பெருநாள் என்றால் என்ன என்பது தெளிவாக எப்போது புரிய ஆரம்பித்தது என்ற எண்ணத்தில் பின்னோக்கி பயணிக்கிறேன். பெருநாள் என்பதை மற்றும் ஒரு நாளாக எப்போதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
கொல்லைப்புறத்து வீட்டிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு முன்னதாக கொண்டு வரும் வட்டிலப்பம் என்ற இனிப்புடன் அந்த நாள் ஆரம்பமாகும். முட்டை அதிகம் இருக்கும் பதார்த்தம் அது. எல்லா நாட்களிலும் பல் விளக்கினால் தான் தேனீர் என்னும் எழுதப்படாத சட்டம் அன்று மட்டும் தளர்த்தப்படும்.
வீட்டில் நானும் தம்பிகளும் அதிகாலை எழுந்து, வட்டிலப்பத்தை கொஞ்சம் தின்று விட்டு, டாய்லெட் பக்கத்தில் க்யூவில் நிற்க வேண்டும். வீட்டிலிருந்த ஒற்றை டாய்லெட்டிற்கு வாளி நிறைய தண்ணீர் கொண்டு போக வேண்டும். இருந்த ஒற்றை வாளியை முன்னமே டாய்லெட் போயிருப்பவர் வைத்திருப்பதால் அவர் டாய்லெட்டிலிருந்து வந்தவுடன் வாளியை பிடுங்கிக்கொண்டு, ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வருவதற்குள் யாராவது உள்ளே போயிருப்பார்கள். வாளியை வெளியில் வைத்து விட்டு தேமே என்று நிற்க வேண்டும். உள்ளே இருப்பவர் தான் தண்ணீர் கொண்டு போகவில்லையே... கொஞ்ச நேரத்தில் உள்ளிருந்து சத்தம் வரும்... யாராவது தண்ணி கொடுங்களேன்னு... வேண்டா வெறுப்பாக கதவுக்கு பக்கத்தில் தண்ணீரை தள்ளி வைத்து விட்டு நாம் விலகிச் சென்றுவிடுவோம். அவன் வெளியே வந்ததும் தண்ணீர் கொண்டு வாடா என்றால் உனக்குத் தானே வேண்டும்.. நீ எடுத்துக்கோ என்று சொல்லி விட்டு ஓடி விடுவான். இதற்காகவே இப்போது கட்டிய புது வீட்டில் ஆறு அறைகளுக்கும் அட்டாச்டு பாத்ரூம் வைத்து கட்டினேன். :)
அந்த களேபரத்திற்கு பிறகு, பைப் தொட்டியில் ஏற்கனவே பைப்பை திறந்து வைத்திருந்ததால் நிரம்பிய தண்ணீரை ஒருவர் அள்ளித் தர ப்ளாஸ்டிக் தொட்டியில் ஊற்றவேண்டும். இரு ப்ளாஸ்டிக் தொட்டி நிரம்பினால் அதற்குள் அந்த நபர் குளித்திருக்க வேண்டும். ஒரு ப்ளாஸ்டிக் தொட்டி இரண்டு குடம் கொள்ளும். சுமார் 20 லிட்டர். அந்த வகையில் மூத்தவன் கடைசியாக குளிக்க வேண்டும். எல்லாரும் குளிக்கும் வரை காத்திருந்து தண்ணீர் அள்ளிக் கொடுத்து..
இப்படிக் குளித்துவிட்டு வந்து, பாயில் அவரவர்க்கான உடைகள் ஜட்டி முதல் எல்லாமும் புதியதாய் இருக்கும். அதை அணிந்து கொண்டு தொழுகைக்கு ஓட வேண்டும். இல்லையென்றால் அத்தா திரும்பி வரும்போது அடி விழும்.
