சனி, 16 செப்டம்பர், 2006

லிஃப்ட் கொடுத்தவர்கள்.

காட்சி 1:
காலம்: கல்லூரியின் நான்காம் ஆண்டு 2003 ம் வருடம் நவம்பர் மாதம், சனிக்கிழமை.
இடம்: கல்லூரி விடுதி.

அதிகாலை சுப்ரபாதத்திற்கு பதிலாக நண்பனின் திட்டுக்களுடன் விடிந்தது பொழுது.

"மச்சான், இன்னக்கி எழுத்துத்தேர்வு, சீக்கிரம் கிளம்பு".
"நடு ராத்திரி 5:00 மணிக்கி ஏண்டா டிஸ்டர்ப் பண்றே?, த்ரிஷா கனவுடா..கெடுத்திடியே!"
"உன்னோட வாழ்க்கைக்காக சொன்னேன். எனக்கு என்ன? நீ தூங்கு!".
"நமக்கு மேல வகுப்பில 11 பேர் இருக்காங்க... நம்மலயா செலெக்ட் பண்ண போறாங்க"


சிறிது நேரம் கழித்து,
"மச்சான், மணி என்னடா?" - இது நான்.
"8:00 ஆக போகுது."
"என்னாது எட்டா? ஏண்டா எழுப்பலே?, நண்பனுக்கு ஹெல்ப் பண்ணவே மாட்டேங்கிறாங்க., நான் குளிச்சுட்டு வர்றேன், நீ சாப்பிடு, டெஸ்ட்க்கு போய்டாதே."
"சரி சரி. சீக்கிரம் வந்து தொலை"

காட்சி 2:
காலம்: அதே நாள் காலை 10 மணி
இடம்: எல்&டி அலுவலகம்.

"மச்சான், ப்ரிபேர் (Prepare) பண்ணிட்டியா?"
"பிட் அடிக்க தான் ப்ரிபேர் பண்ணணும், சொந்தமா எழுத ப்ரிபேர் தேவையில்லை. அதோ பார் டெஸ்ட் பேப்பர் எடுத்துட்டு வர்றாங்க" - இது நான்.

"Dear Friends, please fill up the friend page & until I say Don't Open next pages (நண்பர்களே! தங்களைப் பற்றிய விபரங்களை முதல் பக்கத்தில் எழுதிவிட்டு எனது அறிவிப்புக்காக காத்திருங்கள், அடுத்த பக்கங்களை திருப்பாதீர்கள்)" - அலுவலர்.

"மச்சான், கொல்றாங்கடா... பெரிய GATE exam மாதிரி.! (பொறியியல் மேற்படிப்புக்காக அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வு) "

"கேள்வி எப்படி இருக்கும்?"

பலவாறான எண்ணங்கள், பேச்சுகள்.

"மச்சான், டெஸ்ட் முடிஞ்சாச்சு. சாப்பாடு?"
"ஆபிசர் வர்றார்டா.. கேட்டுறப்போறார், மெதுவா பேசு"

"Results will be announced later in the evening. Company has arranged lunch Downstairs"
(முடிவுகள் மாலை அறிவிக்கப்படும், மதிய உணவு கீழே தயாராக இருக்கிறது) - இது அலுவலர்.

"அவர் கேட்டுட்டார்னு நினைக்கிறேன். எது எப்படியோ, சாமி சோறு போடுது. டெஸ்ட்ல பெயிலானாலும் பரவாயில்ல, நல்ல சாப்பாடு."

காட்சி 3:
காலம்: அதே நாள் மாலை 4 மணி
இடம்: எல்&டி அலுவலகம்.

"கிரசண்ட் கல்லூரி, சிவில் பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்,
1. ஜுக்னு
2. ஐனுல்"

"மச்சான், எல்லா காலேஜ்லயும் இரண்டு பேர்தான் செலெக்ட் பண்றாங்கடா, நம்ம காலேஜ்ல ரெண்டும் பொண்ணுங்க தாண்டா..."

"3. ராம் ப்ரசாத்"

"என்னடா மச்சான், நம்ம அய்யர் பேர் வரல"

"4. அரவிந்த் ஸ்ரீனிவாஸ்"

"முடிஞ்சது, அய்யர் பேர் வந்தாச்சு. நமக்கு அவ்ளோ தான்"

"5. அஹமது சுபைரா"

"சார் அது சுபைரா இல்ல சார், சுபைர் A" - நண்பன்

வானில் சிறகின்றி பறக்கிறேன்.

