செவ்வாய், 7 டிசம்பர், 2010

உம்மம்மா - அம்மாவின் அம்மா - சிறுகதை

ரூமுக்குள்ள தூங்கிட்டிருந்த உம்மம்மா மவுத்தாப்போச்சாம். என்னடா இது... இன்னைக்கு ஆபிஸ்க்கு ஜெனரல் மேனேஜர் வருவாரு. அந்த மனுசன் ஒன்னு தப்பு பண்ணா அதை நாலா சொல்லுவார். அவரு ஆபிஸுக்கு வரும்போது நாம போகாட்டி நல்லா இருக்காது. இந்த உம்மம்மா முன்னமே எறந்துபோச்சுன்னு ஒரு வாரம் லீவு போட்டுட்டு டெல்லி ஆக்ரான்னு சுத்தி வந்தாச்சு. இனி அதே காரணத்த சொல்ல முடியாது.

உம்மம்மா ஒன்னும் பெரிய பாசக்காரி இல்ல... அம்மா அடிக்கடி சொல்லும்... அவுக அக்கா புள்ளைகளை கையில தூக்கி வச்சு கொஞ்சுமாம். எங்களை கொஞ்சினதே இல்லன்னு. அதனால அம்மாவுக்கு ரொம்ப கோவம் அது மேல. ஆனா அம்மாவுக்கு உம்மம்மாவை ரொம்ப புடிக்கும். உங்களை எல்லாம் இப்ப சமாளிக்கிறேன்னா அது இவங்களால தாண்டான்னு அம்மா சொல்லும்போது என்ன சொல்றதுன்னு தெரியாது.


அம்மா போன்ல சொல்லும்போது அழுத அழுகைல எனக்கும் அழுகை வருது. ஆனா இனி பஸ் புடிச்சு ஊருக்குப் போறதுக்கு முன்னால உம்மம்மாவை அடக்கம் பண்ணிடுவாங்க.. ஊர்ல பெருசுங்க கல்யாணச் சாவுன்னு பேசிக்கிட்டு இருக்கும்.. உம்மம்மா எங்ககிட்ட பாசத்தைக் காட்டாட்டியும் அது அம்மாவுக்கு அம்மா தானே... என்ன செய்யுறது... உம்மம்மா சொந்தக் காரங்க ஊர்லேர்ந்து வர எப்படியும் ஆறேழு மணி நேரமாகும். நாம இன்னும் ஒரு ரெண்டு மூனு மணிக்குள்ள போயிடலாம்னு ஒரு எண்ணம் வந்துச்சு.

அன்னிக்கு நான் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு போனேன். நான் போற வரைக்கும் அவங்க மூத்த மக வரல. அதனால வீட்டில கசபு மாத்தி பென்ச்ல போட்டிருந்தாங்க. அப்பப்ப அந்த உடம்பை தூக்கி பவுடர் போட்டுட்டு இருந்தாங்க. அவுகவுக வேலையைப் பாத்துக்கிட்டு அப்பப்ப டீ குடிச்சுக்கிட்டு இருந்தாங்க...

அப்பத்தான் அம்மாவ கவனிச்சேன். அழுதழுது சோர்ந்து போன கண்கள். மொதநாள் ராத்திரி அம்மாவைக் கூப்பிட்டு பக்கத்துல உக்கார வச்சி கொஞ்சம் நேரம் பேசிக்கிட்டு இருந்துச்சாம். எனக்கு நேரம் வந்திருச்சுப்பா.. நான் எப்பப் பார்த்தாலும் உன் அக்கா புள்ளையை கொஞ்சுறேன்னு உனக்கு கோவம் இருந்திருக்கும். ஆனா உன் அக்கா பெத்தது பொம்பளைப் புள்ளை. அதும் இல்லாம அவ ரொம்ப கஷ்டப்படுறா. நீ பெத்ததெல்லாம் ஆம்பிளைப் புள்ளைக.. அதுகளைப் படிக்க வச்சிருக்க. அவனுக ஊரு தேசம்னு போறவனுக. அவனுகளுக்கு நான் பாசத்தைக் காட்டி வளத்தா, பின்னால நான் இல்லாத நாளு ரொம்ப கஷ்டமா இருக்கும்டா... அதனாலத் தான் அப்படி இருந்தேன்.. தப்பா நினைக்காதடா செல்லம்... எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவனுக இங்கல்லாம் வர வேணாம்னு சொல்லிடு. இப்படி நான் இருக்குறதால அவனுகள வர வேணாம்னு சொன்னா அவனுகளும் கெழவி தானே.. போனா போகட்டும்னு இருந்திடுவாங்க...இதெல்லாம் அத்தா சொல்லச் சொல்ல அம்மாவும் பக்கத்தில உக்காந்து அழுதுக்கிட்டு இருந்தாங்க...

