்த்தமாக, தொல்லைகள் இல்லா நீண்ட உறக்கமே மரணம்.

அறிவியல் பூர்வமாக, உடலின் அனைத்து பாகங்களின் இயக்கம் நின்று போன ஒரு நிலை.

சிறுவர்களின் விளக்கம், சாமி கிட்ட போறது.

இளைஞர்/இளைஞிகளின் விளக்கம், அவளை விட்டு பிரிவது. (இங்கு அவள் என்பதை அவர் என்றோ, அவர்களுக்கு விருப்பப்பட்ட பெயர்களாகவோ இருக்கலாம்.)

நடு வயதினருக்கு, ஒரு இழப்பு.

முதியோர்களுக்கு, ஒரு முடிவுரை.

ஈழத்து சகோதரர்களுக்கு, ஒரு விதை.

இப்படி எத்தனையோ விளக்கங்கள் இருக்கும்போது மரணம் என்பது உண்மையில் இறந்தவருக்கு உறக்கம், மற்றவர்களுக்கு இழப்பு.

ஆ.2. மரணம் இல்லா வாழ்க்கை:

ஒரு முறை புத்தரிடம் ஒருவர் வந்து, "மரணத்தை வெல்ல வழி என்ன?" என்று கேட்டார். அதற்கு புத்தர், "யார் வீட்டில் இதுவரை மரணம் நிகழவில்லையோ, அவ்வீட்டிலிருந்து அரிசி வாங்கி வா!" என்றார். அந்த மனிதரும் அழைந்து திரிந்து பிறகு வெறும் கைய்யுடன் புத்தரிடம் திரும்பினார்.

எனவே மரணம் என்பது நிகழ்ந்தே தீரும். அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதிலேயே நமது வாழ்க்கை அடங்கி இருக்கிறது.

ஆ.3. மரணத்தை வென்றவர்கள்:

1. மகாத்மா காந்தி: அஹிம்சையை போதித்ததால் ஹிம்சையாய் கொல்லப்பட்டவர்.

2. அன்னை தெரசா: மக்களுக்கு சேவை செய்வதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்.

மற்றவர்களைப் பற்றி எழுதுவதால் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்பதினால் இந்த இருவருடன் நிறுத்துவது உத்தமம்.

இந்த வரிசையில் நிறைய வெளிநாட்டு வாழ் அன்பர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். தனக்கென வாழாது தன் குடும்பத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.

இவர்கள் எப்படி மரணத்தை வென்றார்கள் என்ற சிந்தனையை உமக்கே விட்டு விடுகிறேன்.

ஆ.4. மரணம் எப்படி இருக்கும்?

ஆனந்த விகடனில், சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் தொடரை படித்தவர்கள் ஓரளவிற்கு புரிந்திருப்பார்கள்."

இங்கு நான் கண்ட மரணத்தை பற்றிய வர்ணனை,

எங்கள் வீட்டில் என் தாத்தா இறந்த போது எனக்கு அத்தனை நினைவில்லை. என் பெரிய பாட்டி(பாட்டியின் அக்காள்) இறந்த போது, ஏனோ அது எனக்கு துக்கம் தந்ததில்லை. அவர் இறக்கும் போது அவருக்கு வயது 90. அதுவும் கூட ஒரு காரணமோ? அப்படி எனில் வயது ஆன பிறகு சாவது ஏற்றுக்கொள்ளப் பட்டதோ?

என்னை பாதித்த மரணம் எங்கள் வீட்டில் நாங்கள் வளர்த்த மாட்டினை பற்றியது. செவலை நிறத்தில், ஜெர்ஸி இனத்து பசு மாடு எங்கள் அனைவரின் பாசத்திற்கு உரியது.

ஒரு நாளைக்கு குறைந்தது 10 லிட்டர் பால் தரும். ஒரு நாள் மாட்டிற்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டைக் கழுவி விட போன நேரத்தில், அந்த மாடு தீவனத்தைக் கொட்டி நான் அடி வாங்கியது எல்லாம் பழைய கதை. (அன்று நான் பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரை - 4 அடி உயரம் - கை படாமல் தாண்டியதும் உண்டு.)

ஒரு நல்ல நாளில் அந்த மாட்டின் ஜீரணம் நின்று போனது. 4 நாட்கள் அது எந்த விதமான கழிவையும் வெளியேற்றாது துடித்தது. அரசாங்க மருத்துவர் வந்து ஊசி போட்டு மருந்து கொடுத்துவிட்டு, மறக்காமல் காசு வாங்கிவிட்டு போனார்.