வகுப்பில் 12 வது ரேங்க் எடுத்தாலும், செலெக்ட் ஆன டாப் 5 பேர்ல நானும் ஒருத்தன்.

"O.K. Selected People wait here to attend the GD now."

(தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் காத்திருக்கவும், இப்போது GD நடக்க இருக்கிறது.)

"மச்சான், 5 மணிக்கு எழுப்பினா எந்திரிக்கல.. ஆனா தூங்கிக்கிட்டே ஜெயிச்சுட்ட"
"தேங்க்ஸ்டா..."
"ஆல் த பெஸ்ட்"

காட்சி 4:
காலம்: அதே நாள் மாலை 5 மணி
இடம்: L&T அலுவலகம்.

"GDனா என்னடா?" - இது நான்.
"Group Discussion, அது அரட்டை அரங்கம் மாதிரிடா..ஆனால் இங்கிலீஷ்ல பேசணும்"- இது என் நண்பன் பாலாஜி மின்னியல் துறை.
"நல்லதா போச்சு, தமிழ்னா பரவாயில்ல...(கவனிக்கவும் பரவாயில்ல..ஏன்னா நம்ம தமிழ் அதுமாதிரி..)நாம இங்கிலீஷ்ல பேசினா எல்லாம் ஓடிடுவாங்களேடா..."
"பரவாயில்ல. முயற்சி பண்ணுவோம்..."

காட்சி 5:
காலம்: அதே நாள் இரவு 10 மணி
இடம்: விடுதி

"மச்சான் காலைல சீக்கிரம் இன்டர்வியூ போகணும், எழுப்பி விட்டுடுடா.." - இது நான்.
"நான் பெயிலாயிட்டேன், எனக்கு மனசு கஷ்டமா இருக்கு...உன்ன எழுப்ப முடியாது"
"டே..உனக்கு முத்து குளிக்கிறது தெரியுமா?"
"இப்ப எதுக்குடா அத கேட்குற...?"
"தெரியுமா...இல்லயா?"
"தெரியாது."
"அந்த முத்து குளிக்கிறவன் இடுப்பில ஒரு கயிறு கட்டிக்கிட்டு, மறுமுனையை ஒருத்தன்கிட்ட கொடுத்துட்டு உள்ள குதிப்பான். அந்த ஒருத்தன் யாரு தெரியுமா, கடல்ல குதிக்கிறவனோட மச்சான்."
"அதுக்கென்ன இப்போ..."
"நான் உன்ன மச்சான்னு கூப்பிடுறது விளையாட்டுக்கு இல்லடா...உனக்கு அக்கா, தங்கச்சி யாரும் இல்லன்னு எனக்கு தெரியும், ஆனாலும் நான் யார கட்டிக்கிட்டாலும் அவ உனக்கு தங்கச்சி தானடா..., நான் கடல்ல முத்து குளிக்க போற மாதிரி நினச்சுக்கோ..காலைல எந்திரிக்கணும்..அப்புறம் உன்னோட இஷ்டம்.."
"நெஞ்ச நக்கிட்ட...போய் தூங்கு... நான் எழுப்பி விடுறேன்."

மற்றொரு நண்பன்,
"டே! அவன இவ்வளவு சமாதானம் பண்றதுக்கு ஒரு அலாரம் வச்சா போதுமே.."
"போடா லூஸு...அவன் முகத்தில முழிச்சதால தான் நான் டெஸ்ட்ல பாசானேன். அவன் முகத்தில முழிச்சாதான் இன்டெர்வியூ நல்லா பண்ண முடியும்."

காட்சி 6:
காலம்: அடுத்த நாள் காலை 8 மணி
இடம்: விடுதி

"மச்சான், கிளம்பு...வண்டி எடுத்துட்டு வரவா?" - என் நண்பன்.
"இல்லடா... நான் பஸ்ஸிலயே போய்க்கிறேன்"
"10 மணிக்கு இன்டர்வியூ, வெறும் வயித்தோட போகாதே, கிண்டி சங்கீதால ஏதாவது சாப்பிட்டுட்டு போ...!"
"சரிடா...மச்சான், ஷூ இல்லடா...இப்ப என்ன பண்றது?"
"எல்லாம் கடைசி நேரத்தில கேளு, நான் அரேஞ்ச் பண்றேன், நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா."
"மச்சான், நல்ல சட்டை கூட இல்லடா..."
"சரி என் சட்டையை அயன் பண்ணி வைக்கிறேன். நீ இன்டர்வியூ போறதுக்கு நான் தான் கஷ்டப்படுறேன்"

காட்சி 7:
காலம்: அடுத்த நாள் காலை 9 மணி
இடம்: வண்டலூர் மிருகக்காட்சி சாலை பேருந்து நிறுத்தம்.