அத்தா மட்டும் தான் எதுவுமே சாப்பிடல... மனுசன் கோவக்காரரா இருந்தாலும் பாசக்காரருன்னு அப்பத்தான் எனக்குத் தெரியும். அப்புறம் கடைக்குப் போய் வெள்ளைத் துணி, அத்தர், பன்னீர், சவுக்கு மரம், ஓலைப் பாய், பிளேடு, சந்தனம், மல்லிகைப் பூ எல்லாம் வாங்கிட்டு, குழி வெட்டுறவருக்கு சொல்லிட்டு வந்தோம். அத்தாவை வர வேணாம்னு சொல்லிட்டேன். ஆனா மனுசன் ரொம்ப கஷ்டப்பட்டார். உம்மம்மா மேல இருக்குற கோவத்துல ஏதாவது கொறை வச்சிடுவோமோன்னு பயந்தார். நல்ல படியா எல்லாம் செய்யணும்னு சொன்னார். கூடவே வந்தார்.

உடம்பை குளிப்பாட்ட பொம்பளைக தூக்கிட்டுப் போனாங்க. அம்மா தான் குளிப்பாட்டுனாங்களாம். பெரியம்மா உடுப்பு மாத்துக்கு எதும் கொண்டு வரலன்னு உம்மம்மா பக்கமே போகலையாம். உம்மம்மாவைக் குளிப்பாட்டி கஃபன் துணி போட்டு கொண்டு வந்தாங்க. உம்மம்மாவை அந்தக் கோலத்துல பார்க்க முடியல.. மனுஷி பட்ட கஷ்டம்லாம் கண்ணுக்குள்ள வந்து போச்சு. ஒரு வழியா உம்மம்மாவை சந்தாக்குல வச்சு பள்ளி வாசலுக்கு கொண்டு போக தூக்கினதும் அம்மா அழுதாங்க ஒரு அழுகை. ஒப்பாரி மாதிரி ஒரு அழுகை..

தங்கமா என்னை வளத்த
தங்கமே எங்க போன
மக்களைப் பெத்தவ உன்னை
மண்ணு திங்க போகுதடி

அப்படின்னு ஒரு அழுகை... அப்படியே மனசு கனத்திடுச்சு. எல்லாம் முடிஞ்சு ஊருக்குப் போயிட்டேன்.

ஒரு ரெண்டு வருசத்துல எனக்கும் கல்யாணம் ஆச்சு..

அத்தா அம்மா பாத்து வச்ச கல்யாணம். அவ ரொம்ப பாசக்காரி. ரொம்ப சந்தோசமான வாழ்க்கை. ஆபிஸ்க்கு வந்து உடனே மிஸ்டு கால் கொடுக்கணும். ஒரு மணிக்கொருக்கா மெயில் அனுப்பணும். அப்பப்ப ஏதாவது கிஃப்ட் வேணும். வாரத்துல ஒரு நாள் சினிமா வேணும்.