தொழுகை முடித்தவுடன் அத்தாவுடன் சேர்ந்து பேசிக்கொண்டே நடந்து வருவோம். தன்னுடைய எதிர்பார்ப்புகள், கனவுகள் எல்லாமும் அத்தா நம்மிடம் பகிரும் நேரம் அது தான். எப்போதுமே ஒரு கடுப்புடன், கண்டிப்புடன் இருக்கும் அத்தா, காலைத் தொழுகை முடிந்து கொஞ்சம் சகஜமாக பேசும் அந்த நேரங்கள் தான் நாங்கள் பள்ளிக்கு நோட்டு, புத்தகம், பரீட்சை காசு கேட்கும் நேரம். :) எங்களுடைய தேவைகளும் அதற்கு மேல் இருந்ததில்லை.
விபரம் தெரியாத காலத்தில் அத்தா மீது ஏறி அமர்ந்து சவாரி செய்வேனாம். அப்போது அத்தா சொல்வாராம்.. இப்படி நெஞ்சுல நீ குதிச்சு வெளையாண்டா அத்தா அப்புன்னு செத்துடுவேன்டா என்பாராம். எனக்கு கோட் சூட் வாங்கிட்டு செத்துப்போத்தா என்பேனாம். இப்போதும் சொல்லிச் சிரிப்பார்.. என் திருமணத்துக்கு கோட் சூட் எடுத்துத் தரேன் என்ற அவர் போனில் சொன்னபோது இதெல்லாம் ஞாபகம் வந்து அழுதேன். அப்படி எதும் நடக்கக் கூடாது என்பதற்காக அவரை வாங்க வேண்டாம் என்று சொல்லி விட்டு நானே வாங்கினேன்.
வீட்டிற்கு வந்து அன்றைய வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கும் போது கமகமக்கும் புதினா சட்னியுடன் ஆவிபரக்க இட்லி ரெடியாக இருக்கும். அதில் ஒரு ஏழு எட்டு தின்றால் கொஞ்சம் இனிப்பு அம்மா செய்து வைத்திருப்பார்கள். அதையும் கலந்து அடித்துவிட்டு ரெடியாகும்போது, அத்தா பெருநாள் காசு கொடுப்பார்கள். கைக்கு 10 ரூபாய் தருவார்கள். எந்தச் செலவும் இல்லை என்றாலும் அதை வாங்கிக்கொள்வோம். அப்படியே பெருநாள் சிறப்புத் தொழுகைக்கு ஓட வேண்டும்.
தொழுகை முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆரத்தி கரைத்து வைத்திருப்பார் அம்மா... ஆரத்தியெல்லாம் எடுக்கக் கூடாது என்று அத்தா சொன்னாலும், அம்மாவின் அரசியல் புரிய வெகு நாளானது. ஆரத்தி எடுத்தால் அதில் காசு போட வேண்டுமாம். நான் அந்த 10 ரூபாயை அப்படியே போட்டு விடுவேன். தம்பிகள் 1 ரூபாய், 2 ரூபாய் வைத்திருப்பதை போடுவார்கள். அத்தா ஆரத்திக்கு 100 ரூபாய் போடுவார். மற்ற நாட்களில் அத்தாவிடமிருந்து பைசா பெயராது என்பதால் இந்த திட்டம்.. :)
அப்படியே கறி ஏதாவது ரெடி செய்ய வேண்டுமென்றால், வீட்டில் வளர்க்கும் கோழியைப் பிடித்து, தம்பியை ஒரு பக்கம் பிடிக்கச் சொல்லி அறுத்து, அப்படியே தோலை உரித்து, சுத்தம் செய்து அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். கோழி கொஞ்சம் சீக்காக இருந்தால் தொலைந்தேன். பேன் போன்ற வெள்ளை பூச்சிகள் அந்தக் கோழியின் இறகிலிருந்து நம்மேல் விழுந்துவிடும். அப்புறம் அரிக்கும். அதனால் கவனமாக கையாள வேண்டும். அதே நேரத்தில் அத்தா ஆட்டுக்கறி வாங்கி வந்திருப்பார். அப்படியே எல்லாவற்றையும் அம்மாவிடம் கொடுத்துவிட்டு வெங்காயம், வெள்ளைப் பூண்டு உரித்துக் கொடுத்து, இஞ்சி அரைத்துக் கொடுப்பேன். இப்போது போல மிக்ஸி இல்லாமல் அம்மியில் அரைக்க வேண்டும்.