"PP18 வர்ற மாதிரி தெரியுது" - இது நான்.
"ஆமா மச்சான், சில்லறை வச்சிருக்கியா, கண்டக்டர் கத்துவாரு."
"ஹ்ம். இருக்கு"
"கூட்டமா இருக்கு, வண்டி எடுத்துட்டு வரட்டுமா?"
"இல்லடா..நீ கஷ்டப்படாதே..பார்த்துக்கலாம்"
"கண்டக்டர் சார், மச்சான பத்திரமா கொண்டு போய் சேர்த்திடுங்க." - நண்பன்
"ஆமா இவர் ஒருத்தர்க்கு மட்டும் தான் மச்சான் இருக்காங்களா...இங்க எல்லாரும் இன்னொருத்தங்களுக்கு மச்சான் தாம்லே.."-கண்டக்டர்
"இல்ல சார், பையன் இன்டர்வியூக்கு போறான், அதான்..."
"சரி ரைட்"
"ஆல் த பெஸ்ட் டா.."

கண்டக்டரின் வசனங்கள்...
"யாருப்பா அது, படியில தொங்கிட்டு வர்றது...உள்ள வாப்பா.."
"ராஜா, கீழ விழணும்னு நினெச்சா இன்னொரு வண்டில விழுடா...என் தாலிய அறுக்காதே"

தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் நிறுத்தங்கள் கடந்தன...

"ஐய்யய்யோ...வண்டிய நிறுத்துங்க...படில தொங்கிட்டிருந்த பய விழுந்துட்டான்"
"அவன கண்டக்டர் அப்பவே சொன்னார். அவன் கேட்கல...பெரிய அடியா?"
"இல்லங்க...தப்பிச்சிட்டான்.."
"இந்த அரசாங்கம் ஏன் நிறைய வண்டி விட மாட்டேங்கிதோ.."

எல்லோரும் அவரவர் கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்க,
எதிர் சாரியில்
நின்று கொண்டிருக்கும்
தேவதை என் கருத்துக்களை
தின்று கொண்டிருந்தாள்.

அசரீரி குரல் கேட்டு விழித்தெழுந்தேன். "அடங்குடா..இன்னக்கி உனக்கு இன்டர்வியூ"

கற்பனை சிறகடிக்கும் நேரங்களில் எப்படியோ தடங்கள்கள் தவறாமல் வந்துவிடுகிறது.

"என்னப்பா..வண்டி போகலே...கீழ விழுந்தவன் தான் வந்து ஏறிட்டான்ல...போலாம் ரைட்..."
"அண்ணே வண்டி ப்ரேக் டவ்ன். இனி போகாது"

"மணி என்ன ஆச்சு?" - இது நான்.
"09:40 ஆச்சு" - யாரோ.

சே! ஒழுங்கா கிளம்பி இருந்தா எந்த பிரச்னையும் இல்ல...இப்ப என்ன பண்றது. லிஃப்ட் கிடைக்குமா..பலவாறான எண்ணங்கள். ஏர்போர்ட் காம்பௌண்டுக்கு வெளியில் கால் கடுக்க லிஃப்ட் கேட்டேன்.

