செவ்வாய், 23 நவம்பர், 2010

இலக்கியவியாதி (அ) மொக்கை இலக்கியம்

ஏதாவது எழுதியாக வேண்டுமென்ற உத்வேகத்தில் அமரும்போது இரவு 11 மணி. நள்ளிரவு தான் பெரிய பெரிய வெற்றியாளர்கள் பணி செய்ய சிறந்ததாம். ஏ.ஆர்.ரஹ்மான் முதல் பெரிய அளவில் பெயர் பெற்றவர்கள் இரவில் தான் தமது பணியை செவ்வனே செய்யமுடியும் என்ற கருத்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இப்போது படித்துக்கொண்டிருக்கும் வருங்கால சாகித்ய அகாதெமி எழுத்தாளனும்..மரியாதை... மரியாதை.. எழுத்தாளரும் அதே எண்ணம் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை.

என்ன எழுத வேண்டும் என்ற எண்ணம் இல்லாத போதும் ஏதாவது எழுத வேண்டும் என்ற உத்வேகம் இருக்கிறது. எழுத்து என்பது பிரசவம் போன்றதாம். எங்கேயோ படித்திருக்கிறேன். எழுத ஆரம்பிக்கும் போது அடிவயிற்றில் ஒரு இறுக்கம் உருவாகி ஓய்வு அறை (பாத்ரூம்னு சொல்லலாம் தான்.. ஆனால் சாகித்ய அகாதமி அளவுக்கு நீங்கள் இன்னும் பழகவில்லை என நினைக்கிறேன்) செல்ல எண்ணம் உருவாகும். ஒரு பதிவு எழுதும் முன் ஓய்வு அறை போய் வந்தாலும் இப்போதெல்லாம் அடிக்கடி இந்த வயிறு இறுக்கம் தீர்ந்து போவதில்லை. கலைத்தாகம் இருப்பதால் மலச்சிக்கல் போல் எழுத்துச்சிக்கல் உருவாகி இருக்கலாம் என்ற எண்ணம்.

என்ன எழுத ஆரம்பித்தேன் என்றே மறந்துவிட்டேன். உங்களிடம் பேசிக்கொண்டிருத்தலில் இருத்தலின் இல்லாமை காலவெளியின் நீட்சியாக போய்க்கொண்டே இருக்கிறது. உலகமும் ஒரு நாள் அழியுமாமே?? காலம் என்பதே காலை, மாலை என சூரியனைக்கொண்டு கணக்கிடப்படுவதால் இன்னும் சுமார் 10000 ஆண்டுகளில் சூரியன் இல்லாது போகும் நாட்களில் காலமும் இல்லாது போகுமல்லவா?? இந்த சிந்தனையை காபிரைட் வாங்கி வைக்க வேண்டும். யார் யாரோ கதைகளை சுட்டு படம் எடுக்கிறார்களாம். எனக்கு இந்த திரைப்படங்கள் என்றாலே ஒவ்வாமை இருக்கிறது. அறுபது வயது ஆண் இருபது வயது பெண்ணுடன் கொஞ்சிக் குலவுகிறார். ஏன் இருபது வயதில் ஆண்களே இல்லையா?? அல்லது இருபது வயது பெண்களுக்கு இருபது வயது ஆண்களைப் பிடிப்பதில்லையா? உளவியல் ரீதியாக தன்னை விட வயது அதிகமானவர்கள் மீதே ஈர்ப்பு இருக்கும் என்று ஏதோ ஒரு கட்டுரையில் படித்தேன். அது ஆங்கிலத்தில் இருந்ததால் நான் தவறாகக் கூட புரிந்திருக்கலாம். நமது இலக்கு சாகித்ய அகாதமி. ஆங்கிலம் அல்ல.

என்ன எழுத வருகிறேன் என்றே தெரியவில்லை. நேற்று அம்மா என்னை கருப்பசாமி கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். அந்த பூசாரி கடந்தகால எச்சங்களின் மிச்சங்களாக கடாமீசை வைத்திருந்தார். தற்போதைய பரிணாம வளர்ச்சியினால் இனி வரும் தலைமுறைக்கு தேவையில்லா இடங்களில் மயிர் முளைக்கப் போவதில்லை. ஆனால் நான் ஏதும் சொன்னால் அவர் ஏதாவது சொல்வார். ஆனால் அந்த மீசை அழகு. அவர் ஏதோ ஜெபித்த படி..ஜெபித்த என்றால் கிறிஸ்துவ பிரார்த்தனையோ? இதையும் ஆராய்ந்து எழுத வேண்டும்.. நமக்கெதுக்கு வம்பு..சபித்த படி வேப்பிலையால் என்னை அடித்தார். அம்மா என்னவோ சொன்னார்... கவிதை எழுதியே செத்துப்போன கவிஞன் ஒருவனின் ஆவி பிடித்திருப்பதாக. கவிதை எழுதுகிறேன் என்பவனை எல்லாம் சாருவிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். அட்லீஸ்ட் ஆசிப் மீரானிடமாவது.