அன்று மாலை அதற்கு மாத்திரை கொடுப்பதற்காக நானும், எனது தந்தையும் மாட்டை இறுக்கிப் பிடித்து படுக்க வைத்திருந்தோம். அம்மா அதற்கு மருந்தை புகட்ட, மருந்து உள்ளே சென்ற சிறிது நேரத்தில், என் அம்மாவின் மடியிலேயே ஒரு சின்ன விசும்பலுடன் (மா....), அதன் பார்வை நிலை குத்தி நிற்க, அந்த ஜீவன் என் தாயை பார்த்த வண்ணம், தன் உயிர் ஈந்தது.

அந்த தினத்தில் எங்கள் வீட்டில் யாரும் உணவு உண்ணவில்லை. ஒரு மாட்டின் இறப்பு தந்த இழப்பு எத்தனை கொடூரமானது என்பது விளங்கியது.

சில நேரங்களில் தோன்றும், மனிதன் உழைத்து ஓய்ந்த பின் இறப்பதினால் அழுவதில்லையோ? (பெரிய பாட்டியின் மரணம்)

தர வேண்டிய பலனை தராததால், மாடு இறந்த அன்று துக்கம் கொண்டோமோ?

பலன் தந்தால் மட்டுமே வாழ்க்கையா?

மரணம் கூட ஆனந்தம் தான், அதை எதிர் கொள்பவர்களுக்கு.

எத்தனையோ நேரங்களில் மரணத்தைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் என் மாட்டின் மரணம் நிழலாடும். அந்த மாட்டின் மரணத்திற்கு பிறகு, என் அப்பா சொன்னது, "ராஜா, நம்ம வீட்டில யாராவது ஒருத்தரோட உயிர் போகணும்னா, அந்த உயிர் எடுக்கிற தேவதைகள் (மலக்குகள் - இஸ்லாமிய போதனை) வரும் போது அந்த வீட்டில் இருக்கும் வளர்ப்புப் பிராணிகள் உயிரை எடுத்துக்கொண்டு போகுமாம்.!"

அப்படி என்றால், மனிதனுக்காக உயிர் விடும் ஜீவ ராசிகள் தான் நம்மிடம் வளர்கிறதோ?

இப்படி எத்தனையோ எண்ணங்கள் நம்மை வட்டமடிக்கிறது.

ஏனோ, மரணத்தைப் பற்றிய பயம் இல்லாதவர்கள், மரணத்தை மறந்தவர்கள் தான் இந்த உலகத்தினை ஆட்டுவிக்கிறார்கள்.


இ. முடிவுரை:

எத்தனையோ எழுத நினைத்து, அலுவலக வேளை மென்னியை திருக, இத்துடன் முடிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை எனக்கு.( நல்ல வேளை தப்பித்தோம் என்ற முனகல் சத்தம் என் காதுக்கும் வரத்தான் செய்கிறது.)

மரணம் மட்டுமே சில புதிர்களை விடுவிக்கிறது. (இரண்டு பெண்டாட்டி விஷயம் கூட இதில் அடக்கம்)

யாரோ சொன்னது இன்று எனக்கு ஞாபகம் வருது.

"நீ அழுது கொண்டே பூமிக்கு வருகிறாய்,
உன்னை மரணம் தழுவும்போது மற்றவர்கள் அழ வேண்டும் உனக்காக!"

7 கருத்துகள்:

murali சொன்னது…

சுபைர் நல்லா இருக்கு கட்டுரை.உங்க வீட்டு மாடு போல எங்க வீட்ல ஒரு நாய் கத இருக்கு.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

அகமது சுபைர் சொன்னது…

நன்றி ஐயா!

ilavanji சொன்னது…

மரணத்தை சற்றே நகைச்சுவையுடன் அனுகிய முதல் பதிவு! :)

போட்டிக்கான என் வாழ்த்துக்கள்...

அகமது சுபைர் சொன்னது…

நன்றி இளவஞ்சி அவர்களே!.

ILA (a) இளா சொன்னது…

போட்டிக்கான என் வாழ்த்துக்கள்...

அகமது சுபைர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

hi da... really good...

but what is that "competition" people are talking about?