"தம்பி, எங்க போகணும்." - ஒரு பைக் அருகில் நின்றது.
"நான் எல்&டி இன்டர்வியூ போகணும். பூந்தமல்லீ ரோட். என்ன கிண்டில விட்டுட்டீங்கன்னா, நான் ஷேர் ஆட்டோ பிடிச்சு போய்டுவென்"
"தம்பி நான் கோயம்பேடு போகணும் பா.."
"பரவாயில்ல.. ஏறிக்கோ. நான் ரவுண்டானால விட்டுர்றேன்."
"ரொம்ப நன்றிங்க.."
"என்ன படிக்கிறீங்க..."
"நான் சிவில் இன்ஜினியரிங் கடைசி வருசம், நீங்க எங்க சார் வேலை பார்க்கிறீங்க...?"
"நான் ஒரு சின்ன கம்பெனில சேல்ஸ்ல இருக்கேன், நான் கூட மெக்கானிக்கல் இன்ஜினியர் தான்"
"எல்&டில இன்டர்வியூக்கு கூப்பிட்டதே பெரிய விஷயம், பயமில்லாம இரு. உனக்கு தான் வேலை."
"ரொம்ப நன்றிங்க...சார் நீங்க கிண்டி பக்கம் போறீங்க"
"தெரியும்பா...எனக்கு உதவி பண்ண யாரும் இல்ல..உன்னய கிண்டில இறக்கி விட்டுர்றேன். நீயாவது நல்லாயிரு."

"எல்லாரும் லிஃப்ட் கொடுத்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில இறக்கி விட்டு விடுவார்கள். நீங்கள் என்னை உயர்த்தி விட்டிருக்கிறீர்கள். ரொம்ப தேங்க்ஸ்"

"பரவாயில்லப்பா..ஆல் த பெஸ்ட்".

பி.கு.:
இன்று அதே கம்பெனியில் வேளை கிடைத்து நல்ல நிலையில் இருக்கிறேன். அந்த முகம் தெரியாத நண்பர் கொடுத்த லிஃப்டும், முகம் தெரிந்த கல்லூரி நண்பன் கொடுத்த லிஃப்டும் தான், நான் சிறப்பாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், நன்றாக இருக்கிறேன் என்று சொல்ல வைத்தது.

"இதனை போட்டிக்கு அனுப்புவதின் முக்கிய நோக்கம் வெற்றி பெறுவதல்ல. நான் இன்னும் அவர்களை மறக்கவில்லை, அதைப் போல் உதவி பெற்ற யாரும் அதனை மறக்க மாட்டார்கள் என உலகிற்கு உணர்த்தவே.."

3 கருத்துகள்:

பாரதிய நவீன இளவரசன் சொன்னது…

//இதனை போட்டிக்கு அனுப்புவதின் முக்கிய நோக்கம் வெற்றி பெறுவதல்ல. நான் இன்னும் அவர்களை மறக்கவில்லை, அதைப் போல் உதவி பெற்ற யாரும் அதனை மறக்க மாட்டார்கள் என உலகிற்கு உணர்த்தவே//

உங்கள் நல்ல எண்ணம் பாராட்டுக்குறியது; மேம்மேலும் பல லிஃப்டுகள் வாழ்கையில் கிட்டட்டும்; வாழ்த்துக்கள்.

அன்பு நண்ப, இப்போது நான் சென்னையில். ரியாத் திரும்ப இன்னும் ஒரு மாதமாகும்....

ராம்குமார் அமுதன் சொன்னது…

கல்லூரி நண்பர்கள்.... உண்மையான சொந்தக்காரர்கள்.... அவர்கள் தோல்வியின் வருத்தத்திலும் நம்முடைய வெற்றிக்காக சந்தோஷப்படுபவர்கள்.....

எனக்கு வேலை கிடைத்த கேம்ப்பஸ் இன்டர்வியூ அன்றும் ஒரு நண்பன் காலை 4 மணிக்கு பேருந்து ஏற்றி விட்டது.... ஆப்ட்டிட்யூடல செலக்ட் ஆகாத நண்பர்கள் கூட "மச்சான் இன்டர்வியூல முடிச்சுட்டு வந்துருடா" என்று ஊக்கமாக சொன்னது.... இன்டர்வியூ முடிந்து கொஞ்ச நேரம் கழித்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட வேளையில் "1 canditate 4m GCE, Ram KuMar" என்று சொன்ன பொழுது அனைத்து நண்பர்களும் தலைக்கு மேல் தூக்கி கொண்டாடியது.... என்று எல்லாமே என் மனத்திரையிலும்....

நினைத்துப் பார்க்க வைத்தமைக்கு நன்றி....


வெற்றி பெற வாழ்த்துக்கள்.....

நெல்லை சிவா சொன்னது…

இது போன்ற அனுபவம் எனக்கும் உண்டு.யதார்த்தமான நடை. முதல் பாகத்தைச் சற்று சுருக்கியிருந்தீர்களானால், வேகம் கூடியிருக்குமோ?