என்ன பேசிக் கொண்டிருந்தோம்? ஆ... ம்ம்ம்.. என்னை பூசாரி நாலு சாத்தி சாத்தி திருநீறு இட்டார். அம்மா அவருக்கு நூறு ரூபாய் கொடுத்தார். உண்மையில் பணம் தான் பேயாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரையும் எப்படி மாற்றிவிடுகிறது?. மூன்றாம் தெரு மல்லிகா இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து வரும்போது தான் வீட்டை விட்டு வெளியே வருகிறாள். எதற்கு என்று எனக்கென்ன தெரியும்?? நான் பேசிக்கொண்டிருந்தது பணம் பற்றி. அனேகமாக அந்தப் பணம் தான் எனக்கு பேய் என்று இந்த பூசாரியை சொல்ல வைத்திருக்கிறது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. குவாட்டரும், தண்ணி பாக்கெட்டுமே ஐம்பது ரூபாய் ஆகிவிடுகிறது. மிச்ச பாக்கியையும் தருவதில்லை டாஸ்மாக் ஆட்கள். படித்த ஆட்களை அரசு வேலையில் இருத்தியதால், இப்போதெல்லாம் சரக்கு கலப்படம் மிக லாவகமாக நடக்கிறது. நாம் சொன்னால் நீயும் குடிப்பியா? என்கிறார்கள். ஒரு குவாட்டர் அடித்தாலே வாந்தி எடுக்கும் எதிர்வீட்டு சண்முகம் இப்போதெல்லாம் இரண்டு குவாட்டருக்கும் போதை இல்லை என்கிறான். அனேகமாக அவனுக்குப் பழகி இருக்கலாம். அல்லது நான் சொன்னதுபோல் கலப்படமாக இருக்கலாம். யாருக்குத் தெரியும்?

ஆங்.. எங்க விட்டேன்?? அப்படி பூசாரி என்னைச் சாத்து சாத்தென்று சாத்தியதால் இப்போது நன்றாக உறங்குவதாக அம்மா சொல்லிக்கொண்டிருந்தால் வெளியே ஒரு ஆயாவிடம். அனேகமாக பால்கார ஆயாவாக இருக்கும். இரவு 11 மணிக்கு எந்த ஆயா வருவாள்?? அனேகமாக அம்மாவும் என்னைப்போல் கதைசொல்லியாகிவிட்டாளா?? வெளியே போய் பார்க்கலாம் தான்.. ஆனால் நான் உங்களுடன் பேசுவது நின்றுவிடுமே? ம்.. அம்மா சத்தம் நின்றுவிட்டது.

நாளைக்கு அழுவாள் அம்மா... என்ன செய்ய? எனக்குத்தான் இலக்கியத்தில் பெரிய ஆளாக வர வேண்டுமென்ற ஆசை உண்டே..

10 கருத்துகள்:

எல் கே சொன்னது…

மரண மொக்கை

அகமது சுபைர் சொன்னது…

நன்றி எல்.கே.. :)

Prathap Kumar S. சொன்னது…

அய்யா தேவுடு...வேணாம்யா வுட்ரு... இதுக்கு லின்க்வேற கொடுக்கிறியாக்கும்...

கல்யாணம் ஆனப்புறம்அதிகமா எழுத ஆரம்பிச்சுட்ட... அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்...

அகமது சுபைர் சொன்னது…

ப்ரதாப்,

அப்படில்லாம் விட்ர முடியாது :))

Jazeela சொன்னது…

இந்த மாதிரி பதிவ படிச்சி சபிச்சா அறை எண் 305ல ஐடி மக்களின் கதி மாதிரி ஆகிவிடுமாம் விரல்கள் ஜாக்கிரதை.

அகமது சுபைர் சொன்னது…

ஜெஸிலாக்கா...

வெற்றி வெற்றி வெற்றி... நானும் பிரபலம் ஆக ஆரம்பிச்சிட்டேன் :))

Unknown சொன்னது…

//அறுபது வயது ஆண் இருபது வயது பெண்ணுடன் கொஞ்சிக் குலவுகிறார். ஏன் இருபது வயதில் ஆண்களே இல்லையா??//
என்ன கேள்வி இது? :))

அகமது சுபைர் சொன்னது…

சுல்தான் பாய்... இருபது வயது ஆண்களை ஏன் நடிப்பதற்கு அழைப்பதில்லை என்ற மீனிங்க்ல எடுத்தா சாதாரண வாசகர். வேற மீனிங்க்ல எடுத்த பின் நவீனத்துவ வாசகர். நீங்க எப்படி??

Unknown சொன்னது…

என்ன இப்படி? என்று கேட்டால்........ நம்மையே பின் நவீனத்துவ வாதியாக்கிட்டீங்களே அகமது சுபைர் :(

அகமது சுபைர் சொன்னது…

விடுங்க சுல்தான் பாய்... எத்தனையோ பாத்திட்டோம்.. இத விடவா?? :))