ஒரு முறை அம்மிக் குழவியை அம்மியுடன் அழுத்தித் தேய்த்து அப்படியே ரிவர்ஸில் வரும்போது குழவி தன்னால ரொட்டேட் ஆக வேண்டும். இல்லையென்றால் குழவியில் ஒரு இடத்தில் மட்டும் நன்றாக அரைந்திருக்கும். மற்ற இடம் அரைந்திருக்காது. அந்த லாவகம் தெரியாவிடில் எதையும் அரைப்பது மிகக் கடினம். அப்படியே குழவியை நிற்க வைத்து ஒரு கையால் சுற்றிக் கொண்டே, அரைத்த இஞ்சியை வழித்தெடுத்து சேர்க்க வேண்டும். பிறகு அதை ஓரம் வைத்து மிச்சம் மீதம் அம்மியில் சேர்ந்திருக்கும் இஞ்சியை வழிக்க வேண்டும்.
அதை அம்மாவிடம் கொடுக்கும்போது கண்களால் சொல்லும் தேங்க்ஸ் இப்போது 5000 ரூபாய் பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தாலும் கிடைப்பதில்லை. அந்த நாள் மதிய உணவு முடிந்ததும் அப்படியே நானும் தம்பிகளும் மண்டிக்குளத்தில் நடக்கும் சைக்கிள் ரேஸ் காண செல்வோம். மண்டிக்குளம் என்றால் ரொம்ப தூரமெல்லாம் இல்லை... ரொம்ப பக்கம் தான். அந்த ரேஸ் சமயத்தில் தம்பிகள் ஐஸ் சாப்பிடுவார்கள்.. குச்சி ஐஸ் சாப்பிட ஆசைப்பட்டாலும் பால் ஐஸ் தான் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பது அத்தா ஆணை. 25 பைசா சேமியா ஐஸை விட 50 பைசா பால் ஐஸ் எப்போதும் சுவையாய் இருந்ததில்லை என அத்தாவிடம் எப்படிச் சொல்லி புரியவைப்பது?
இப்படி ருசியான பெருநாளை அனுபவித்து வீட்டிற்கு வந்து நிம்மதியாக படுக்கும்போது ஏதோ ஒன்றை சாதித்ததாக மனம் சந்தோசப்படும். இரவு நிம்மதியான உறக்கம் வரும். அத்தோடு பெருநாள் முடிந்து போகும்.
அந்த நாள்கள் இப்போதும் மனதில் ஆழமாய் பதிந்திருக்கின்றன...
இப்போதும் பெருநாள்கள் வந்து போகின்றன மற்றுமொரு நாளாக..
திங்கள், 22 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
13 கருத்துகள்:
நெகிழ்ச்சியான பதிவு சுபைர் ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்...அத்தவுக்கும் சேர்த்து.
நன்றி அண்ணே...
//புதினா சட்னியுடன் ஆவிபரக்க இட்லி ரெடியாக இருக்கும். அதில் ஒரு ஏழு எட்டு தின்றால் கொஞ்சம் இனிப்பு அம்மா செய்து வைத்திருப்பார்கள். //
எங்க பக்கமெல்லாம் மட்டன் குழம்பு, பரோட்டா, இடியாப்பம், வட்லாப்பம், கடப்பாசி, சேமியா பாயாசம் இருக்கும்
அருமையான பதிவு, இப்போவெல்லாம் பெருநாளும் மற்ற நாள் மாதிரிதான் போகின்றது
பெருநாள் வாழ்த்துக்கள்..