மனசு முழுக்க சந்தோசம். அப்பப்ப சண்டைனு ப்ரமாதமான வாழ்க்கை. அப்பத்தான் ஒரு நா அந்த விசயத்தை சொன்னா. டாக்டரைப் பாக்கணும். கொஞ்சம் ஒரு மாதிரி இருக்குன்னு. அரக்க பரக்க அவளை டாக்ஸி பிடிச்சு கொண்டு போனா, என் பதட்டத்தைப் பார்த்து டாக்டர் சிரிக்கிறாங்க..

நான் அத்தாவாகப் போறேனாம். சொன்னதும் அவளை அங்கேயே விட்டுட்டு அடையார் ஆனந்த பவன்ல அஞ்சுகிலோ ஸ்வீட் வாங்கி ஆஸ்பத்திரி முழுக்க கொடுத்தேன். அப்புறம் அத்தா அம்மா கிட்ட சொன்னேன். எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம்.

எனக்கு ஆம்பிளைப் புள்ளை வேணும்னு அவ சொல்றா. எனக்கு பொம்பளைப் புள்ளை வேணும்னு நான் சொல்றேன். அதைச் செய்யாதே.. இதைச் செய்யாதே.. அதைத் தூக்காதே.. இதை எறக்காதேன்னு ஏக கெடுபுடி.. எல்லா சமையலும் நானே தான். அம்மணிக்கு ஏக சந்தோசம். எப்பவும் அவுக வீட்டுக்குப் போன் போட்டு மருந்து மாத்திரை பத்தின டீட்டெயிலெல்லாம் கேட்டுட்டு இருப்பா. அரசமரத்து வேரு, ஆலமரத்து விழுதுன்னு என்னென்னமோ மருந்து ஓடும்.

கொஞ்ச நாள்ல அவளுக்கு வளைகாப்புன்னு, அவளைக் கொண்டு போய் அவுக வீட்டுல விட்டுட்டு வந்தேன். மொத கொழந்தை பொறக்கப் போகும் நாளுக்காக நானும் அவளும் நாள் கணக்கு பார்க்கத் தொடங்கினோம். இன்னும் 4 நாள் இருக்கும்போது லீவு போட்டுட்டு கிளம்பிட்டேன். அவளை ஆஸ்பத்திரிக்குள்ள கொண்டு போகும் போது என் கையைப் பிடிச்சுொரு பார்வை பார்த்தா.. கண்ணோரத்தில ரெண்டு சொட்டுக் கண்ணீர். மனசு ரொம்ப வலிச்சது.

கொஞ்ச நேரத்தில நர்ஸ் ஒரு தேங்காப்பூ துண்டுல சுத்தின பஞ்சுப்பொதியைக் கொண்டு வந்தாங்க. அப்படியே கைல நான் வாங்கினது தான் தாமதம். அம்மா கொழந்தையை என்கைலேர்ந்து பறிச்சுக்கிட்டு, பொண்ணுன்னு தெரிஞ்சதும் என் அம்மா வந்திருக்காடா... அதே கண்ணு அதே மூக்குன்னு சொல்லிக்கிட்டு ஒரு அழுகை அழுதாங்க பாருங்க.. அது இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குது.

தங்கமா நான் வளக்க
தங்கமே வந்தாயோ
மக்களைப் பெத்தவ உன்னை
மறுபடியும் பாத்தேனே..
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
அருஞ்சொற்பொருள்:

1. மவுத் - இறப்பு
2. கசபு மாற்றுதல் - இறக்கும்போது அணிந்த உடையைக் கழட்டி வைத்து வேறு உடை அணிவித்தல்
3. கஃபன் - வெள்ளை நிறத்தில், தைக்காத துணி
4. சந்தாக்கு - இறந்த பின் உடலை எடுத்துச் செல்லும் பாடை வகை.

2 கருத்துகள்:

Vidhya Chandrasekaran சொன்னது…

சிம்பிளான கதை. சொன்ன விதம் ரொம்ப நல்லாருந்தது.

அகமது சுபைர் சொன்னது…

நன்றிங்க வித்யா....