செவ்வாய், 14 நவம்பர், 2006

ரியாத் தமிழ்ச் சங்க கவியரங்கம்

இன்றைய நவ நாகரீக உலகில் கவியரங்கம் காண யார் வரப்போகிறார்கள் என்றிருந்த எனக்கு மக்கள் வெள்ளம் பார்த்து மனம் நிறைந்தது.

பன்னாட்டு இந்திய பெண்கள் மேனிலைப்பள்ளியில் கோலாகலமான ஏற்பாட்டுடன் விழா நடைபெற்றது.

மாலை 6:30 மணிக்கு தொடங்க வேண்டிய விழா சரியாக 7:30 மணிக்கு தொடங்கியது. நேரம் தவறாமை(?!) என்பது நம் ரத்தத்தில் ஊறியதாகையால், ஒரு மணிநேர தாமதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை (வஞ்சப் புகழ்ச்சி :-) ). வள்ளுவர் இன்று வாழ்ந்திருந்தால் "நேரம் தவறாமை" என்ற பெயரில் ஒரு அதிகாரமே எழுதியிருப்பார்.

ரியாத் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் எதிர்பார்த்த விழா திரு. ஹைதர் அவர்களின் வர்ணனையுடன் துவங்கியது.

அது யாருப்பா பெண் தொகுப்பாளினி?

நண்பர் இப்னு ஹம்துன் சொன்னார், அந்த பெண் தொகுப்பாளினி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராம்.. அருமையான குரல் வளம், பிறப்பால் தமிழராய் இருக்கும் பலருக்கு அத்தனை அழகு தமிழ் வாய்ப்பதில்லை. இன்னும் தமிழின் நெளிவு சுளிவுகள் தெரியவேண்டும்.

திருமறை வசனங்களும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட துவங்கிய விழாவில், எப்போதும் சிறப்பாய் இருக்கும் "இந்திய தூதுவர் ஐயா M.O.H.ஃபரூக்" அவர்களின் உரை ரத்தினச் சுருக்கமாய் இருந்தது.

ரியாத் வாழ் கவிஞர்களின் கவிதைகளில் பெரும்பாலும் சோகமும், பிரிவும், விரகமுமே நிரம்பி இருக்கும் என்ற என் கணிப்பு பல இடங்களில் பொய்த்துப்போனது.

கவிஞர் சுவாமிநாதன் தனக்கேயுரிய நடையில் கவி பாடினார்.

பின்னர் வந்த லியோ அவர்களின் கவிதை எனக்கு புரியவில்லை. ஸோ, நோ கமெண்ட்ஸ்.

திருமதி ஜெயசீலன் தொட்ட இடம் முதியோர் இல்லம். அவர் எடுத்த பொருள் பலரின் நெஞ்சினை சுட்டது என்றால் மிகையில்லை.

லக்கி ஷாஜஹான் கவிபாட வரும்போது நானும் விசிலடித்தேன் அவரின் ரசிகன் என்பதால்! (சவூதியில் விசிலடித்தல் என்றால் சும்மாவா...? அதுவும் ஒரு சாதனை. )

லக்கி ஷாஜஹானை கவிபாட வரவேற்கையில் திரு ஹைதர் அவர்கள் கொடுத்த முன்னுரை கவனிக்கப் படவேண்டியது. "லக்கி ஷாஜஹான் என்று பரவலாகவும், இலக்கிய ஷாஜஹான் என்று தமிழ் உறவாலும் அறியப்படும் லக்கி ஷாஜஹானை கவிபாட அழைக்கிறேன்" என்றார்.

அவர் எடுத்தாண்ட தலைப்பு வெளிநாட்டவரின் விடுமுறை.

நானும் விடுமுறை செல்லும் நேரமாதலால், மிகுந்த ஈடுபாட்டுடன் கவனித்தேன்..

கவிஞர் மு. மேத்தாவை, புதுக்கவிதையின் ஆத்தா என்றார் ஷாஜி. பிறகு தான் தெரிந்தது அவர் தாத்தா என்றிருக்கிறார், நமக்கு ஆத்தா என்று காதில் விழுந்திருக்கிறது. ஆனாலும் மக்களை எளிதாக சென்றடைந்தது அந்த நடை.

பின்னர் வந்தார் ரியாத் லியோனி (நம்ம சஜ்ஜாவுதீன் தானுங்கோ!)

அவரின் கவிதை "அக்காமா" (சவூதியின் குடியுரிமை அனுமதி) பற்றியது.

அவரின் துள்ளல் நடையில் கூட்டம் ஆர்ப்பரித்தது.

பின்னர் நடந்தது தான் நமக்கு சற்று கவலையளித்த விஷயம். புலவர் சாரங்கபாணி பேச வந்தபிறகு, "ஆனந்த விகடன்"-ல் படித்த பல ஜோக்குகளை திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டேன்.

அவருக்கு புதுக்கவிதை மீது தீராத காதல் (வஞ்சப் புகழ்ச்சி!). அவர் முதல் முறையாக இத்தனை கூட்டத்தை காண்கிறார் போலும். மூன்று நான்கு முறை கூட்டத்தினரைப் புகழ்ந்தார், இத்தனை கூட்டத்தை இதுவரை காணவில்லையென்று.

பிறகு வந்த கவிஞர் மு.மேத்தா பேச விளைந்த விஷயம் எதுவென்று எனக்கு பிடிபடவில்லை.

அவரின் கவிதைகளின் வீரியம் அவர் பேச்சில் இல்லை என்பதே உண்மை.

இந்த விழாவில் முத்தாய்ப்பான் விஷயம், திரு குமரி அனந்தனின் ஆர்ப்பரிக்கும் பேச்சு.

கன்னியாகுமரியில் சங்கமிக்கும் கடலின் அலை போன்ற பிரவாகம்.

பேச்சாளன் எப்படி பேச வேண்டும் என்பதற்கான் உதாரணம் அவரின் பேச்சு.

சங்க காலத்திற்கும் முன்னே இருந்த குமரிக் கண்டத்தின் காற்சிலவழுது துவங்கி, நிகழ்காலம் வரை தமிழ் வளர்ந்த கதை சொன்னார்.

பாராளுமன்றத்திலே கேள்விநேரத்தின் போது தமிழிலும் கேள்வி கேட்கலாம் என்ற முறையை கொண்டுவர அவர் பட்ட பாட்டை நண்பர் திரு ராஜா விளக்க, அவர் மீது ஒரு தனிப்பிரியம் ஏற்பட்டது உண்மை.

சன் டி.வி. விமர்சனமாக சொல்வதென்றால்,

"ரியாத் தமிழ் சங்க கவியரங்கம் மழையில் நனைந்த பட்டாசு"

1 கருத்து:

இப்னு ஹம்துன் சொன்னது…

//கவிஞர் மு.மேத்தா பேச விளைந்த விஷயம் எதுவென்று எனக்கு பிடிபடவில்லை//
பேச, விளைந்தது கொட்டாவி.
பேச விழைந்தது தெரியவில்லை.

//சன் டி.வி. விமர்சனமாக சொல்வதென்றால்,

"ரியாத் தமிழ் சங்க கவியரங்கம் மழையில் நனைந்த பட்டாசு"//

பாவம், சன் டி.வி
அதற்குத் தெரியவில்லை
ஒரு அருமையான விமர்சகரை
இழந்திருப்பது!