மலரும் நினைவுகள் அருமை. ’தவமாய் தவமிருந்தாக’ இருந்தது பதிவு :-) அத்தாவை பற்றி சொல்லிய அளவுக்கு அம்மாவை பற்றி சொல்லவில்லை. என்னதான் சொல்லுங்க இந்த அளவு மனைவிக்காக உருக முடியாது :-))
நன்றி மாலிக் அண்ணே...
நன்றி ஜெஸிலாக்கா...26 வருசம் அம்மா அத்தா கூட இருந்தா மாதிரி மனைவி கூட இருந்தா உருகலாம் :))
என்னது, பெருநாளும் அதுவுமா காலையிலேயே புதினாச் சட்னியா? மட்டன் சாப்பிடலன்னா பரக்கத் எப்படி வரும்? ;-)))))
ஆரத்தி அரசியல் - நல்லாருக்கு;
அம்மி அரைப்பதென்பதே ஒரு தனிக்கலை. அது கைவருவதற்குள் நான் பட்ட பாடு அப்போ... அரைப்பதைவிட, அம்மி கழுவும் நீர் கீழே சிந்தாமல் பாத்திரத்தில் சேகரிப்பதுதான் மிகச் சிரமம். :-)
இன்றைய வீடுகளின் அட்டாச்ட் பாத்ரூம்களுக்கும் ஃபிளாஷ்பேக் இருக்குது போல!!
வாங்கும் சக்தி அதிகரித்ததே இன்றைய ‘பெருநாளும் மற்றொரு நாளாக’ மாறிவிட்டதற்கு ஒரு காரணம் எனலாம்.
ஹுஸைனம்மா...
காலைல வீட்டில மாட்டுக்கு தீவனம் வச்சிட்டு மத்த வேலை செய்யவே அம்மாவுக்கு நேரம் சரியா இருக்கும். வீட்ல பெண் குழந்தை கடைசி ஆளு... அதனால வேலை அம்மா மட்டும் தான் செய்யணும்.. அதனால தான் புதினா சட்னி... :)
அம்மி கழுவுற தண்ணியை இன்னைக்கு வரை கீழ சிந்தாம அள்ளுனதில்ல... :))
வாங்கும் சக்தியையும் சொல்லலாம். ஆனாலும் இயந்திரத்தனமான வாழ்வையே குறை சொல்வேன்.. :)
//இதற்காகவே இப்போது கட்டிய புது வீட்டில் ஆறு அறைகளுக்கும் அட்டாச்டு பாத்ரூம் வைத்து கட்டினேன். :)
//
அட ஆக்கங்கெட்ட கூவ பேசாம ஆறு வாளி வாங்கியிருந்தா இவ்வளோ செலவு மிச்சம் செஞ்சிருக்கலாமே மச்சி!
மச்சி... உன்னா மாதிரி அட்வைஸ் பண்ண ஆள் இல்லையேடா :))
//அதில் காசு போட வேண்டுமாம். நான் அந்த 10 ரூபாயை அப்படியே போட்டு விடுவேன். //
பெரிய படையப்பா சிவாஜி சொத்தை எல்லாம் தம்பி மணிவன்னனுக்கு எழுதிவைக்கிற மாதிரி சீன போடுறீயேடா....மொத்தமா அப்படியே அஞ்சரைபெட்டியில் இருந்து லவட்டிவிடுவது எங்களுக்கு தெரியாதா...
ஹா ஹா ஹா... மச்சி... அதெல்லாம் தொழில் ரகசியம்டா... பதிவுல எழுதினா இமேஜ் டேமேஜ் ஆகிடும்ல... :))
நல்ல பதிவு ... அருமையான நினைவுகள் ... தீபாவளிக்கு, புதிய துணி வாங்கும் பொழுது , நான் பனியனும் ஜட்டியும் புதிது வாங்குவதை... இன்று வரை என் மனைவியின் கிண்டல் தொடர்கிறது !!!!
நன்றி சுந்தர் ராமன் சார்... :)
கருத்துரையிடுக